ஞாயிறு, 24 மே, 2026

காராளர் முத்து நாடன் (Karalan Muthu Nadan)

காராளன் முத்து நாடன்

கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலை கிராமத்தில் வெள்ளீஸ்வரர் கோவிலில்,காராளர்(மலையாளி) இன மக்களில் ஒருவரான முத்து நாடன்(நாட்டார்) சிலை உள்ளது.

*இவர் இந்த மலையில் உள்ள வெள்ளார் கிராமத்தை சார்ந்தவர்.

*முத்து நாடன் என்று உள்ளதால் "முத்து நாடு" என்னும் பகுதிக்கு தலைவராக(நாட்டார்) இருந்திருக்க வேண்டும்.முத்து நாடு(முத்த நாடு,முட்ட நாடு) என்னும் பகுதி சேர்வராயன் மலையில் உள்ள மூன்று நாட்டு பிரிவுகளில் ஒன்று.இவர் அந்த பகுதிக்கு தலைவராக இருந்திருக்கலாம்.

*மூன்றாம் இராசேந்திரன் சோழன் காலத்தில்(கி.பி.1260),வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவிலுக்கு குருணி அரிசி கொண்டு படைக்க,பன்னிரண்டு ஊரை சார்ந்தவர்கள்,வெள்ளாறு ஊர் சபையில் ஒன்று கூடி இவர் தலைமையில் முடிவு எடுக்கிறார்கள்.

*வெள்ளிமலை கல்வெட்டில் வெள்ளாருடையான் முத்து நாடன் என்று உள்ளது.

செவ்வாய், 19 மே, 2026

வெள்ளிமலை வெள்ளீஸ்வரர் கோவில் கல்வெட்டு,கல்வராயன் மலை.(Kalvarayan Hill's inscription)

கல்வராயன் மலையில் உள்ள வெள்ளிமலைக் கிராமத்தின் வெள்ளி ஈஸ்வரர்(வெள்ளீஸ்வரர்)
திருக்ககோவிலில் கண்டறியப்பட்ட இந்த அரிய கல்வெட்டு, பிற்கால சோழர் காலத்து வரலாற்றை பறை சாற்றும் முக்கிய ஆவணமாகும்.

இம்மலையில் காராளர் என்னும் மக்கள் வாழ்கிறார்கள்.இவர்களது பூர்வீகம் காஞ்சிபுரம் ஆகும்.
(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை முதலி,மலையாள முதலி,மலை நாயக்கர்,மலை வெள்ளாளர்,மலையாண்டி வெள்ளாளர்,பச்சை வெள்ளாளர்,காராள கவுண்டர்,காராள முதலி என்பது இவர்களின் பிற பெயர்கள்.)

கல்வெட்டுப் படத்தையும் அதன் விரிவான விளக்கத்தையும் கீழே காணலாம்.

அடிப்படைத் தகவல்கள்:

இடம்:  வெள்ளிமலை கிராமம், கல்வராயன்மலை வட்டம்
(வெள்ளி ஈஸ்வரர் கோயில்).
காலம்:  பொ.யு. 1260 (மார்ச் மாதம்).
மன்னன்: மூன்றாம் இராசேந்திர சோழன் (சோழ வம்சத்தின் கடைசி அரசர்).
ஆட்சியாண்டு: 14-ஆட்சியாண்டு.

கல்வெட்டுப் வரிகள்:

முன்பக்கம்:
1. ஸ்வஸ்திஸ்ரீதிரிபு
2. வனச் க்கரவத்
3. திகள்ஸ்ரீஇராசேந்தி
4. ர சோழ தேவர்
5. ண்டு யச -வது வ
6. ட மலை கள்ளூரா
7. கிய ம(மு)ள்ளூர் காநத்
8. து மதுவூர் பற்று நா
9. ட்டு திருக்கோவிற்
10.திருவெள்ளாறுடை
11.ய நாயனாற்கு திருவ
12.முதுக்கு மதுவூர் பற்
13.றில் பன்னிரண்டு குறி
14.ச்சி நாட்டவருங் குறு
15.ம்பகளும் வெள்ளா
16.ற்று மன்றில்கூடியி

பின்பக்கம்:
17. ருந்து குடிக்கு கு
18. றுணியால் வந்த
19. தானியம் ஆட்டை
20. வரை குடுக்க கட
21. வோமாக சம்மதி
22. த்தோம் சந்திரா
23. தித்த வரையி
24. ங் குடுக்க கட
25. வோம் வல்லவரை 
26. யன் சத்தியம்
27. இது நாட்டை நாட்
28. டி வெள்ளாறுடை
29. யான் முத்து நாட
30. ன் எழுத்து
31. (சிதைந்துள்ளது) 

விரிவான விளக்கம்:

இந்தக் கல்வெட்டு மலை மக்களின் தான சாசனம் அல்லது ஒரு சமூகக் கூட்டமைப்பின் ஒப்பந்தமாகும். இதன் முக்கியக் கூறுகள்.

1.சோழப் பேரரசு வலுவிழந்து கொண்டிருந்த காலத்தில்,(கி.பி-1260) இராசேந்திர சோழனின் 14-ஆம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது.

2.கல்வராயன்மலையின் ஒரு பகுதி 'வடமலை' என்று அழைக்கப்பட்டுள்ளது. வடமலையில் உள்ள கள்ளூராகிய முள்ளூர் காணத்தில்(அடர்ந்த மலை பகுதி) 'மதுவூர்(மதூர்) பற்று' நாட்டில் உள்ள(இன்றைய சடைய கவுண்டர் நாட்டில் ஒரு துணை நாடு) 'திருவெள்ளாறுடைய நாயனார்' (வெள்ளி ஈஸ்வரர்) க்கு 'திருவமுது' எனப்படும் இறைவனுக்கான நைவேத்தியப் படைப்பிற்காக,மதுவூர்(மதூர்) பற்று நாட்டில் குறிச்சியிலுள்ள(மலையிலுள்ள) பண்ணிரெண்டு நாட்டவர்களும்(ஊரை சார்ந்தவர்களும்), குரும்பகளும்,வெள்ளாறு என்னும் ஊரில் ஒன்று கூடி, ஆண்டுக்கு ஒருமுறை,குறிப்பிட்ட அளவுள்ள குறுணி அரிசியை கோவிலுக்கு வழங்க முடிவு செய்துள்ளனர்.

3.இதை சந்திரன் சூரியன் இருக்கும் வரை கடைப்பிடிப்போம்.இது வல்லவரையன் சத்தியம் என்று கூறுகிறார்கள்.இந்த கூட்டத்தை கூட்டி தலைமையேற்ற வெள்ளாறுடையான்
(வெள்ளாறு ஊரை சார்ந்த) முத்து நாடன்(நாட்டார்) என்பவர் சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார்.

சில விளக்கங்கள்:

வடமலை:
கல்வராயன் மலை என்னும் பெயர் வருவதற்கு முன் கூட்டியே சோழர் காலத்தில்,இந்த மலையின் ஒரு பகுதி வடமலை என்று அழைக்கப்பட்டுள்ளது.அப்போ தென் மலை என்று ஒரு பகுதி இருந்திருக்க வேண்டும்.

கள்ளூராகிய முள்ளூர்:
முள்ளூர் என்னும் பகுதி கள்ளூர் என மாறியிருக்கிறது.அதை கல்வெட்டில் திருத்தியிருக்கிறார்கள்.
மலையமான்களின் முள்ளூர் மலை இந்த பகுதியாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் பிற கல்வெட்டுகளில் இந்த மலை பகுதி "மிலாடாகிய சனனாத வள நாட்டு துறவி நாடு" என்று காணப்படுகிறது.இந்த கல்வெட்டில் மேற்சொன்ன நாட்டு பிரிவு இல்லை, "வடமலை கள்ளூர் ஆகிய முள்ளூர் கானம்" என்று உள்ளது.


மதுவூர் பற்று நாடு: 
மதுவூர் என்பது இன்று மதூர் என்று மக்களால் அழைக்கப்படுகிறது.இது இன்று சடைய கவுண்டன் நாட்டில் உள்ள நான்கு நாட்டில்,இது ஒரு துணை நாடு ஆகும்.

இதில் உள்ள பன்னிரண்டு கிராமங்கள் பின்வருமாறு:
1.வெள்ளிமலை
2.வாழப்பாடி
3.மாயம்பாடி
4.சாத்தனூர்
5. கெண்டிக்கல் 
6.மதூர்(சில பேர் பேச்சு வழக்கில் மரூர் என்கிறார்கள்)
7.கங்காபாடி
8.வண்ணியூர்
9.ஆரம்பூண்டி
10.மல்லியம்பாடி
11.பரங்கி நத்தம்
12.தேவனூர் 

வல்லவரையன் சத்தியம்:

பன்னிரண்டு நாட்ட்டவர்களும் வல்லவரையன் மேல் சத்தியம் செய்கிறார்கள்.இது வல்லவரையன் என்பவர் இந்த இனத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும்.அல்லது மக்களின் நம்பிக்கை பெற்ற குறுநில மன்னனாக இருக்க வேண்டும்.

வல்லவரையன் என்னும் குறுநில மன்னன் வேலூர் மாவட்டம்,திருவண்ணாமலை மாவட்டம்,தருமபுரி மாவட்டம்,கிருஷ்ணகிரி மாவட்டம்,விழுப்புரம் மாவட்டம் மற்றும் கோவை மாவட்ட கல்வெட்டுகளிலும் காணப்படுகிறார்.
இவர் சோழர் காலத்திலும், போசளர் காலத்திலும் மற்றும் நுளம்பர் காலத்திலும் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்.இவர் வாணர் (வாணாதிராயர்) குலத்தை சார்ந்தவர்.

இவர் ஆண்ட பகுதி வல்லவரையன் நாடு என்று அழைக்கபடுகிறது.(சில பேர் வேலூரில் இருக்கும் வல்லம் மற்றும் அதன் சுற்றுபகுதியை ஆட்சி செய்தவன் என்கிறார்கள்.சில பேர் செய்யாறு வட்டத்தில் உள்ள பிரம்மதேசம் பகுதியை ஆட்சி செய்தவர் என்கிறார்கள்.)

கோவை மாவட்ட கல்வெட்டுகளில் வெள்ளாளரில் பூத்தந்தைகளில் மணிய மறையனான இராசராச வல்லவரையன் என்று கல்வெட்டு ஒன்று உள்ளது.

முத்து நாடன்:

முத்து நாட்டிற்க்கு தலைவர் அல்லது நாட்டார் ஆக இருந்தவர்.கல்வராயன் மலையில் முத்து நாடு என ஒன்று இருந்திருக்க வேண்டும்.இல்லையென்றால் சேர்வராயன் மலையில் உள்ள மூன்று நாட்டு பிரிவுகளில் முத்து நாடு (முத்த நாடு,முட்ட நாடு) பிரிவை ஆள்பவராக இருந்திருக்க வேண்டும்.

குறும்பகள்:

இதில் வரும் குறும்பகள் என்னும் பெயருக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளது.

1.முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. 
இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.

2.குறும்பர் என்னும் இனம்.இவர்களின் பேச்சு மொழி கன்னடம் கலந்த குருபா மொழி ஆகும்.இந்த மொழி இம்மலையில் யாரும் பேசுவதில்லை.இவர்களின் குல தெய்வ வழிபாடும் இந்த மலையில் இல்லை.
நில பகுதியில் இருந்து வந்து சாமி கும்பிட்டவர்களாக இருக்கலாம்.அல்லது மலையில் குடியிருந்து சில காலம் கழித்து வெளியேறி இருக்கலாம்.

 வெள்ளீஸ்வரர் கோவில்:
இந்த பெயருடைய கோவில் சென்னையில் மயிலையிலும்,மாங்காடு ஊரிலும் மற்றும் ஆரணி ஊரிலும் உள்ளது.
இந்த தலங்கள் வெள்ளி(சுக்கிரன்) தலங்கள் என்று அழைக்கப்படுகிறது.இங்கு காமாட்சி அம்மன் உடனுறை அம்மனாக காட்சி தருகிறார்.

அதே பெயருடைய கோவில் கல்வராயன் மலையில் இருப்பதும்,இந்த கோவில் இருக்கும் பகுதி,சுக்கிரன் என்னும் பொருளில் "வெள்ளி" மலை என அழைக்கப்படுவதும்,இந்த மலை மக்கள் தைலம்மாள் என்னும் பெயரில் காமாட்சி அம்மனை வழிபடுவதும் வியப்பாக இருக்கிறது.

மன்னர்கள் காலத்தில் சென்னை ஆரணி உள்ளிட்ட பகுதிகள் தொண்டை மண்டலம்(காஞ்சி மண்டலம்) என்று அழைக்கப்பட்டது.
இந்த மலை வாழ் காராளர் இன மக்கள் இந்த காஞ்சி மண்டலத்திலிருந்து(ஆரணி அல்லது சென்னை) மலைக்கு குடியேறி இருக்கலாம்.

கல்வெட்டு செய்தி பகிர்ந்தவர்: 
பொன் வெங்கடேசன் ஐயா,
கல்வெட்டு ஆய்வாளர்,
சேலம் வரலாற்று ஆய்வு மையம்.


4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு (4.Malai Vellalar's inscriptions )

4.மலை வெள்ளாளர் தோலன் பிள்ளன் கல்வெட்டு 


ஊர் : கோயம்புத்தூர்
அரசு : வீரகேரளர்
மன்னன் : வீரநாராயணன்
ஆண்டு : 13 ஆம் நூற்றாண்டு
இடம்:சங்கமேசுவரர் கோயில் கருவறை வடக்குக் குமுதம்

விளக்கம்:

வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளன் ஆன திருஞானசம்பந்தன் என்பான் சங்கீசுவரரர் கோயிலில் திருக்கார்த்திகை நாளில் இறைவன் எழுந்தருளவும், திருஅமுதுக்கும் அச்சுக்காசுகள் கொடையளித்தமை பற்றி இக்கல்வெட்டு கூறுகின்றது.

கல்வெட்டு:

1. ஷ்வஸ்தி ஸ்ரீ வீரநாராயண தேவற்கு யாண்டு ஆறாவது வீரகேரள நல்லூர் வெள்ளாளன் மலையரில் தோலன் பிள்ளநான திருஞாநசம்பன்தந்

2. நேன் ஆளுடையார் சங்கீசுவரமுடையாற்குத் திருக்காத்திகைக்கு எழுந்தருளுகைக்கு... அற்றைக்கு அமுதவெஞ்சநாதிகளுக்கும் நான்னொடுக்கிந அச்சு... ஒன்றும் சந்திராதித்தவரை இருக்கின்ற... திருஞானசம்பந்தர் நல்லூர்

( "பிள்ளன்"என்னும் குலம் கொல்லிமலை மற்றும் பச்சை மலை காராளர்(மலையாளி) மக்களிடையே இன்றும் வழக்கத்தில் உள்ளது.)
மலை வெள்ளாளர்கள் என்பவர்கள் கொல்லி மலையிலிருந்து கோவை மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளுக்கு சென்று விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.பின் பஞ்சம், கொள்ளை மற்றும் போரின் காரணங்களால் அங்கிருந்து ஈரோடு மலை பகுதிக்கு சென்று மலை விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.)
(இவர்களுக்கு மலையாளி,மலை முதலி,மலையாள முதலி,மலையாள கவுண்டர், மலைக்கவுண்டர்,காராளர், காராள முதலி மற்றும் காராளக் கவுண்டர் என்பவை பிற பெயர்கள் ஆகும்.)

நன்றி - கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகம்

3.மலை வெள்ளாளர் கேசன் கோன் தமிழ் வேளாண் கல்வெட்டு(3.MALAI VELLAALAR'S INSCRIPTION)

3.மலை வெள்ளாளர் கேசன் கோன் தமிழ் வேளாண் கல்வெட்டு

கல்வெட்டு செய்தி:

கி.பி 1231 ஆம் ஆண்டு கொங்கு சோழர் வீர ராஜேந்திரன் ஆட்சி காலத்தில்,வட பரிச நாட்டு கவையன் புத்தூர்(கோவை) வெள்ளாளன் மலையரில் கேசன் கோன் தமிழ் வேளான் என்பவர் காலகாலதேவர் கோவிலில் பெரிய திரு மண்டப நாயக தூண் ஒன்றை கொடையாக வழங்கியுள்ளார்.

இடம் - காலகாலேசர் கோவில்,கோவில் பாளையம்,கோவை

நூல் - கோவை மாவட்ட கல்வெட்டுக்கள்

மலை வெள்ளாளர்(MALAI VELLALAR) இன மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைகளில் வசிக்கிறார்கள்.இவர்கள் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற காராளர்(KARALAR) இன மக்கள் ஆவர்.

கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இம்மக்களுக்கு காராள கவுண்டர்(KARALA GOUNDAR),காராள முதலி(KARALA MUDHALI),மலையாளி(MALAYALI) மற்றும் மலையாள கவுண்டர்(MALAYALA GOUNDAR) என்ற பெயரும் உண்டு.

கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி என குறிப்பிடுவதை பார்க்கலாம்.


1.மலை வெள்ளாளர் தில்லை கூத்தன் கல்வெட்டு(1.MALAI VELLALAR' S INSCRIPTION )

மலை வெள்ளாளர் தில்லை கூத்தன் கல்வெட்டு

மலை வெள்ளாளர்(MALAI VELLALAR) இன மக்கள் ஈரோடு மாவட்டத்திலுள்ள மலைகளில் வசிக்கிறார்கள்.இவர்கள் கொல்லிமலையிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற காராளர்(KARALAR) இன மக்கள் ஆவர்.

கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

கிழக்கு தொடர்ச்சி மலைகளில் வாழும் இம்மக்களுக்கு காராள கவுண்டர்(KARALA GOUNDAR),காராள முதலி(KARALA MUDHALI),மலையாளி(MALAYALI) மற்றும் மலையாள கவுண்டர்(MALAYALA GOUNDAR) என்ற பெயரும் உண்டு.

கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி என குறிப்பிடுவதை பார்க்கலாம்.

கி.பி.1313 ஆம் ஆண்டு சுந்தர பாண்டியர் ஆட்சி காலத்தில்,கொங்கு பாண்டியர் ஆண்ட கொங்கு பகுதியில்,ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் குன்னத்தூர் ஊரிலுள்ள,இலட்சுமி நாராயணன் கோவிலில் இவ்வினத்தை சேர்ந்த தில்லை கூத்தர் (தந்தை பெயர் சிதைந்துள்ளது) என்பவர்,கோவிலில் ஒரு சந்தியா தீபம் ஏற்ற,பூசாரி ஒருவருக்கு பணம் கொடுத்த செய்தி கல்வெட்டாக உள்ளது.

இடம்: இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் மகாமண்டபம் தெற்குச் சுவர்.

விளக்கம் : இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் நம்பிமாரில் பாரத்வாஜி திருவேங்கடதாசன் அழகப்பெருமாள், மலையாளரில் தில்லைக்கூத்தரிடம் பன்னிரண்டு பணம் பெற்றுக் கொண்டு ஒரு சந்தியா தீபம் எரிக்க ஒப்புக்கொண்டார்.

மாவட்டம் : ஈரோடு
ஆட்சி ஆண்டு : 28
வட்டம் : பெருந்துறை
வரலாற்று ஆண்டு : 1313
ஊர் : குன்னத்தூர்
இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 187/1967-68
அரசு : கொங்குப் பாண்டியர்
அரசன் : சுந்தரபாண்டியன்

கல்வெட்டு:

1. ஹஹிஸ்ரீ கோச்சடபன்மரான திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு உயஅ ஆடி மாதம் குறுப்பு நாட்டுக்

2. குன்றத்தூர் ல
க்ஷிநாரயணப் பெருமாள் னம்பிமாரில் ஹாரதாஜி திருவேங்கடநாதன் அழகப்பெருமாளேன் மலையாளரில் கண

3.......ர்மகன் தில்லைக்கூத்தர்க்காக இன்னாயனார் திருமுன்பே ஒரு ஸநாசீபம் வடிாஷித்தர்வரை ரிப்பதாக இவர் பக்கல் வாங்கின பணம் யஉ இப்

நூல் - ஈரோடு மாவட்ட கல்வெட்டுகள்
தொடர் எண் :- 1105/2003



2-மலை வெள்ளாளர் சோழ காமிண்டன் கல்வெட்டு(மலையாளி, காராளர்)(MALAI VELLAALAR INSCRIPTION -2)

மலை வெள்ளாளர் சோழ காமிண்டர் கல்வெட்டு

கல்வெட்டு செய்தி:

கி.பி.1276 ஆம் ஆண்டு,கொங்கு சோழர்,மூன்றாம் விக்கிரம சோழன் ஆட்சி காலத்தில் இடிகரையில் வாழ்ந்த வெள்ளாளன் மலையரில்(மலை வெள்ளாளர்) சோழ காமிண்டன் என்பவர் வில்லீஷ்வரர் கோவிலில் சந்தி விளக்கு ஒன்றை கொடையாக கொடுத்துள்ளார்.

நூல் - கோவை மாவட்ட கல்வெட்டுக்கள்
கொல்லிமலையில் இருந்து குடியேறிய மலைவாழ் காராளர் மக்கள் முதலில் கோவை மற்றும் ஈரோடு பகுதிகளில் பரவலாக வாழ்ந்துள்ளனர்.பின் பஞ்சத்தின் காரணமாகவோ,கொள்ளை சம்பவம் காரணமாகவோ ஈரோடு மலைக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்(புலவர் இராசு ஐயா).

சேர்வராயன் மலை மற்றும் கொல்லி மலையில் வாழும் காராளர்(மலையாள கவுண்டர்) இன மக்களில் மலையர் வீடு என்னும் குலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மலையில் வாழும் காராளர் இன மக்களுக்கு மலை வெள்ளாளர் என்னும் பெயரும் மலையாளி(இடம் சார்ந்த பெயர்),மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உள்ளது.



திங்கள், 18 மே, 2026

salem gazetteer ல் கல்வராயன் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்.

மதராஸ் மாவட்ட பதிவுகளில் கல்வராயன் மலை கல்வெட்டுகள்
(Kalvarayan inscriptions in Madras District gazeteer)

கோவில்புதூரில் உள்ள கரிய வரதராஜ பெருமாள்(கரிய பெருமாள்,கரிராமன்)கோயில், இந்த மலையின் அனைத்து மலையாளிகளாலும் ஒரு தேசிய ஆலயமாகப் போற்றப்படுகிறது என்பது உண்மை.

மலையாளிகள் தாங்களாகவே,கரி வரதராஜ பெருமாள்(கரிராமன்) கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கல்லில் பொறிக்கப்பட்ட ஒரு பதிவை தங்கள் தோற்றத்திற்கு சான்றாகக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பதிவு வாய்மொழியாகத் திருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

1. திரு. லே பாஃனு அதன் பின்வரும் மொழிபெயர்ப்பைத் தருகிறார்: 

"இந்த கல்வராயன் மலை வேணுவராயன்(வாணவராயன்) என்ற அரசனால் ஒதுக்கப்பட்டது,இவர் வெவ்வேறு நிறத்தில் ஒரு லட்சம் குதிரைகளை வைத்திருந்தவர்.
சின்ன கல்விராயன்(கல்வராயன்) மற்றும் பெரிய கல்விராயன்(கல்வராயன்) ஆகிய நாடுகளில் உள்ள கரிய பெருமாள் மற்றும் பிற தெய்வங்களை வணங்குவதற்காக தேர் மற்றும் பிற விழாக்களை கொண்டாடுவதற்கு பரிசாக இந்த மலைகள் வழங்கப்பட்டுள்ளது.ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதை பின்பற்ற வேண்டும், மேலும் மேற்கூறியவற்றைச் செய்ய தவறுபவர்கள், கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றவருக்குச் சமமான குற்றவாளிகளாக இருப்பார்கள்".

வாணவராயன் - ஆறகளூரை தலைமை இடமாக கொண்டு ஆத்தூர்,கல்வராயன் மலைகளை உள்ளடக்கிய மகதை மண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்.
ஏழு நாடுகள் - கடைய நாடு, தென்மலை நாடு,ஆதிப்பதி நாடு,மதூர்(மடு) நாடு,உழவு நாடு,தென் நாடு,வட நாடு,மேல் நாடு மற்றும் கீழ் நாடு.
(தென்மலை நாடு என்று வருவதால் வடமலை நாடு என்ற நாடு இருந்திருக்க வேண்டும்.அந்த நாடு சின்ன திருப்பதி இருக்கும் பகுதியாக இருக்கலாம்.சின்ன திருப்பதி பெருமாளுக்கு வடக்கு மலையான் என்ற பெயரும் உண்டு)

(கள்ளிப்பாறை நாடு,உப்பு நாடு,தும்பை நாடு மற்றும் சுண்டப்ப நாடு ஆகிய நான்கு நாடுகள் பின்னாட்களில் உருவாக்கப்பட்ட ஊர்களாக இருக்கலாம்.)

2. இனாம் துறை கலெக்டர், 1866 ஆம் ஆண்டு பிஸ் அறிக்கையில், பெரிய-கல்ராயண் நாட்டில் உள்ள ஒரு கல்லில் உள்ள இரண்டு கல்வெட்டுகளைக் குறிப்பிடுகிறார்.

 முதல் கல்வெட்டு:

 ரௌத்ரி ஆண்டின் 21வது மார்கழி, சாலிவாகனா 942 (=1020 கி.பி.) தேதியில்,கல்வராய கவுண்டர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை,நான்கு எல்லைகளுடன்,கடவுள் கரிய பெருமாளுக்கு வழங்கினார்" என்று பதிவு செய்துள்ளது

கரிய பெருமாள் - கரிராமர் அல்லது கரிய வரதராஜ பெருமாள்.

கல்வராயன் கவுண்டர் - கல்ராயன் அல்லது கல்விராயன்

இரண்டாவது கல்வெட்டு:

 சாலிவாஹன 1224 (=1302 கி.பி.) இல் தேதியிடப்பட்ட உதவியாகும், மேலும் "கல்ராய கவுண்டரும், எட்டு கரை நாட்டாரும்" என்ற சொற்களைக் கொண்டிருக்கிறது

3.பழங்காலத்தில் இந்த மலையாளி குடியேற்றத்தை நிரூபிக்க, கல்ராயன் 
பாளையக்காரர், ஜடயகவுண்டன் பாளையகர் வசம் உள்ள நான்கு செப்பு சாசனங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, 
அவற்றில் இரண்டு விஜயநகர மகா கிருஷ்ண ராஜாவின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1519), மற்ற இரண்டு அச்சுத ராயரின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1532) இருக்கிறது.