சனி, 28 பிப்ரவரி, 2026

கல்வராயன் மலை செக்கு கல்வெட்டு

சின்னமாங்கோடு செக்கு கல்வெட்டு:
Chinnamangodu chekku inscription:

சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம்,கல்வராயன் மலையில் கருமந்துறைக்கு வடக்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ள சின்னமாங்கோடு கெக்குப் பாறைக் காட்டில் உள்ள பாறை.

கல்வெட்டு :

ஸ்வஸ்தி ஸ்ரீ கோப்பரகேசரிவன்மாராகிய ஸ்ரீ ராஜேந்திர சோழதேவற்கு.. திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற யாண்டாவது பதினைஞ்சாவது மிலாடாகிய சனநாதவளநாட்டு வெண்காட்டு மாலத்துறவிநாட்டுச் சிறுமாங்கோடு சடய தேவனெ அணம்பிக்கன் இடுவித்த செக்கு.

செய்தி:

11 ஆம் நூற்றாண்டில்(கி.பி.1027),முதல் இராசேந்திர சோழன் ஆட்சியில்,மிலாடு நாட்டில்,சனநாதவளனாட்டு பகுதியில், வெண்காட்டு மால துறவி நாட்டில் உள்ள சிறு மாங்கோடு ஊரை சார்ந்த சடையதேவன் அணம்பிக்கன்,செக்கு ஒன்றை தானமாக கொடுத்தல்.

(கல்வராயன் மலையில் காராளர்(karalar)(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை வெள்ளாளர்) என்னும் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வினத்தை சார்ந்த ஒருவர் தானமாக கொடுத்த செக்கு இது.சடைய தேவன் என்ற சொல் குடும்ப மூத்த பையனாக இருக்கலாம் அல்லது பெயராக இருக்கலாம்)

நன்றி - ஆவணம் இதழ் 12


ஞாயிறு, 15 பிப்ரவரி, 2026

புழுதிகுட்டை செக்கு கல்வெட்டு

புழுதிகுட்டை செக்கு கல்வெட்டு:
Puzhudhikuttai chekku inscription:

சின்ன கல்வராயன் மலை தொடர்ச்சி அடிவாரத்தில் அமைந்துள்ளது புழுதிக்குட்டை கிராமம்.

(இம்மலை தொடர்ச்சி மேல் பலாப்பாடி,அறுநூத்துமலை,சிறுமலை, அலரிப்பட்டி(ஆல்ரிப்பட்டி),சின்ன வேளாம் பட்டி,பெரிய வேளாம் பட்டி கிராமங்கள் உள்ளது.)

இங்கு கரி வரதராஜ பெருமாள் (கரிய பெருமாள், கரியராமர்)கோயில் உள்ளது.

இது(karalar)காராளர்(மலையாளி,மலையாள கவுண்டர்,மலை கவுண்டர்,மலை வெள்ளாளர்) இனத்தில் குறிப்பிட்ட குலம் வழிபடும் கோவில் ஆகும். இக்கோவில் முன் கல்செக்கு கல்வெட்டு உள்ளது.இது 1000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஆகும்.

காலம்: பொ.ஆ 10 ஆம் நூற்றாண்டாகலாம்

செய்தி:

தரையிலிருந்து கல்செக்கானது 40 செ.மீ உயரமுடையது.இதன் வெளிவிட்டம் 57 செ.மீ,உள் விட்டம் 45 செ.மீ அளவுடையதாகவும் உள்ளது.

செக்கின் நடுவிலுள்ள குழியின் ஆழம் 30 செ.மீ, விட்டம் 20 செ.மீ ஆகும். உள்விட்டம் உள்ள பகுதியில் இரண்டு வரிகளில் 12 வார்த்தைகளில் கல்வெட்டானது அமைந்துள்ளது.

எழுத்தின் வடிவத்தை கொண்டு இது 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம்..

*விளக்கமாறன் என்பவன் தன் மகன் மூக்கன் என்பவன் நினைவாக செய்து கொடுத்த கல்செக்கு இதுவாகும்*

*இங்கு வந்து வணங்கி பூஜை செய்பவர்களுக்கு பிழியப்பட்ட புண்ணாக்கு மூன்றை தரும்படி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டு பகுதி:-

*1. ஸ்ரீ விளக்கமாறனேன் என் மகன் மூக்கனைச்சாத்தி இட்ட செக்கு. பூசித்தனா*

*2. ற்ர்க்கு பிழி பிண்ணாக்கு மூன்று*

*சேலம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான 'மகன் நினைவு' கல்செக்கு கல்வெட்டு*

கட்டுரையாளர்:

*ஆறகளூர் பொன்.வெங்கடேசன்* (வரலாற்று ஆய்வாளர் & களப்பணியாளர்)

தமிழகத்தின் கிராமப்புறங்களில் காணப்படும் கல்செக்குகள் என்பவை வெறும் எண்ணெய் எடுக்கும் கருவிகள் மட்டுமல்ல; அவை அந்தந்த காலத்தின் சமூக, பொருளாதார மற்றும் அறநெறி சார்ந்த வரலாற்று ஆவணங்களாகும்.

நன்றி பொன் வெங்கடேசன் ஐயா..