இடம் :
வேலூர் மாவட்டம்,
ஜவ்வாது மலை,
ஜமுனாமரத்தூருக்கு அருகில் அத்திப்பட்டு என்னும் ஊரில் வசிக்கும் கோவிந்தன் நாட்டார் என்பவரிடம் உள்ள ஓலைச் சுவடி.
ஆண்டு - கி.பி 1870
ஜவ்வாது மலையில் காராளர்(மலையாளி) என்னும் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த கார்காத்த வெள்ளாளர்(காரைக்காட்டு வெள்ளாளர்) ஆவர்.இவர்கள் தங்களை பூபாள முதலி என்றும் அழைத்துக்கொள்கிறார்கள்.
இந்த ஜவ்வாது மலையில் உள்ள மக்களுக்கு அந்த மலையின் பெரியமலை(காண மலை) நாட்டு பட்டக்காரர்,தலைமை பட்டக்காரர் அல்லது ராஜா ஆவார்.இந்த ராஜா தலைமையில் ஏற்ப்பட்ட நாட்டார் பதவி பற்றிய ஆவணம் இது.
செய்தி:
ஜவ்வாது மலையில் எழுபது மலைக்குப் பெரிய மலை நாட்டாராகிய ஆண்டிக்கவுண்டன் குமாரனாகிய சின்னாண்டி கவுண்டன் நாட்டார் முன்பாக, நடுபத்து நாட்டுக்கு எது(ஜ)மானனாகிய அருணாசலகவுண்டன் பேரனாகிய ஆண்டிக் கவுண்டனுக்கு எழுதிக்கொடுத்த 13 கிராமங்கள் பற்றியது.
ஓலை ஆவணம் முன் பக்கம்:
1. பிறமாதூத வரு ஆவணி மீ 21 எழுபத்துமலைக்கி பெரியமலை நாட்டாராகிய ஆண்டி கவுண்டன் குமார நாகிய.
2. சின்னாண்டி கவுண்டன் நாட்டார் முன்பாக நடுபத்து நாட்டுக்கு எது மானனாகிய அருணாசலகவுண்டன் பேரனாகிய ஆண்டிக்.
3. கவுண்டனுக்கு எழுதிக் குடுத்த கிராமங்கள் விபரம் கல்லியாண மந்தை - 1, யெலாமரத்தூர் 2 சின்னவ்வர் குட்டை 3. குறி
4. யானுறு 4, தெத்தூறு 5, அத்திப்பட்டு 6, பொன்னா நெல்லிமரத்தூர் - 7. ... மாட்டுக்கானூறு 9, கும்புபெலா.
5. மரத்தூறு 10, ஆட்டியானூறு 11. புள்ளிச்சை குட்டை 12, நல்லா ...மங்களம் 13 பதிமூன்றும் ஒனக்கு
ஓலை ஆவணம் பின்பக்கம்:
6. சேர்ந்தபடியால் நீயே அனுபவித்து கொள்ளவும் மேலும் சேலம் ப ப்ப கவுண்டனுக்கு யாதொறு பாத்தியமும்
7. மில்லை யிந்த படிக்கி யென்ங்கள் றாசியில் எழுதி குடுத்த கிறாமங்கள் விபரம், யிதர்க்கு சாஷச்சியகேஅரள்ளி கவுண்டன்.
8. மகன் அறுணாசல கவுண்டன் அறுவேன் பழங்கோட்டை நாடு நாட்டான் கட்டிய கவுண்டன் மகன் வெள்ளைய கவுண்டன் அறுவேன் பள்ளப்ப நாடு
9. பெலாம பட்டு காடைய கவுண்டன் தட்டான் நடுல்ல கவுண்டர் அறுவேன். எழுதி நல்மைக்கி காஞ்சிபுரம் அருணாசல முதலியார் சோறுத்
10. தலகிதம் யிதக்கு யாராவது விற்பன்னம் செயிதால் காராவை கொன்ன பாவத்தில் போக வேண்டியது சுப மஸ்த்து.
விளக்கம்:
பிறமாதூத வருடம் ஆவணி 21 ஆம் தேதி, எழுபத்துமலைக்கு பெரியமலை நாட்டாராகிய ஆண்டி கவுண்டன் குமாரனாகிய சின்னாண்டி கவுண்டன் நாட்டார் முன்பாக நடுபத்து நாட்டுக்கு நாட்டாரக (எஜமானனாக) இருக்கும் அருணாசலகவுண்டன் பேரனாகிய ஆண்டிக்கவுண்டனுக்கு எழுதிக் குடுத்த கிராமங்கள் விபரம்,
கல்லியாண மந்தை - 1,
எலாமரத்தூர் 2,
சின்னவ்வர் குட்டை 3,
குறியானூர் 4,
தெத்தூறு 5,
அத்திப்பட்டு 6,
பொன்னா நெல்லிமரத்தூர் - 7,
. ......... 8,
மாட்டுக்கானூர் 9,
கும்புபெலாமரத்தூர் 10,
ஆட்டியானூறு 11.
புள்ளிச்சை குட்டை 12,
நல்லா ...மங்களம் 13
இந்த பதிமூன்றும் ஊரும் உனக்கு
சேர்ந்தபடியால் நீயே அனுபவித்து ஆண்டு கொள்ளலாம்,மேலும் இதற்கும் சேலம் ப.......... ப்ப கவுண்டனுக்கு யாதொறு உரிமையும்(பாத்தியமும்) இல்லை.
(இந்த ஆண்டி கவுண்டரின் உடன் பிறந்தவரோ அல்லது பங்காளியோ சேலம் பகுதியில் ஆட்சி செய்துள்ளனர் என்பது தெளிவாகிறது.இந்த சேலம் பகுதியில் உள்ள ப....ப்பா கவுண்டன் உரிமைக்கு வர கூடாது என்று முடிவு செய்துள்ளார்கள்)
இதன்படிக்கு(மேற்குறிப்பிடப்பட்ட ஊர்கள்) எங்கள் இராச்சியத்தில் எழுதி குடுத்த கிராமங்கள் விபரம் ஆகும்.
இதற்கு சாட்சியானவர்கள்:
1.அரள்ளி கவுண்டன் மகன் அருணாசல கவுண்டன் அறிவேன்
2.பழங்கோட்டை நாடு நாட்டான் கட்டிய கவுண்டன் மகன் வெள்ளைய கவுண்டன் அறிவேன்
3.பள்ளப்ப நாடு பெலாம பட்டு காடைய கவுண்டன்
4.தட்டான் நடுல்ல கவுண்டர் அறிவேன்.
(தட்டான் என்ற சொல் இரும்பு சம்பந்தப்பட்ட வேளாண் கருவிகளான ஏர் கலப்பை,மண்வெட்டி,களை வெட்டி, கொடுவாள் மற்றும் அருவாள் போன்ற கருவிகள் செய்யும் கொல்லரை குறிக்கும் சொல்லாக இருக்கலாம்.இம்மலை மக்கள் விவசாயம் முதல் மற்ற எல்லா தொழில்களும் கற்ற மக்கள் ஆவர்.எனவே இரும்பு கருவிகள் செய்யும் கொல்லராக பொருள் கொள்ளலாம்)
இந்த ஆவணத்தை எழுதியவர் காஞ்சிபுரம் அருணாசல முதலியார் ஆவார்.
சோறுத்தலகிதம் இதற்கு யாராவது கேடு (விற்பன்னம்) செய்தால் காராம் பசுவை கொன்ற பாவத்தில் போக வேண்டியர் ஆவர்.
நன்றி - ஆவணம் இதழ் 16,பக்கம் 79
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக