வியாழன், 14 மே, 2026

ஜவ்வாது மலை,கோவிலூர் நடுகல் மற்றும் கல்வெட்டுகள்

ஜவ்வாது மலை,கோவிலூர் நடுகல் மற்றும் கல்வெட்டுகள்

சோழர் கல்வெட்டு:

கோவிலூரில் உள்ள திருமூலநாதர் கோயிலின் கருவறையின் தெற்கு பக்கத்தில் முப்பட்டைக் குமுதத்தில் 

*வீர ராஜேந்திர சோழனின் 3-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில் ‘கங்க குறுநில மன்னன் பிரிதிவி கங்கன் அரசகங்கள் நாயன் வருகிறான்’ 
என குறிப்பிடப்பட்டுள்ளது. 

*மூன்றாம் இராஜராஜ சோழனின் 29-ம் ஆட்சியாண்டு கல்வெட்டில்
 ‘பிருதிவி கங்கன் கூத்தாடுந்தேவன்’ என்பவரின் பெயர் உள்ளது.

(இந்தக் கல்வெட்டில் திருமூலநாதர் கோயிலுக்கு எதிரில் ஒரு குளம் வெட்டிய தகவலும் பெரிய ஏரிக்கு தும்பு அமைத்துள்ள தகவலும் உள்ளது.)

(கருவறையின் தெற்கு சுவரில் விஜய நகர மன்னரின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.)

(திருமூலநாதர் கோயிலுக்குரிய இரண்டு லிங்கங்கள், பிள்ளையார், திருமால், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் பைரவர் கற் சிலைகள் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவந்துள்ளது.)

பிற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒரு நடுகல் திருமூலநாதர் கோயில் வளாகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

கல்செக்கு கல்வெட்டு:

9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் “பரதன் காரிதன் மகன் வென்றிட்டிட வாட்டி மோடி செக்கு"

என பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்த செக்கின் கல்வெட்டு தவிர மற்ற பகுதி கழனியில் புதைந்துள்ளது. இந்த செக்கின் விட்டம் 75 செ.மீ. 

இந்த நிலத்திற்கு தெற்கில் மேட்டில் வெங்கடேசன் என்பவரது நிலத்தில் இரண்டு கல் செக்குகள் காணப்படுகின்றன.

ஒரு செக்கில் “பரதன் காரிதன் மகன் (வெ)ன்றிட்டிட செக்கு” என்றுள்ளது. 

இந்த செக்கின் விட்டம் 1 மீட்டர் 20 சென்டி மீட்டர். அதே நிலத்தில் வேறு கல் செக்கும் மேற்படி கொடையாளி அளித்திருக்கிறார். இந்தச் செக்கின் விட்டம் 1மீட்டர். 

செக்குகள் செய்த காலத்தில் அதிக அளவில் இலுப்பை மரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆமணக்கு அதிக அளவில் விளைந்திருக்க வேண்டும். இவற்றின் விதைகளை செக்கில் இட்டு ஆட்டி எண்ணெய் எடுத்து வீட்டுக்கு பயன்படுத்தி கோயிலுக்கும் விளக்கேற்றியிருக்க வேண்டும். தற்காலத்தில் இலுப்பை மரங்கள் இல்லை என்பதுடன் ஆமணக்கு பயிரிடுவதும் குறைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

புலி குத்திப்பட்டான் நடுகல்: 

திருமூலநாதர் கோயில் கோபுரத்துக்கு வடகிழக்கு பக்கத்தில் ஒரு புலிக்குத்தி நடுகல் உள்ளது. 

“மங்கல பரிதந் மூலகத்துக்கு மகன் வில்லி புலி குத்திப் பட்டான்” 
என்ற கல்வெட்டும் உள்ளது. 

இந்த புலிக்குத்திக் கல், 10-ம் நூற்றாண்டுக்குரியது. 

கங்க மன்னன் பெயர் கல்வெட்டு:

கோவிலூர் ஊருக்கு நுழையும் முன்பாக சாலை ஓரத்தில் வேலியில் மறைந்துள்ள ஒரு அரசனின் சிற்பம் நிற்கிறது. 

அதில், “கலிதாநம் தந்தான் அழகிய கங்க நாடாழ்வான்” என்று கல்வெட்டுள்ளது.

இவர், ஒரு கங்க குறுநில அரசராவார். இந்தச் சிற்பம் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 


நன்றி:

இந்து தமிழ் நாளிதழ்,
தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனத்தின் செயலர் மற்றும் வேலூர் அரசு அருங்காட்சியக ஓய்வு பெற்ற காப்பாட்சியர் ம.காந்தி, 
பொருளாளர் முனைவர் ப.வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை தொல்லியல் ஆலோசகர் பொறியாளர் மணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக