செவ்வாய், 1 அக்டோபர், 2019

மலைக் கவுண்டர்களின் குல அமைப்பு

மலையில் வாழும் நம் காராள இனத்தில் வீடு(எ.கா :- காடை வீடு, தும்புடையான் வீடு,அரையன் வீடு,கரியன் வீடு போன்று இன்னும் பல) என்னும் பங்காளி உறவுமுறை பற்றி எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நமக்கு குலம் என்னும் அமைப்பு முறை இருந்தது,இன்று அது அழிந்து விட்டது. குறிப்பிட்ட பல வீடுகள்(பங்காளி உறவுமுறை) சேர்ந்தது தான் ஒரு குலம்.சிவனை குலதெய்வமாக பல வீடுகள் சேர்ந்த ஒரு குலம் வழிபடும்.எடுத்துக்காட்டாக காடை வீடு,அய்யனார் வீடு என்று இன்னும் பல வீடுகள் சேர்ந்து வரதராஜ பெருமாள் சாமியை குலதெய்வமாக கும்பிடுவர்.அதே போன்று சிவனையும் சில வீடுகள் சேர்ந்து குலதெய்வமாக கும்பிடுவர்.காளி சாமியையும் சில வீடுகள் சேர்ந்து கும்பிடுவர்.அதனால் தான் இவ்வினத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குலசாமி,வீட்டு சாமி என இரு தெய்வங்கள் இருக்கும்.வீட்டு சாமி என்பது அனைவருக்கும் புடவைக்காரி அம்மன்(பெரியாண்டிச்சி) ஆக தான் இருக்கிறது.குலசாமி மட்டும் மாறுபடும்.
          ஒவ்வொரு குலத்துக்குள்ளும் திருமணம் உறவு நடைபெறாது,அதிலிருக்கும் வீடுகள் அனைத்தும் பங்காளி உறவுமுறையை குறிக்கும்.சிவனை குல தெய்வமாக கும்பிடும் குலம் பெருமாளை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும் அல்லது காளியை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும்.இப்படி இரு வெவ்வேறு குலங்களுக்குள் தான் திருமணஉறவு நடைபெறும்,ஒரே குலத்துக்குள் திருமணம் நடைபெறாது,ஏனெனில் அவர்கள் பங்காளி என்னும் உறவுமுறையில் இருப்பார்கள். ஒரு குடும்பம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வாழும்போது,அது சில தலைமுறைகள் கழித்து தன் குல அமைப்பை மறந்து வீடு பெயர் மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பெண் தேடும் போது சில நேரம் ஒரே குலத்தில் வரும் வீட்டையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.பின் பங்காளி என்பவன் இத்திருமண முறையால் மாமன் மச்சான் உறவு முறையில் வந்து விடுகிறான்.இப்படி தன் குலத்தை மறந்து ஒரே குலத்தில் திருமணம் செய்து இன்று குல அமைப்பு மறந்து வீடு அமைப்பு முறை மட்டுமே மலையாளி கவுண்டர் இனத்தில் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் வகுத்த இந்த குல அமைப்பு மறைந்தாலும் உண்மையான பங்காளி உறவு முறை கொண்ட, வீடு அமைப்பு முறையில் இக்காராள மக்கள் சரியாக இருக்கிறார்கள்.அதாவது தும்புடையார் வீடு ஆண் ஒருவன் அதை தவிர்த்து மற்ற வீடுகளான அரையர் வீடு,பூச்சு கவுண்டர் வீடு போன்று மற்ற வீடுகளில் பெண் எடுப்பானே தவிர தும்புடையார் வீட்டிலே பெண் எடுப்பதில்லை.
                   தற்ப்பொழுது என்ன குலம் என்ன வீடு என்று கேட்பது மறைந்து என்ன வீடு என்று கேட்டபது மட்டும் வழக்கத்தில் இருக்கிறது.வீடு என்பது இப்பொழுது குலமாக மாறி வருகிறது.அரையர் வீடு, தீக்கடையார் வீடு என்றில்லாமல் அரையர் குலம், தீக்கடையார் குலம் என்று மாறி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக