ஜவ்வாது மலையில் நான் களப்பணி ஆற்றிய காலத்தில் தலைமை நாட்டாராக இருந்தவர் சின்னாண்டி கவுண்டர். காணமலை உச்சியில் உள்ள மல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். மலையாளிகளின் பூர்வீகம் பற்றி அவர் அறிந்தவற்றை பகிர்ந்து கொண்டார்.
எங்களுக்கு பூர்வீகம் காஞ்சிபுரம். "ஆதிகாலத்தில கடையமுதலி, பூபாளமுதலி, வரடியமுதலி-ன்னு பல பேர்கள்ல எங்களைக் கூப்புடுவாங்க. முதல்ல மலைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நிலப்பரப்புல தான் வாழ்ந்தோம். அசைவத்தைத் தொடமாட்டோம். ஒருமுறை, எங்களுக்கும் மலைமேல இருந்த வேடர்களுக்கும் சண்டை வந்திருச்சு. எங்க இனத்தைச் சேர்ந்த ஏழுபேரு சண்டைக்குப் போனாங்க. போகும்போது, அவங்கவங்க மனைவிமார்கிட்ட ஏழு நாளுக்குள்ள நாங்க வரலைன்னா தாலியக் கழட்டிட்டு சொல்லிட்டுப் வெள்ளைச்சேலை கட்டிக்கிங்கன்னு போயிட்டாங்க, சண்டையில ஜெயிச்சுட்டாங்க. ஆனா சண்டை முடிஞ்சு திரும்புற வழியில பயங்கர மழை. காட்டாறுகள்ல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுச்சு. அதனால ஏழுபேரும் திரும்புறதுக்கு காலதாமதம் ஆயிருச்சு. ஏழு நாளுக்குள்ள புருஷன்மாருங்க வராமப் போனதும் எங்க குல வழக்கப்படி ஏழு பொண்ணுங்களும் சடங்குகள் முடிச்சு வெள்ளைச்சேலை உடுத்திக்கிட்டாங்க . எட்டாவது நாளு, சண்டையில ஜெயிச்சு வீட்டுக்கு வந்த ஏழு பேரும் மனைவிமார்கள் வெள்ளைச்சேலை உடுத்தினதைப் பார்த்து மனசு வெறுத்துப்போயி திரும்பவும் காட்டுக்குள்ளயே போயிட்டாங்க. அங்கே வேடர் சாதிப்பொண்ணுங்க ஏழு பேரைப் பாத்து கல்யாணம கட்டிக்கிட்டாங்க. அப்படியே அசைவம் சாப்பிடுறது வேட்டையாடுறதுன்னு அவங்க பழக்க வழக்கங்களையுப் கத்துக்கிட்டாங்க. அப்படி அந்த ஏழு பேர் வழியில் பொறந்தவங்க தான் நாங்க..." என்கிறார் சின்னாண்டிக் கவுண்டர்.
புதன், 6 மே, 2026
கடைய முதலி,பூபாள முதலி,வரடிய முதலி
ஜவ்வாது மலை காராளர் மக்கள் பூர்வீகம்
(பேய் காட்டு பொங்கலாயி புத்தகத்திலிருந்து - வெ.நீலகண்டன்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக