வியாழன், 7 மே, 2026

ஜவ்வாதுமலை மலையாள முதலிகள்(மலையாளி)

ஜவ்வாதுமலை மலையாள முதலிகள்

ஆங்கிலேயர் காலம் முன்பு வரையில் ஜவ்வாது மலையின் பெயர் நவிரமலை ஆகும்.யானைகள் நிறைந்த மலை என்பதால் இந்த பெயர் வந்தது.

இந்த நவிரமலை(ஜவ்வாது மலை) சோழர் ஆட்சி காலத்தில் ஆடையூர் நாட்டில் இருந்துள்ளது.இன்றும் ஆடையூர் கிராமம் மலையின் அடிவாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது.

ஆடையூரை ஆட்சி செய்தவர்கள் ஆடையூர் நாடாழ்வான் என அழைக்கப்பட்டனர்.இந்த கரிகால ஆடையூர் நாடாழ்வான் குடும்பத்தில்,அரச பதவி காரணமாக அண்ணன் குடும்பத்திற்கும்,தம்பி குடும்பத்திற்கும் பகை ஏற்படுகிறது.தம்பி குடும்பத்தை ஊரை விட்டு வெளியேற்ற ஊர் மக்கள் சபதம் எடுக்கிறார்கள்.அதை கல்வெட்டி கொடுத்திருக்கிறார்கள்.

இந்த கல்வெட்டில் நவிரமலையில் (ஜவ்வாது மலை) உள்ள தென்பற்று நாடு (தென்மலை நாடு) மற்றும் வடமலை நாடு ஆகிய இரு மலைநாட்டு நாட்டவர்,நாட்டு முதலிகள்,மலையாள முதலிகள்,மலை அடிவாரத்து முதலிகள்,முதுநீர் மலையாளர்கள் மற்றும் மலையரண் முதலிகள் ஆகியோர் குறிக்கப்படுகின்றனர்.

சோழர் காலத்திலேயே இங்கு காராளர் இனத்தை சார்ந்த முதலியார்கள் குடியேறி இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.அதற்கு சான்றாக கார்காத்த வெள்ளாளர் குல பிரிவில் ஒன்றான பாக்குமுடையார் குல பிரிவு இன்றும் இந்த மக்களிடையே உள்ளது.

கல்வெட்டு:-

திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம்.
ரிஷபேசுவரர் கோயில் வடக்குக் கருவறைச் சுவர் 11 வரிக் கல்வெட்டு.

ஸ்வஸ்தி ஸ்ரீ ஸகாப்தம் ஆயிரத்து ஒரு நூற்று எண்பதின் மேல் செல்லாநின்ற ஸிம்ஹ நாயற்று அபரபக்ஷத்துத்ருதியையும் நா[ய]ற்றுக்கிழமையும் பெற்ற ரேவதி நாள் ஆடையூர்நாட்டு எலியூற்றுக்கு மேற்கும் நம் _ _ _ _ _ _ _ க்கு உள்ளுப்பட்ட நாடும் மலையும் அடிவாரமும் தென்கரை நாடும் மூவரை வென்றநல்லூற்கு மேற்கு சிற்றிங்கை[க்]குக் கிழக்கு உட்பட்ட 
 நாடும் மலையு முட்பட்ட நாடும் இந்த இரண்டு கரைநாட்டுக்கு உள்ளுப்பட்ட நாட்டவரும் நாட்டுநாயகஞ் செய்வார்களும் மன்றாடுவார்களும் பிள்ளைமுதலிகளும் [தனி]யாட்களும் படைநாயகஞ் செய்வார்களும் தனியாள் முதலிகளும் _ _ _ _ _ _ ம்பனாயகரு _ _ _ _ _ லிகளும் கூலிச்சேவகரும் கொந்த விச்சாதிரரும் நவிரமலைத் தென்பற்று நாட்டவரும் நாட்டுமுதலிகளும் வடமலைநாட்டவரும் நாட்டுமுதலிகளு முன்னுப்பட்ட
பலசனத்தோமும் அடிவாரத்து மலையாளரும் மலையாள முதலிகளும் முதுநீர்மலையாளரும் மலையரண்முதலிகளும் செட்டிகளும் வாணிகரும் கணக்கரும் கருமப்பெரும் பன்னாட்டவரும் பன்னாட்டு முதலிகளும் பொற்கொ[ற்ற] கைக்[கோளரும் ஆண்]டார்களும் சிவப்ராஹ்மணரும் மன்றாடிகளு முவச்சரும் தென்கரைநாட்டு வடதலைநாட்டவரும் தென்மலை நாட்டாரும் உட்பட்ட நாட்டவரும் தெல்ல _ _ _ _ _ புலவ[ரு]ம் பண்
ணுவாரும் நியாயத்தாரும் பன்னிரண்டு பணிமக்களு முள்ளிட்ட பெரும் வேடரும் பாணரும் பறையரும் பறைமுதலிகளும் செக்கிலியரும் இறுளரு முள்ளிட்ட அனைத்துச்சாதிகளு[ம்] அந்தணன் தலையாக அரிப்பான் கடையாக உள்ளுப்பட்ட அனை[த்}துச்சாதி[மா]ற்க்கு தெ _ _ _ _ ல்லாரும் __ _ _ _ _ [ண]ம் பண்ணினபடியாவது எங்கனாயனாரமட்டன் கரிகாலச்சோழ ஆடையூர் நாடாழ்வார் திருவிராச்சியம் பண்ணி எழுந்தருளி[இ]ருக்க. இவர் ஏவி அருளினபடியே இவர்கள் திருத்தம்பி
யார் நாயனார் நரசிங்கபன்மர் செய்து எழுந்தருளியிருக்க நாயனார் நரசிங்கபன்மர் மகன் பெரியுடையானும் இவன் தம்பி அர[சக]ணாயனும் கருப்புக்கட்டி நாயக்க[ருட]னே கூடி எங்கள் நாயன்[மாற்]கும் எங்களுக்கு[ம்] பகைதேடிக் கிழற்றுப்போயிருக்க இவர்கள் செய்த பிழையும் பொறுத்து இவர்கள் கூச்சந்தீ[ர்த்து]த் திருவெழுத்துச்சாத்தின திருமுகமும் குடுத்துச் செட்டிபுணை[ப]ட்டு அமைத்துவிட்ட இடத்து திருமுகமு மறுத்து எங்கள் நாயன்மாற்கு
ம் எங்களுக்கும் பகைதேடி வெறுப்பான பேருடனே கூடி எங்களுக்குப் பகையாகையினாலும். இவர்கள் பிரிதிகங்கர் வ[ழியி]லுள்ள பேராகையாலும் இப்பெரியுடையாநும் அரசகணாயனும் இவர்கள் [த]ம்பி அமட்டாழ்வானும் எங்கள் நாயன்மாற்கு இராசத்துரோகிகளும் நாட்டுத் துரோகிகளுமாய் இவர்கள் மூவரையும் பெண்டிழந்தான் கூட்டத்தில் ஒன்றாகப் புற[க்]கடித்தோம். பிரிதிகங்கர் மக்கள் எங்கள் நாயன்
மாற்குப் புகுந்த நம்பிராட்டியார் வயிற்றிற் பிறந்த பிள்ளைகளை அரசுக்குக் கொள்ளக் கடவதல்லவாகவும் அல்லாத பிள்ளைகள் பூர்வர்முறையிலே இராச்சியம் பண்ணப் கடவர்களாகவும் இம்மண்[ணு]ம் மலையு முள்ளதனையும் எங்கள் [ம]க்கள் மக்கள் வழிவழி இப்பெரியுடையானையும் அரச[கணா]யனையும் இவர்கடம்பி [அ]மட்டாழ்வாரையும், இவர்கள் மக்களி[ல்] [வழி]வழி ஒருத்தரையும் இம்மண்ணில் புகுத ஒட்டோம்
இவர்களுக்கு இடங்குடுப்பதுஞ் செய்யோம், இடங்குடுப்பாரோடு கூடுவதுஞ் செய்யோம். இவர்க[ள்] மூவரும் இம்மண்ணுக்கு உரியரென்று சொல்லு[த]ல் சொல்லுவ[ர்க்கு] இடங்குடுக்[கச்] செய்யக்கடவோமு மல்லோம். இவர்களுக்குக் கீழோலை விடுதல், இவர்களைக் கா[த்]தல், இவர்க[ள் _ _ _ _ _] சருடன் பேசுதல் செய்தாருண்டாகில் இராசத்துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையா[க ரு]த்தறுக்கக்கட _ _ _ _ கவும். இவர்கள் பெண்டுகளை மூக்கு மூலையுமறுத்துவிட
 க்கடவோமாகவும். இவர்கள் பக்கல் பெண்டுகள் போனவன் குடியாக இப்படி [ஆகச்] செய்யகடவோமாகவும் இவர்கள் பக்கல் போன பேரைப் ப[ணி]செய் மக்[களை] இட்டுக் கொன்றுபோடக் கடவோமா[க]வும் இப்படிக்கு நாங்க ளனைவரும் பூணை ஓலைப்பாடியு[ம் ந]ந்திமங்கலமும் உள்ளுப்பட்ட இந்த அனைத்து[ங்] _ _ _ _ _இப்படி நிலைமைக் _ _ _ _ள் ப்ரமாணமிட்டோம்.
இப்படி அற்றுமறவும் செய்திலோமாகில் வல்லவரையன் சத்தியம் தங்களம்மைக்குத் தானே மிணாளன் அசல வன்னியர் குதிரைக்குப் புல்லுப்பறிக்கி[ற] ப[றை]யற்கு எங்கள் பெண்டுகளைக் குடுத்தோமாகில் படுக்க[த] ஒலைப்பாடிக்குத் தப்பினாருண்டாகில் செயங்கொண்ட நாச்சியார் கோயிலில் செவ்வாய்க்கிழமையில் பட்ட[ஆ]டுபட்டது படக்கடவோமாக செயங்கொண்ட நாச்சியார் திரி_ _ _ _ _ தமிட்டுச் சிங்கநாயற்று இருபத்துமூன்றா
 ந் தியதியான பஞ்சமியும் கஸ்வதியும் பெற்ற செவ்வாய்க் கிழமை நாள் ஆடுவெட்டிப் பூதமுதை[த்]து நிலைமை ப[ண்ணி] இப்படிக்குத் [தி]ருஇடவந்துறை நாயனார் கோயிலிலே கல்லும் வெட்டிக்குடுத்தோம் இவ்வனைவோம். இக் கல்வெட்டினபடிக்குத் தப்பினவன் கெங்கை குமரியிடைக் குராற்பசுக் கு[த்]தினவன் பாவங்கொள்வான். இப்படிக்கு இவனைத்து நாட்டவரும் பணிக்கக் கல்லுவெட் _ _ _ _ ய நாட்டாசாரியனேன். இவை என்னெழுத்து.


மலையாளர் – மலையகத்து வாழ்வோர், பெண்டிழந்தான் – கம்மனாட்டி, புறக்கடித்தோம் – புறக்கண்ணித்தோம், ஓடவிட்டோம், பூரவர்முறை – தந்தைக்கு பின் மூத்த மகன் நாடாளுதல் முறை. இராச்சியம் பண்ணு – அரசாளுதல், கீழோலை – நட்புத் தூது, 
அற்றுமறவும் – செய்யாமல் மறத்தல்.

விளக்கம்

வேந்தன் பெயர் குறிப்பிடாத சக ஆண்டு 1180, பொது ஆண்டு 1258 இல் பொறித்த கல்வெட்டு. அமட்டன் கரிகாலச் சோழ ஆடையூர் நாடாழ்வான் என்ற அரையன் ஆட்சி செய்துவர இவன் ஏவியபடி இவனுடைய தம்பி நரசிங்கபன்மன் ஆட்சி செய்துவர, இவனது மூன்று மகன்கள் பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகியோர் கருப்புக்கட்டி நாயகனுடன் சேர்ந்து கொண்டு இந்த சூளுரையை செய்யும் ஊரவர்க்கும் ஆடையூர் நாடாழ்வானுக்கும் இடையே பகையை வளர்த்து விடுகின்றனர். இந்த பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவர் பிரிதிகங்கரைசருடன் நட்பு கொண்டவர்கள் என்பதோடு ஆடையூர் நாடாழ்வானுக்கு இராச துரோகிகளும் நாட்டுத் துரோகிகளும் ஆனதினால் இம்மூவரையும் பெண்டிழந்தான் (மனைவி இழந்தான்) கூட்டத்தோடு ஒன்றாக்கி சூளுரைப்போர் புறக்கடித்தனர். பிரிதிகங்கரைசர் பிள்ளைகள் ஆடையூர் நாடாழ்வான் பிராட்டிக்கு பிறந்த பிள்ளைகளை மகுடம் ஏற்கமுடியாதவராக ஆக்கி அப்படி அல்லாத பிள்ளைகளை பூர்வர்முறையில் அரசாளவைத்துவிட்டனர். அதனால் இம்மண்ணும் மலையும் உள்ள காலம் வரை, எமக்குப் பிள்ளைகள் அவர்கள் பிள்ளைகள் என வழிவழியாக பெரியுடையான், அரசகணாயன், அமட்டாழ்வான் ஆகிய அண்ணன் தம்பிகள் மூவரையும் இவர்கள் பிள்ளைகள் வழிவழி ஒருவரையும் இம்மண்ணில் புகவிடமாட்டோம், இவர்களுக்கு இடம் கொடுக்கவும் மாட்டோம். இவர் மூவருக்கு இடங் கொடுப்பவரோடு நட்பு கொள்ளமாட்டோம். இம்மூவர் இம்மண்ணுக்கு உரியவரென்று சொல்பவருக்கும் இடம் கொடுக்க மாட்டோம். இவர்களுக்காக தூதுபோதல், இவரைக் காத்தல், இவருடன் பேச்சு வைத்திருப்போர் ஆகியோரை இராசதுரோகிகளாக்கி நாயினும் பன்றியினும் கடையராக எண்ணி அத்தகையோர் மனைவியர் மூக்கு முலைகளை அறுத்துவிடுவோம். இம்மூவருக்காக பணிசெய்யும் மக்களை கொன்றுபோடுவோம். இப்படிக்கு பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் உள்ளிட்ட ஊர் மறவர்கள் நாங்கள் மேற்கண்ட அனைத்தையும் பிரமாண செய்தோம். அப்படிச் செய்யாமல் மறந்துவிட்டோமானால் எங்கள் தாயை யாமே புணர்பவர் ஆனோம் அதோடு அசல வன்னியர் குதிரைக்கு புல்பறிக்கும் பறையருக்கு எமது மனைவிமாரை புணர விட்டவர் ஆனோம். படுக்கத ஓலைப்பாடிக்கு தப்பிச்செல்வோர் இருந்தால் செயங்கொண்ட நாச்சி கோவிலில் செவ்வாய்க் கிழமை பலிஇடப்படும் ஆடுபோல படுவோமாக என்று செய்ங்கொண்ட நாச்சியார் திருமுன்பு சபதமிட்டோம். சிங்க ராசி நிகழும் ஞாயிற்றுக் கிழமை 23 ம் நாள். பஞ்சமியான செவ்வாய்க் கிழமை ஆடுவெட்டி பூதம் உதைத்தோம். இப்படிக்கு திருஇடவந்துறை இறைவர் கோவிலில் நாங்கள் கல்வெட்டினோம். இக்கல்லில் உள்ளது படி நடவாதவன் கங்கைக்கும் குமரிக்கும் இடை வாழ்பவர் குராற்பசுவை கொன்று கொண்ட பாவத்தை கொள்வானாக.

ஆடையூர் நாடாழ்வான் தன் பிள்ளைகள் சிறியவராய் இருப்பதால் தன் தம்பியை அரசனாக பதவி ஏற்க செய்துள்ளான், அவன்பின் தன் பிள்ளை அரசராக பதவி ஏற்க வேண்டும் என்ற புரிந்துணர்வோடு. ஆனால் தம்பி நரசிங்கபன்மன் பிள்ளைகள் தந்தைக்கு பின் மூத்தபிள்ளை என்ற முன்னைய வழிமுறைப்படி பிரிதிகங்கர் மகன்களின் உதவியோடு தாமே அரசராக ஆனதாகத் தெரிகின்றது. இதை எதிர்த்து தம் நாயகன் மீதான தமது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் வண்ணமாக பூணை ஓலைப்பாடி, நந்திமங்கலம் வாழ் மறவர்கள் மேற்கண்டபடி சூளுரை செய்துள்ளனர்.

பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப்பாடலும், பக். 138

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக