ஜவ்வாது மலை,புதூர் நாடு,மொழலை சிவாலய கல்வெட்டுகள்
இக்கல்வெட்டுகள் சோழர், விஜய நகர மன்னர்களை பற்றியச் செய்திகளை பதிவு செய்கின்றன. கோவிலின் இடது பக்கத்தில் நான்கு கல்வெட்டுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன.
முதல் கல்வெட்டு :
கி.பி. 16-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர காலத்து மன்னன் கம்பண்ணனை பற்றி பதிவு உள்ளது. இவரை, மகாமண்டலேஸ்வரன் என்றும் கம்பண்ண உடையார் என்றும் இக்கல்வெட்டு கூறுகிறது.ஆடையூர் நாட்டில் நவிரமலை (ஜவ்வாதுமலை) இருந்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது.
இரண்டாவது கல்வெட்டு:
"ஆடையூர் நாட்டில் நவிரமலை நாடு இருந்ததைக் கூறுகிறது.
நாங்கள் சொல்லும் வரியை மட்டுமே, நவிரமலை (ஜவ்வாது மலை) மக்களிடம் இருந்து ஆடையூர் நாடாழ்வான் பெற வேண்டும். மீறி அதிகமான வரியை நவிரமலை மக்களிடம் இருந்து பெற்றால், நாடாழ்வான் என்னும் பட்டம் அம்மன்னனுக்குக் கிடையாது"
என்ற கருத்தை முன்வைக்கிறது. எனவே சோழர் காலத்தில் வரியை முறைப்படுத்தும் ஒரு கல்வெட்டாக இது உள்ளது.
(ஆடையூர் என்பது திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஒரு ஊராகும். அவ்வூரை தலைமையிடமாகக் கொண்டு ஆடையூர் நாடாழ்வான் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் புதூர்நாடு பகுதியை ஆட்சி செய்துள்ளார். ஆடையூர் நாடாழ்வானுக்கும் மேலே ஒரு அரசு இருந்திருக்கிறது.அது சோழ அரசாக இருக்கலாம்)
மூன்றாவது கல்வெட்டு:
இது சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டாகும்.
"குலோத்துங்கனின் 41-ம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதில் நிகரிலி சோழ மண்டலத்தில் உள்ள நவிரமலை(ஜவ்வாது மலை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு சிவன் கோவிலுக்குத் தானம் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது".
(கங்கர்களிடம் இருந்து ராஜராஜசோழன் இப்பகுதிகளை கைப்பற்றி உள்ளான். நிகரிலி என்பது ராஜராஜனுக்கு யாரும் நிகர் இல்லாதவர்கள் என்ற பொருளில் இம்மண்டலத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.நிகரிலி சோழமண்டலம் என்பது தர்மபுரி, கர்நாடகப் பகுதிகளில் உள்ள பெங்களூரு, கோலார், தும்கூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். சில கல்வெட்டுகள் ஜவ்வாதுமலை ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இங்கு நிகரிலி சோழ மண்டலம், தகடூர் (தர்மபுரி) நாட்டை குறிப்பிடுவதால் ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் நாட்டுப் பகுதி ஆடையூர் நாட்டிலும், தகடூர் நாட்டிலும் இடம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.)
நான்காவது கல்வெட்டு:
"ஆடையூர் நாட்டில் உள்ள நவிரமலை நாட்டில் வேளாண்மைச் செய்யும் பொருட்டு கூலி ஆளுக்கு 5 தர வேண்டும்".
அது பணமா, நெல் அளவா என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. இதன் மூலம் இம்மலை மக்களின் வேளாண் வாழ்வியல் பற்றிய குறிப்புகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
நன்றி:
தினத்தந்தி நாளிதழ்,
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க.மோகன்காந்தி,
காணி நிலம் மு.முனிசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக