வெள்ளி, 8 மே, 2026

சேம்பரை கிராமம் கல்வெட்டு,ஜவ்வாது மலை.

ஜவ்வாது மலை,சேம்பரை சோழர் கல்வெட்டு

இடம்
சேம்பரை கிராமம்,
புதூர் நாடு,
ஜவ்வாது மலை

கல்வெட்டு

கல்வெட்டு வாசகம் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.

ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்து
ங்க சோழ தேவற்கு யா
ண்டு 49 ஆவது ஜயங்
கொண்ட சோழ மண்டல
த்து பங்கள நாட்டு தெற்கில்
வகை மேல் வேழ நாட்டு
நவிரமலை புனா நாடுடையன்
உடையான் மாதன் மகனான
தனாந வீர சோழ நவிரமலை
. . . ஆ சிவறனை
யா .. அண்ணாமலை
ட்டு கா . . றும் மே வரு வேண
ழுன் தாராவிட் டநன்

என்று கல்வெட்டு முடிவடைகிறது.

விளக்கம்
முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில்,மன்னனது 49 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி.1119),ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில்,பங்கள நாட்டுக்கு தெற்கில் உள்ள வேழ நாட்டு பகுதியில் இருக்கும் நவிரமலையில் (ஜவ்வாது மலையில்) புனா நாட்டை சார்ந்த உடையான் மாதன் என்பரின் மகனான தனான வீர சோழன் என்ற சிற்றரசன் அண்ணாமலை(சிவன்)  இறைவனுக்கு தானம் விட்ட செய்தி.கல்வெட்டின் கடைசி பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது.கல்வெட்டு வாசகம் சரியாக தெரியவில்லை.

நவிரமலை

நவிரமலை என்று பொருள். சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் நவிரமலை, நன்னன் சேய் நன்னனின் மலை எனக் கூறுகிறது. 

எனவே இன்றைய ஜவ்வாது மலைக்கே சங்க காலத்தில் நவிரமலை என்று பெயர் இருந்தது என்பதை இக்கல்வெட்டு உறுதிபட எடுத்துரைக்கிறது.


அதிலும் குறிப்பாக இன்றைக்கு வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லி வாசல் நாடுகள் அமைந்துள்ள ஜவ்வாதுமலைக்கே நவிரமலை என்று பெயர் இருந்ததை இக்கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது.

அதிலும் குறிப்பாக பருவதமலையில் கிடைத்துள்ள ராஜராஜ சோழனின் கல்வெட்டு, பருவதமலையே பருவதங்கிரி என்று வழங்குவதால், பருவதமலை வேறு நவிரமலை வேறு என்ற புதிய வரலாற்றுக் குறிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்பட்டுள்ளது. 

வேழ நாட்டு நவிரமலை என்று இம்மலை அழைக்கப்பட்டதை நோக்குவது அவசியமாகிறது. ஏனென்றால் வேழம் என்பது ஆண் யானைக்கு வழங்கப்படும் செந்தமிழ்ச் சொல்லாகும். இங்கு வேழம் என்று ஆண் யானையைக் கூறுவதை விட, பொதுநிலையில் யானைகளின் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். 

மலைபடுகடாம் என்பது கூட யானையின் பிளிறல் ஒலி எனும் பொருளிலேயே வருகிறது. எனவே சங்க இலக்கியம் யானைக் கூட்டம் நிறைந்த நவிரமலை என்று கூறுவது இந்த ஜவ்வாது மலைப் பகுதியே என்பது இக்கல்வெட்டு மூலம் உறுதிப்படுகிறது.

உடையான் மாதன் மகன் தனான வீர சோழன்

ஜவ்வாது மலையில் உள்ள புனா நாட்டை (இன்றைய புதூர் நாடாக இருக்கலாம்) சேர்ந்த உடையான் மாதன் என்பவரது மகன் தனான வீர சோழன் ஆவார்.தந்தை சோழருக்கு அடங்கிய அதிகாரியாக இருந்திருக்கிறார் அவருக்கு பின் அவர் மகன் தனானன் வீர சோழன் ஆட்சி செய்திருக்கிறார்.

உடையான் என்பது அனைத்தும் உடையவர் என்னும் பொருள் படும்.அதாவது அந்த பகுதிக்கு மன்னர்,அதிகாரி அல்லது நாட்டார் என பொருள் படும்.

சோழ மன்னர்களுக்கும் உடையார் உடையான் என பெயருக்கு முன் வருவது குறிப்பிடத்தக்கது

சோழ மன்னர்கள் கீழ் ஆட்சி செய்பவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் சோழர் பெயரை இட்டுக்கொள்வர்.அதன் படி வீர சோழன் என்னும் பெயர் இவர் கொண்டிருக்கிறார்.

பங்கள நாடு - வேலூர்,போளூர் மற்றும் செங்கம் ஜவ்வாது மலை பகுதியை உள்ளடக்கியது.
பங்களா நாட்டு தெற்கு பகுதி செங்கம் ஆகும்.மேல் வேழ நாட்டு நவிரமலை என்பது செங்கத்திற்கு மேற்கில் உள்ள யானைகள்(வேழம்) நிறைந்த நாட்டில்  நவிரமலை(ஜவ்வாது மலை) ஆகும்.

நன்றி - திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் க.மோகன்காந்தி, 
மதுரை தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசியர் ரே.கோவிந்தராஜ், காணிநிலம் முனிசாமி உள்ளிட்டோர்
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக