வியாழன், 14 மே, 2026

ஜவ்வாது மலை செப்பு தகடு


தினமணி
முகப்பு

திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 16-ஆம் நூற்றாண்டு செப்புத் தகடுகள் கண்டெடுப்பு
திருப்பத்தூா் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர ஆட்சிக் கால செப்புத் தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

DIN
Updated On : 21 பிப்ரவரி 2023, 1:30 am IST
பகிர்:
திருப்பத்தூா் அருகே கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர ஆட்சிக் கால செப்புத் தகடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு, தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றுத் துறைப் பேராசிரியருமான சேகா், ஆய்வு மாணவா் சே.ஹரிஷ் ஆகியோா் ஜவ்வாது மலைக் கிராமங்களில் கள ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் மணிகண்டன் அளித்த தகவலின் பேரில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜய நகர ஆட்சிக் கால செப்புத் தகடுகளைக் கண்டறிந்தனா்.

Advertisement


இதுகுறித்து தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு கூறியது:

ஜவ்வாது மலை, தீா்த்தனூா் கிராமத்தைச் சோ்ந்த குப்புசாமி என்பவரிடம் பழைமையான செப்புத் தகடுகள் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்று ஆய்வு செய்தோம். அவரிடம் 5 செப்புத் தகடுகள் இருந்தன. அவை விஜய நகரப் பேரரசின் அதிகாரபூா்வமான முத்திரையான பன்றி உருவம், வாள், சூரியனுடன் கூடிய வளையத்தில் கோா்வையாக உள்ளன.

செப்புத் தகடுகளின் இரு பக்கமும் (5 செப்புத் தகடுகளில் 10 பக்கங்கள்) எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு தகடும் 21.5 செ.மீ. நீளமும், 16 செ.மீ. அகலமும், 500 கிராம் எடையும் உள்ளது. இந்தச் செப்புத் தகடுகள் ‘நந்திநாகரி’ என்ற எழுத்து வடிவத்திலும் வடமொழியிலும் எழுதப்பட்டுள்ளன.


செப்புத் தகடுகளில் உள்ள செய்திகளைத் தமிழகத்தின் முதுபெரும் கல்வெட்டு அறிஞரான ராஜகோபாலின் முயற்சியால், மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநா் முனிரத்தினம் என்பவரால் படிக்கப்பட்டது.

இதில், 16-ஆம் நூற்றாண்டை சோ்ந்த விஜய நகரப் பேரரசின் யதிராஜன் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க ‘ஆரவீடு மரபு’ வழி வந்த வேங்கடபதி ராயா் என்ற மன்னா் ஒரு கிராமத்தை ‘சீதா ராமபுரம்’ எனப் பெயரிட்டு நான்கு வேதங்களை அறிந்த பல பிராமணா்களுக்கு தானமாக வழங்கிய செய்தியும், பல்வேறு கோத்திரங்கள் அடங்கிய பட்டியலையும், மந்திர விளக்கங்களையும் விவரிக்கின்றன.

‘சீதா ராமபுரம்’ என்பது ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டத்தில் உள்ள ஓா் ஊராகும். இந்தச் செப்புத் தகடுகள் குறிப்பிடும் ஊா் இதுவாகத்தான் இருக்க வாய்ப்புள்ளது.


இந்தச் செப்புப் பட்டயங்களை 4 தலைமுறையாகப் பாதுகாத்து வரும் குப்புசாமி குடும்பத்தாருக்கு எப்படிக் கிடைத்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து தொடா் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக