வியாழன், 29 அக்டோபர், 2015

தென்செட்டி ஏந்தல்,மலையாள கவுண்டர்களின் தாய் கடவுள்

விழுப்புரம் மாவட்டம், கல்வராயன் மலையை ஒட்டி உள்ளது தென்செட்டி ஏந்தல் கிராமம். கல்வராயன் மலைப்பகுதியானது தென்மேற்கே சேலம் மாவட்டத்தையும், வடக்கே திருவண்ணாமலை மாவட்டத்தையும், கிழக்கே விழுப்புரம் மாவட்டத்தையும் கொண்டது. இந்த மலைப்பகுதியை ஜாகீர்தார்கள் என்ற வம்சாவழியினர் பரம்பரையாக ஆண்டு வந்தனர். இப்பகுதி மலைவாழ் மக்களும், அதையொட்டி வாழ்ந்த கிராம மக்களும் ஜாகீர்தார்களை தங்கள் இனத்தின் முன்னோடிகளாகவும். தங்களை ஆளும் சிற்றரசர்களாகவும் எண்ணி மிகுந்த பயபக்தியோடும், மரியாதையோடும் அவர்களுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். 1975-ல் இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோதுதான் இந்த கல்வராயன் மலைப்பகுதி ஜாகீர்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்து அரசின் கட்டுபாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்த ஜாகீர்தார் வம்சா வழியினரைச் சேர்ந்தவர்கள்தான் காலம் சென்ற பெரிய சடையப்பர், சின்ன சடையப்பர் மற்றும் அவர்களது தாயார் மஞ்சு நாச்சியம்மன் ஆகியோர். இவர்களையே தங்களைக் காக்கும் எல்லை தெய்வங்களாக வணங்கி வருகிறார்கள் இங்குள்ள கிராம மக்கள்.
தலபெருமை:
பெரிய சடையப்பருக்கு யானை வாகனமும், சின்ன சடையப்பருக்கு குதிரை வாகனமும் உள்ளன. இவற்றின்மீது வேட்டைக்குப் போகும் இவர்களுக்கு ஆணிகள் பொருத்திய காலணிகள் உண்டு. இந்த தெய்வங்களை நம்பி வந்து தங்கள் குறைகளைச் சொல்லி தீர்வு வேண்டினால், அவற்றை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்கள். பல ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த ஒரு தம்பதிகள் இந்த தெய்வங்களிடம் வேண்டிக்கொண்டபோது குழந்தைப்பேறு கிடைத்தது. இதற்கு நன்றிக்கடனாக மூன்று பவுன் தாலிச் சங்கிலியை காணிக்கையாகக் கொண்டு வந்து செலுத்தினார்கள். இப்படிப்பட்ட சக்திமிக்க தெய்வங்களை சேலம், கடலுர், பெரம்பலூர், சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, கரூர், தம்மம்பட்டி, வயலூர், திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இவ்வூரில் உள்ள எல்லா மக்களும் இத்தெய்வங்களை மிகுந்த பக்தியோடும் கட்டுப்பாடுகளோடும் வழிபட்டு வருகின்றனர். முன்காலத்தில் இந்த ஊரில் பட்டுநூல் தயாரித்த செட்டியார் இன மக்கள் அதிகம்பேர் வாழ்ந்துள்ளனர். அதனால்தான் இந்த ஊருக்கு செட்டி ஏந்தல் என்ற பெயர் உருவானது. இதேபோல் சங்கராபுரம் அருகே ஒரு செட்டிஏந்தல் கிராமம் உள்ளது. அதனால் அந்த ஊருக்கு வடசெட்டிஏந்தல் என்றும், எங்கள் ஊரை தென்செட்டி ஏந்தல் என்றும் அழைக்கிறார்கள்.
இங்கு வந்து குறைகளைச் சொல்லி பரிகாரம் கேட்கும் மக்கள், தாங்கள் வேண்டியது நிறைவேறியதும் சாமியிடம் சொன்ன பரிகாரத்தின்படி நிறைவேற்றாவிட்டால், தானே சென்று தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வார்கள் சடையப்பர்கள். ஆண்டாண்டுகாலமாக அக்கம் பக்கம் உள்ள எத்தனையோ ஊர்களில் காலரா பரவி பலர் இறந்துள்ளனர். ஆனால் சடையப்பர் கோவில் கொண்டுள்ள எங்கள் ஊரில் மட்டும் அன்று முதல் இன்று வரை யாருக்கும் காலரா வந்ததே இல்லை என்கிறார்கள் இவர்கள்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இக்கோயில் பூசாரியாக இருந்தவர் மீது ஒரு திருட்டு வழக்கு ஏற்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அந்த திருட்டு வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட பூசாரி புலம்பியபடியே இருந்தார். இதைக் கவனித்த நீதிபதி பூசாரியிடம் விசாரித்தார்.
அதற்கு பூசாரி, அய்யா! நான் பூஜை செய்யும் கோயில் சாமிகளுக்கு இன்றைக்கு மாசி மகத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இத்தெய்வங்களுக்கு மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாதான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட திருவிழாவில் சாமிகளுடன் உடனிருந்து அலங்காரம் செய்யவும், பூஜை செய்யவும் என்னால் போக முடியவில்லையே! அதை நினைத்துதான் புலம்புகிறேன். சக்தியுள்ள அந்த சாமிகள் என்னை எப்படியாவது இங்கிருந்து அழைத்துச்செல்ல வருவார்கள் என்று நம்பியுள்ளேன் என்றார். அதைக் கேட்ட நீதிபதி, அவ்வளவு சக்தியுள்ளதா உங்கள் சாமி? அப்படியானால் அந்த சாமிக்கு நான் ஒரு சோதனை வைக்கிறேன். அந்த சாமிக்கு சக்தி இருந்தால் அதைக் கண்டுபிடிக்கட்டும். அப்படி கண்டுபிடித்துவிட்டால் திருவிழா பணிக்கு உன்னை அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார். இந்த செய்தி ஊருக்குத் தெரிவிக்கப்பட்டது.
தென்செட்டி ஏந்தல் ஊரின் முக்கியஸ்தர்கள் எட்டு பேர் சடையப்ப சாமியை தோளில் சுமந்தபடி நீதிமன்றத்துக்குப் புறப்பட்டனர். இந்த நிலையில் நீதிபதி தனது உதவியாளர்களோடு விபூதி, குங்குமம், எலுமிச்சம்பழம் ஆகிய மூன்றையும் பொட்டலமாகக் கட்டி, அருகிலுள்ள கோமுகி ஆற்றுக்குச் சென்று அங்குள்ள மணலில் புதைத்து வைத்துவிட்டு வந்துவிட்டார். சாமியை சுமந்தபடி நீதிமன்றம் முன்பு வந்து நின்றார்கள் தென்செட்டி ஏந்தல் சாமிதூக்கிகள்.அப்போது நீதிபதி அவர்களிடம், நான் மறைத்து வைத்துள்ள பொருட்களை உங்கள் சாமி கண்டு எடுக்கட்டும் என

புதன், 28 அக்டோபர், 2015

ஜல்லிக்கட்டு ஆவணம்.THE HINDU NEWS

ஜல்லிக்கட்டை பறைசாற்றும் கல்வெட்டு!- 400 ஆண்டு பழமையானது
Updated: January 14, 2015 14:38 IST | வி.சீனிவாசன்
  

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நீதிமன்ற உத்தரவை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 400 ஆண்டுக்கு முன்னர் குறுநில மன்னர்களால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதை பறைசாற்றும் விதமான கல்வெட்டு சேலம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டால் பல உயிர்கள் பந்தாடப்படுகிறது என்று செல்லி சிலர் நீதிமன்றத்தை நாடியதால், ஜல்லிக்கட்டு விழா நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. வீர விளையாட்டுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதால், தமிழர்கள் மனம் பொங்கினர். நாலாபுறமும் அதிருப்தி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது சம்பந்தமாக நீதிமன்றம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா வாழையடி வாழையாக நடத்தப்பட்டு வரும் விழா என்பதற்கு ஆதாரமாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளையை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசு பொருளை எடுக்கும் வீரனின் சிலை கிடைத்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெத்தநாயக்கனபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையில், காளை அடக்கும் வீரனின் உருவமும், அந்த வீர விளையாட்டை விவரிக்கும் சொற்றொடர்களும் பொறிக்கப்பட் டுள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குறு நில மன்னர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, அதற்கு சான்றாக கல்வெட்டை செதுக்கி வைத்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சேலம் வரலாற்று சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ் கூறியதாவது:

பொங்கல் விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், முன்னோர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியும், காளையை அடக்கும் வீரனும், சேலம் அருங்காட்சியகத்தில் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு அம்சங்கள், தேவையான முதலுதவி, மரபு சார்ந்த விளையாட்டில் தேவையான மாற்றங்கள், கூட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறை உதவி உள்ளிட்ட விதிமுறைகள் வகுத்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் வெறெங்கும் இல்லாத வகையில், சேலத்தில் 400 ஆண்டு பழமை யான ஜல்லிக்கட்டு காளை கல்வெட்டு, நம் வீர விளையாட்டை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உள்ளதை கருத்தில் கொண்டு, நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு சேலம் அருங்காட்சி யகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.