புதன், 28 அக்டோபர், 2015

ஜல்லிக்கட்டு ஆவணம்.THE HINDU NEWS

ஜல்லிக்கட்டை பறைசாற்றும் கல்வெட்டு!- 400 ஆண்டு பழமையானது
Updated: January 14, 2015 14:38 IST | வி.சீனிவாசன்
  

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதில் நீதிமன்ற உத்தரவை தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் 400 ஆண்டுக்கு முன்னர் குறுநில மன்னர்களால் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதை பறைசாற்றும் விதமான கல்வெட்டு சேலம் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டால் பல உயிர்கள் பந்தாடப்படுகிறது என்று செல்லி சிலர் நீதிமன்றத்தை நாடியதால், ஜல்லிக்கட்டு விழா நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது. வீர விளையாட்டுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டதால், தமிழர்கள் மனம் பொங்கினர். நாலாபுறமும் அதிருப்தி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு விழா நடத்துவது சம்பந்தமாக நீதிமன்றம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா வாழையடி வாழையாக நடத்தப்பட்டு வரும் விழா என்பதற்கு ஆதாரமாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளையை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசு பொருளை எடுக்கும் வீரனின் சிலை கிடைத்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெத்தநாயக்கனபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையில், காளை அடக்கும் வீரனின் உருவமும், அந்த வீர விளையாட்டை விவரிக்கும் சொற்றொடர்களும் பொறிக்கப்பட் டுள்ளது. பெத்தநாயக்கன்பாளையத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குறு நில மன்னர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, அதற்கு சான்றாக கல்வெட்டை செதுக்கி வைத்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சேலம் வரலாற்று சங்க பொதுச் செயலாளர் பர்னபாஸ் கூறியதாவது:

பொங்கல் விழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில், முன்னோர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியும், காளையை அடக்கும் வீரனும், சேலம் அருங்காட்சியகத்தில் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை, பாதுகாப்பு அம்சங்கள், தேவையான முதலுதவி, மரபு சார்ந்த விளையாட்டில் தேவையான மாற்றங்கள், கூட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறை உதவி உள்ளிட்ட விதிமுறைகள் வகுத்து, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் வெறெங்கும் இல்லாத வகையில், சேலத்தில் 400 ஆண்டு பழமை யான ஜல்லிக்கட்டு காளை கல்வெட்டு, நம் வீர விளையாட்டை உலகுக்கு பறைசாற்றும் வகையில் உள்ளதை கருத்தில் கொண்டு, நல்லதொரு தீர்ப்பை நீதிமன்றம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் 400 ஆண்டு பழமையான கல்வெட்டு சேலம் அருங்காட்சி யகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக