செவ்வாய், 1 அக்டோபர், 2019

கருங்காடு(கெராங்காடு),கல்வராயன்மலை கல்வெட்டு

கல்வராயன் மலைப்பகுதியில் புதிய கற்கால கருவிகள் கண்டெடுப்பு: தொல்லியல் துறை பாதுகாக்க வலியுறுத்தல் வி.சீனிவாச்ன சேலம் Published : 06 Jan 2017 16:13 IST Updated : 16 Jun 2017 11:44 IST சேலம் மாவட்ட வரலாற்று தேடல்குழுவை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆறகழூர் பொன்.வெங்கடேசன், ஆசிரியர் கலைச்செல்வன், ஆசிரியர் பெருமாள் அடங்கிய குழுவினர், சமீபத்தில் பெரிய கல்வராயன் மலையில் உள்ள ஆத்தூர் வட்டம் கீழ்நாடு ஊராட்சி கெராங்காடு கிராமம், பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் கீழ்நாடு ஊராட்சி அடியனூர், சேம்பூர், போன்ற கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஆறகழூர் பொன்.வெங்கடேசன் மற்றும் குழுவினர் கூறியதாவது: கல்வராயன் சுற்றுவட்டாரப் பகுதியில் 21 கல்திட்டைகள், 10 கற்குவைகள் , புதிய கற்கால கருவிகள் மற்றும் ஏராளமான குத்துகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் 15 கல்திட்டைகள் ஓரளவு நல்ல நிலையிலும் 6 கல்திட்டைகள் சிதைந்த நிலையிலும் காணப்படுகின்றன. கற்குவைகளில் 6 நல்ல நிலையிலும் 4 சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது. கல்திட்டைகள்பழங்காலத்தில் இறந்தவர்களை புதைத்த இடத்தில் கல்பதுக்கை, கல்திட்டை, ஈமப்பேழை, கற்குவை, கல்வட்டம், குத்துக்கல், முதுமக்கள் தாழி போன்ற முறைகளை அக்கால மக்கள் பயன்படுத்தினர். கல்திட்டையானது மூன்று புறம் துண்டுகற்களால் அடுக்கப்பட்டு மேற்புறம் ஒரு பலகை கல்லால் மூடப்பட்டுள்ளது. முன்புறம் மூடப்படாமல் உள்ளது. இதன் உயரம் நான்கரை அடி, நீளம் 12 அடி, அகலம் 6 அடியாகவும் உள்ளது. மக்கள் வசிப்பிடங்களில் உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்கால கருவிகளும், அந்த கருவிகளை வழுவழுப்பாக்க பயன்பட்ட பந்து வடிவ உருண்டை கல்லும், கூர் தீட்ட பயன்படுத்திய தேய்ப்பு கல்லும் காணப்படுகிறது. கல்திட்டையின் உள்ளே விநாயகர் சிலையும் உள்ளது. இது பிற்காலத்தில் வைக்கப்பட்டு இருக்கலாம். மக்கள் வசிப்பிடம் இல்லாத மலைக்குன்றில் உள்ள கல்திட்டைகளில் புதிய கற்கால கருவிகளோ விநாயகர் உருவமோ காணப்படவில்லை. புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் குழுவில் முக்கியமான தலைவர்கள், வீரர்கள் இறந்தபோது அவர்கள் நினைவாக இது போன்ற கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. அவை மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. அது பிற்காலத்தில் மருவி பாண்டவர் வீடு என அழைக்கப்பட்டன. இங்குள்ள மக்களால் இவை கல்பாண்டி வீடு, சின்ன பாண்டி வீடு, குள்ள பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது. இங்கு இரண்டடி உயரமுள்ள குள்ள மனிதர்கள் பழங்காலத்தில் வாழ்ந்ததாகவும் அவர்களின் வீடுதான் இது என இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்துக்கு அருகே கற்குவைகள் அமைக்கப்பட்டன. இவை பிரமீடு போன்ற அமைப்பில் கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது இறந்தவர்கள் நினைவாகவும், அவர்களை அடக்கம் செய்த இடங்களை அடையாளப்படுத்தவும் குத்துக்கற்கள் வைக்கப்பட்டன. புதிய கற்கால கருவிகள் கெராங்காடு, சேம்பூர், அடியனூர் போன்ற மலைக்கிராமங்களில் மக்கள் குடியிருப்புக்கு அருகே உள்ள கல்திட்டைகளின் உள்ளே புதிய கற்காலகருவிகள் காணப்படுகின்றன. இவை வேறு வேறு வடிவங்களில் அமைந்துள்ள கைக்கோடாரிகள் ஆகும். இதன் ஒரு முனை கூராகவும் மறுமுனை தட்டையாகவும் உள்ளது. கூரான முனை குத்திக்கிழிக்கவும் தட்டையான முனை வெட்டவும் பயன்பட்டுள்ளது. ஒரு அடி உயமுள்ள கற்கோடாரிகளும் இங்கு காணப்படுவது சிறப்பான ஒன்றாகும்.பழைய கற்கால கருவிகள் கரடு முரடாக இருக்கும். இந்த புதிய கற்கால கருவிகள் வழுவழுப்பாக உள்ளன. இதை வழுவழுப்பாக மாற்ற பயன்பட்ட கல்பந்துகளும், கூராக்க பயன்பட்ட தேய்ப்பு கல்லும் கல்திட்டையின் உள்ளே காணப்படுகின்றன. இக்கருவிகள் 2,500 ஆண்டுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களால் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம். கல்வெட்டுகள்கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன. கல்வெட்டின் மேல்புறம் பெருமாளின் சின்னமான சங்கு, சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். இதில் விய வருடம் வைகாசி மாதம் 27-ம் தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூஜைகள் செய்ய கள்ளர் நாட்டை (கீழ்நாடு) சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கரையப்பக்கவுண்டர் , அன்னியப்ப கவுண்டர் ஆகிய இரு தலைவர்களும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது. இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூஜையும், கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் . இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இத்தானத்துக்கு அழிவு செய்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் எனவும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.இந்த அரிய சான்றுகளை ஆவணப்படுத்தவும் பாதுகாக்கவும் தொல்லியல்துறை ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மலைக் கவுண்டர்களின் குல அமைப்பு

மலையில் வாழும் நம் காராள இனத்தில் வீடு(எ.கா :- காடை வீடு, தும்புடையான் வீடு,அரையன் வீடு,கரியன் வீடு போன்று இன்னும் பல) என்னும் பங்காளி உறவுமுறை பற்றி எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நமக்கு குலம் என்னும் அமைப்பு முறை இருந்தது,இன்று அது அழிந்து விட்டது. குறிப்பிட்ட பல வீடுகள்(பங்காளி உறவுமுறை) சேர்ந்தது தான் ஒரு குலம்.சிவனை குலதெய்வமாக பல வீடுகள் சேர்ந்த ஒரு குலம் வழிபடும்.எடுத்துக்காட்டாக காடை வீடு,அய்யனார் வீடு என்று இன்னும் பல வீடுகள் சேர்ந்து வரதராஜ பெருமாள் சாமியை குலதெய்வமாக கும்பிடுவர்.அதே போன்று சிவனையும் சில வீடுகள் சேர்ந்து குலதெய்வமாக கும்பிடுவர்.காளி சாமியையும் சில வீடுகள் சேர்ந்து கும்பிடுவர்.அதனால் தான் இவ்வினத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குலசாமி,வீட்டு சாமி என இரு தெய்வங்கள் இருக்கும்.வீட்டு சாமி என்பது அனைவருக்கும் புடவைக்காரி அம்மன்(பெரியாண்டிச்சி) ஆக தான் இருக்கிறது.குலசாமி மட்டும் மாறுபடும்.
          ஒவ்வொரு குலத்துக்குள்ளும் திருமணம் உறவு நடைபெறாது,அதிலிருக்கும் வீடுகள் அனைத்தும் பங்காளி உறவுமுறையை குறிக்கும்.சிவனை குல தெய்வமாக கும்பிடும் குலம் பெருமாளை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும் அல்லது காளியை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும்.இப்படி இரு வெவ்வேறு குலங்களுக்குள் தான் திருமணஉறவு நடைபெறும்,ஒரே குலத்துக்குள் திருமணம் நடைபெறாது,ஏனெனில் அவர்கள் பங்காளி என்னும் உறவுமுறையில் இருப்பார்கள். ஒரு குடும்பம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வாழும்போது,அது சில தலைமுறைகள் கழித்து தன் குல அமைப்பை மறந்து வீடு பெயர் மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பெண் தேடும் போது சில நேரம் ஒரே குலத்தில் வரும் வீட்டையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.பின் பங்காளி என்பவன் இத்திருமண முறையால் மாமன் மச்சான் உறவு முறையில் வந்து விடுகிறான்.இப்படி தன் குலத்தை மறந்து ஒரே குலத்தில் திருமணம் செய்து இன்று குல அமைப்பு மறந்து வீடு அமைப்பு முறை மட்டுமே மலையாளி கவுண்டர் இனத்தில் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் வகுத்த இந்த குல அமைப்பு மறைந்தாலும் உண்மையான பங்காளி உறவு முறை கொண்ட, வீடு அமைப்பு முறையில் இக்காராள மக்கள் சரியாக இருக்கிறார்கள்.அதாவது தும்புடையார் வீடு ஆண் ஒருவன் அதை தவிர்த்து மற்ற வீடுகளான அரையர் வீடு,பூச்சு கவுண்டர் வீடு போன்று மற்ற வீடுகளில் பெண் எடுப்பானே தவிர தும்புடையார் வீட்டிலே பெண் எடுப்பதில்லை.
                   தற்ப்பொழுது என்ன குலம் என்ன வீடு என்று கேட்பது மறைந்து என்ன வீடு என்று கேட்டபது மட்டும் வழக்கத்தில் இருக்கிறது.வீடு என்பது இப்பொழுது குலமாக மாறி வருகிறது.அரையர் வீடு, தீக்கடையார் வீடு என்றில்லாமல் அரையர் குலம், தீக்கடையார் குலம் என்று மாறி வருகிறது.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

கரிராமன்(Kari Raman) என்கிற கரிவரதராஜ(Kari Varatharaja) பெருமாள்

கரிராமன் என்கிற கரி வரதராச பெருமாள்

                    கரிராமன் என்னும் கடவுள் மலையாள கவுண்டர் என்னும் காராளர் மக்களால் வணங்கப்படும் முதன்மை கடவுள் ஆகும்.இவ்வினத்தில் ஒரு  குறிப்பிட்ட குலம் இக்கடவுளை குலசாமியாக வணங்குகிறது.
             இக்கடவுள் பெயர் கரிவரதராஜ பெருமாள் என்றாலும் நாயக்கர் காலத்தில் தான் கரிராமன் என்ற பெயர் வந்திருக்கும் என நான் கருதுகிறேன்.கிருஷ்ணகிரிக்கு உட்பட்ட ஒரு கரிராமன் கோவில் ஜாகிர்தார் முறை காலத்தில் கட்டப்பட்டுள்ளது,அதில் இருக்கும் மூலவர் கரிவரதப்பெருமாள் ஆயினும் கரிராமன் என்றே அழைக்கப்படுகிறார்.பெருமாள் ஏன் ராமன் என அழைக்கடுகிறார் என தெரியவில்லை.இவ்வின மக்களை கேக்கும் பொழுது ராமனும் பெருமாள் அவதாரம் என்பதால் அப்படி அழைக்கிறோம் என்கின்றனர்.
       மலையாளக்கவுண்டர்கள் பிரிந்து இடம்விட்டு இடம் செல்லும் போது தன்னோடு குலசாமியையும் கொண்டுசெல்கின்றனர்.அப்போது பொருளாதார சூழ்நிலை காரணமாக சிலை வைக்க முடியாமல்,கரிராமனுக்கு பதிலாக கற்க்களையே வைத்து வழிபடுகின்றனர்.பின் சில தலைமுறைக்கு பின்னால் கரிவரதராச கடவுளின் சிலை வடிவத்தை மறந்து,கோவில் கட்டி சிலை வைக்கும் போது ராமன் சிலையை வைத்து விடுகின்றனர்.இப்படி அறியாமையில் அமர்ந்த நிலையில் இருக்கும் விஷ்ணு லட்சுமி சிலைக்கு பதிலாக,கரிராமன் என்று தவறான சிலையை(ராமன் சிலையை) வைத்து வழிபடுகின்றனர்.
         ஆனால் இன்றும் மலையாளக் கவுண்டர் இனத்தின் ஆதிக்குடியேற்றத்தின் போது ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் ஆதிக்கோவில் கருமந்துறையில் அமைந்துள்ளது.அங்கு கரிராமன் என்ற கரிவரதன் தானும் தன் இரு மனைவியருடன் அமர்ந்தநிலையில் காட்சித் தருகிறார்.
             மலையாள கவுண்டர்களைப்போல் சேலம் பகுதியில் வாழும் நாட்டுக்கவுண்டர்கள் கரிவரதனை கரிய மாணிக்கப்பெருமாள் என்ற பெயரிலும்,ஆத்தூரில் வாழும் வேளாளர்கள் ஆத்தூர் கரிவரதராச பெருமாளையும் குலசாமியாக வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.