செவ்வாய், 29 செப்டம்பர், 2026

சித்திரமேழி கொல்லன் கல்வெட்டு,ஜவ்வாது மலை

ஜவ்வாது மலை சித்திரமேழி கொல்லன் கல்வெட்டு

இடம்:
வேடியப்பன் கோவில்,
பெரும்பள்ளி கிராமம்,
புங்கம்பட்டு நாடு,
ஜவ்வாது மலை.

காலம்: 12 - 13 ஆம் நூற்றாண்டு

செய்தி:

நாவகரும சோமநந்தி என்றழைக்கப்பட்ட சித்திரமேழி (பெரியநாட்டார்) கொல்லனுக்கு காணியாக நிலம் அளிக்கப்பட்டமை.யாரால் அளிக்கப்பட்டது என தெரியவில்லை.

கல்வெட்டு:

1. ஸ்வஸ்தி நாவ

2. கரும

3. சோமந்தி

4. தந் சித்திர

5. மேழிக் கொல்

6. லந் தந் கா

7. ணியாகக்

8. கொடுத்தோ[ம்]

குறிப்பு:

*நாவ கருமர்:

"நவகருமர் (நாவ கருமர்)" என்பவர் பழுதுகளை சரி செய்பவர்.

(எந்த இடத்தில் இந்த வார்த்தை வருகிறதோ,அந்த இடத்தில் உள்ள பழுதுகளை சரி செய்பவர் என பொருள் கொள்ள வேண்டும்.)

*சோமந்தி :

"சோம நந்தி" என்னும் பெயரின் திரிபு "சோமந்தி" ஆகும்.சித்திரமேழி பெரிய நாட்டார் குழுவில் இருந்த கொல்லனுடைய பெயர் ஆகும்.

பழமையான சிவன் கோவிலில் ஒன்பது நந்திநாதர் சிலைகளில் "சோம நந்தியும்" ஒரு நந்தி.

(பத்ம நந்தி,நாக நந்தி,விநாயக் நந்தி,மகா நந்தி,சோம நந்தி,சூரிய நந்தி,கருட நந்தி, விட்டுணு(விஷ்ணு) நந்தி, சிவ நந்தி)

இக்கல்வெட்டின் மூலம் ஜவ்வாது மலையில் சித்திர மேழி வணிக குழு இருந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது.

*சித்திரமேழி பெரியநாட்டார்:

"சித்திரமேழி பெரிய நாட்டார்" என்பவர்கள் ஒரு வணிக குழுவினர்.இவர்கள்,உழுது கிடைக்கும் வேளாண்மை பொருள்கள், எங்கு அதிகமாக கிடைக்குமோ, அங்கெல்லாம் சென்று தங்கி,பொருள் வாங்கி வியாபாரம் செய்பவர்கள்.

*இக்கல்வெட்டின் மூலம் 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே,ஜவ்வாது மலையில்(நவிரமலை) உழுது பயிர் செய்யும் வேளாண் தொழில்கள் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

நன்றி- ஆவணம் இதழ் 24




திங்கள், 28 செப்டம்பர், 2026

அலைவாய்மலை பட்டயத்தில் காராளர்கள்(மலையாளி) (கி.பி.1786)

அலைவாய்மலை பட்டயத்தில் காராளர்கள்(மலையாளி)

சேலம் மாவட்டம்,ராசிபுரம் வட்டத்திற்கு உட்பட்ட அலைவாய்மலை சுப்பிரமணி கடவுளுக்கு திருவிழா நடத்த வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பு பற்றி விவாதிக்க,கி.பி.1786 ஆம் ஆண்டு நாட்டுசபை (மகாநாடு) கூடுகிறது.

சேலம் நாடு என்றழைக்கப்பட்ட பகுதியிலிருந்து அந்தந்த நாட்டுக்கு உட்பட்ட தலைவர்கள்(நாட்டார்கள்) மற்றும் முக்கிய நபர்கள் இந்த மகாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இம்மகாநாட்டில் காராளர்(மலையாளி) இனத்தை சார்ந்தவர்களும் கலந்து கொள்கிறார்கள்.அவர்கள்,
1.கருத்தாண்டிக் கவுண்டர் - சேல நாடு, சேருவா மலை.

2. மலையக் கவுண்டர்,கரியாண்டிக் கவுண்டர் - முட்ட நாடு.

3.சொக்காண்டிக் கவுண்டர் - முக நாடு(முகை நாடு).

4. காளிக் கவுண்டர் - போதமலை (கொல்லிமலையின் தொடர்ச்சி).

*சேர்வராயன் மலை மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை 
1.சேல நாடு(சேலம் நாடு),
2.முக நாடு(முகை நாடு),
3.முட்ட நாடு(முத்து நாடு).

*அலைவாய் மலை முருகன் கோவில், காராளர்(மலையாளி) இன மக்களுக்கும் பாத்தியப்பட்ட கோவில் என இப்பட்டயம் மூலம் அறிய முடிகிறது.

கோவிலுக்கான வரி:
மேழி பிடிச்சு உழுத குடிகளுக்கு ஒரு வருதத்துக்கு ஒரு ஏருக்கு பணம் 1/4 மேரை,

பல பட்டடை செட்டி வர்த்தகர்கள் எப்பேர்பட்ட சாதிக்கும் தலைகட்டுக்கு பணம் 1/4 மேரை, 

சுங்கம் 1க்கு பெரியகெடி 5 பணம், சின்னகெடி பணம் 3.

("மேரை" என்பது பணத்திற்கு பதில் கொடுக்கப்படும் 'தானியம்' அல்லது 'விவசாயப் பண்டங்கள்' ஆகும்)



நன்றி:
கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்,
புலவர் இராசு ஐயா

சனி, 26 செப்டம்பர், 2026

போதமலைச் செப்பேடு (1782 ஆம் ஆண்டு)

போதமலைச் செப்பேடு:

சேலம் மாவட்டம் இராசிபுரம் வட்டம் போதமலை மேலூர் சிரக்காளி அண்ணாமலைக் கவுண்டர் என்பவரிடம் இச்செப்பேடு உள்ளது. ஒரு தீவிபத்தில் செப்பேட்டின் ஒருபகுதி எரிந்து விட்டது.

1782 ஆம் ஆண்டு,குரோதி வருடம்,தை மாதம்,25ஆம் நாள்,இச்செப்பேடு எழுதப்பெற்றது. 

செப்பேடு காலம் கி.பி.1860 என தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.குரோதி வருடம் 1784,1844,1904,1964 என்னும் வரிசையில் தான் வருகிறது.அப்படி பார்த்தால் 1784 ஆம் ஆண்டில் செப்பேடு வெட்டப்பட்டிருக்க வேண்டும்.

செய்தி:

1.போதமலை(போகர் மலை),மேலூர் சிரக்காளி வீடு அண்ணாமலைக் கவுண்டருக்கும், அதே மலையைச் சேர்ந்த கீழூர் மசிய(மசியன்) வீடு காத்தாக் கவுண்டருக்கும்,"நாட்டார்" அதிகாரம் தொடர்பான வழக்கு ஏற்படுகிறது.

2.வழக்குத் தீர்க்க பைல்(பயில்) நாடு பட்டக்காரர், நாட்டாண்மைக்காரர் உள்ளிட்ட நாட்டு சபை(மகாநாடு) கூட்டப்படுகிறது.

3.மகாநாட்டின் தீர்ப்பை மதிக்காமல்,மசியன் வீடு காத்தாக்கவுண்டரானவர் சிரக்காளி வீடு அண்ணாமலை கவுண்டர் மற்றும் மகா நாட்டின் மீது நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்.

4.நீதிமன்ற வழக்கில் 516.40 ரூபாய் செலவு செய்து சிரக்காளி அண்ணாமலை கவுண்டர் வெற்றிப் பெறுகிறார்.

5.குரு துரோகம் (மகாநாட்டின் தீர்ப்பை அலட்சியம்) செய்த மசிய வீடு காத்தாக்கவுண்டருக்கும்,எட்டு வீட்டு கசக்காளி பங்காளிகளுக்கும் மற்றும் சடக்க வீடு பெரிய கவுண்டருக்கும்,3 மலை,14 பட்டி,5 நாடு,ஆயிரம் கோம்பை 18 கரைக்காரர்கள்(கரை - பங்காளி) அறிய முதல் உரிமைகள்,சாந்து பொட்டு மற்றும் விருது பட்டங்கள் பறிக்கப்படுகிறது.

6.சிரக்காளி அண்ணாமலை கவுண்டருக்கு குறிஞ்சியில் முதல் சீலை கட்டுதல்,போத மலை சித்தன் கோவிலில் முதல் சாந்து பொட்டு மற்றும் அனைத்து பாத்தியமும் கொடுத்து அதிகாரம் வழங்கப்படுகிறது.

7.சிரக்காளி அண்ணாமலை கவுண்டருக்கு மந்திரியாக கோசமணியன் வீடு அறப்பிளி கவுண்டருக்கு பதவி கொடுக்கப்படுகிறது.

8.மறுபடியும் "கசக்காளி கருமாக் கவுண்டன், நாடு கூட்டி சடக்க பாலாண்டி கவுண்டன், மேலூர் அண்ணாமலைக் கவுண்டன் இந்த மூனுபேரும் இந்தக் குருஞ்சிலை பாய்பட்டம் போடுவோம்.மந்திரி அறப்பபளிக் கவுண்டனுக்கு லேகம் பலிபோடுவோம். இவர்களை வைத்து இப்படி சம்மதித்து மாரியம்மன் திருவிழா நடத்துவோம்"என உறுதி ஏற்க்கிறார்கள்.

9.சிரக்காளி அண்ணாமலைக்கவுண்டர் குறிஞ்சியில் முதல் சீலை கட்டவும்,தன்னுடைய போதமலை சித்தன் கோவிலில்,அண்ணாமலைக் கவுண்டருக்கு முதல் சாந்தும் மற்றும் பாதி பாத்தியமும், ஒண்டி வீட்டு கசக்காளி கருமாக் கவுண்டருக்கு பிந்தின சாந்தும் மற்ற கரைக்காரருக்கு சகல சாந்தும்,குறிஞ்சி பூரா பாத்தியமும்" போன்ற உரிமைகள் கொடுக்கப்படுகிறது.

10. "அண்ணாமலைக் கவுண்டருக்கு மூணு மலை பதினாலு பட்டியும்,மூணில் ஒரு பாத்தியமும்,கொல்லிமலை மகாநாட்டுக்கு ஒருபாகமும்,மூணு சுரைகாரருக்கு ஒருபாகமும்" என உரிமைகளை பதிவு செய்கிறார்கள்.

11.இதில் தவறினால் "கொல்லிமலை மூலைக்கட்டி கருப்பு கேக்கும். பெரியசாமி கேக்கும்.ஆண்டியப்பன் கேக்கும். போதமலை சித்தனும் பெரிய சடையனும் கேக்கும். இந்த அத்தை கெடுத்தவன் தத்துப் பிள்ளை அத்துப்போகும்.காணிக்கு(ஒரே குடி வழியினர்) கருவில்லாமல் போகும். கட்டி உழ மாடு பாலில்லாமல் போகும். மூங்க முளையில்லாமல் போகும்.முத்திமி(மூத்த பிள்ளை) பிள்ளை அத்துப்போகும்.மகாநாடும் சகல குடியும்வைத்த சாபம்" என எச்சரிக்கப்படுகிறது.

12. இப்படிக்கு ஒப்பந்த பதிவு, இப்படிக்கு எங்கள் கையொப்பம், 
"வெள்விரித்தான், 
தொட்டரையன், 
மசியன் குப்பன், 
தலைக்காடு சப்பாணி இளையான் , 
போக்கன் மலையாக் கவுண்டன், 
புலியன் ஆண்டிக் கவுண்டன், 
சடையன் செல்லாக் கவுண்டன், 
குலவன் ஆண்டிக் கவுண்டன், 
தமுக்காட்டி ஆண்டிக் கவுண்டன், கோம்பைக் கவுண்டன், 
ஜடமாலை சீராக் கவுண்டன், 
தமுக்காட்டு அண்ணாமலைக் கவுண்டன், கல்லாங்குளத்து காரிய பெரியான், மேக்கினி காட்டு எலுமிச்சக் கவுண்டன், புதுமளவு மாணிக்க குலவன், 
எருமயன் பெரிய இளயாக் கவுண்டன், 
வாழதோப்பு பாட்டன், 
மேனடை அறப்பளி, 
மேக்கினிகாட்டு பெரியண்ணப் பையன், ஆண்டியப்பன் கோவில் பூசாரி".


*இச்செப்பேட்டின் மூலம் பயில் நாட்டின் அதிகார வரம்பிற்குள் போதமலை இருந்திருப்பது தெரியவருகிறது.

*கொல்லிமலை மகாநாடு என வருவதால்,கொல்லிமலைக்கு பகுதிக்கு உய்யன் வீடு பிரிவை சார்ந்தவர்கள் பட்டக்காரராக இருந்திருக்கிறார்கள் என தெரிய வருகிறது.


*செப்பேட்டில் நபர்களின் பெயர்களோடு அவர்களின் வீடு(குலம்) பெயர்கள் இடம்பெற்றுள்ளது.ஆனால் மக்களின் பேச்சு வழக்கப்படி இடம்பெற்றுள்ளது.அவை
1. உய்ய (உய்யன்)
2. சண்டா 
3. சிரக்காளி 
4.எருமையன் (எருமய)
5. குலவன் (கொழவ)
6.தும்புடையார் (தும்மினிய)
7. மேனடையன் (மேனடைய)
8. அலுங்கன் (அழுங்க)
9. ஆயிலன் (ஆயில)
10. புலியன் (பிலிய)
11. மசியன் (மசிய)
12.கசக்காளி
13. சடக்கன் (சடக்க)
14. மாணிக்கன் 
15. சப்பானி 
16.தமுக்காட்டி
17.சடையன்
18.வாழை
19. கோச மணியன்(கோச மணியை)


செப்பேடு மூலம்:

1782 வருஷம் (1860 ஆம் ஆண்டு) தை மாதம் 25 தேதிக்கு (குரோதி வருஷம்) சேலம் ஜில்லா ஆத்தூர் தாலூக்காவை சேர்ந்த கொல்லிமலை பையில்நாடு பட்டக்காரர் உய்ய பெரிய நாச்சிக்கவுண்டன் வகையறா உய்ய கரும கவுண்டன் மகன் உய்ய குள்ள
கவுண்டன் 1, மேற்படியூர் சண்டா அரப்பிளி கவுண்டன் 2, செருக்காளி மணிய குப்பாக் கவுண்டன் 3, எருமய சின்ன எலயாக் கவுண்டன் 4, தர்மகருத்தா கொழவ குப்பாக் கவுண்டன் 5, தும்மினிய பெரிய எலயாக் கவுண்டன் 6, மேனடைய அரப்பிளி கவுண்டன்7, சிருக்காளி கரைக்காரன் 8, மேற்படி தாலூக்கா மேற்படியூர் நெவக்காட்டு அலுங்க வடமாக்கவுண்டன் 9 நாங்களும் மற்ற 18 கரைகாரர்களும் மேற்படியூர் பிரக்கரை கொழவ கொளந்தாக் கவுண்டன் ஆயில பெரியாக்கவுண்டன் மற்ற எழுகரைகாரரும் மேற்படியூர் கூர்கோம்பை பிலியே கருமாக்கவுண்டனும் சேர்ந்து,

நாங்கள் பஞ்சாயத்துத் தீர்மானம் சொல்லும் போது உங்கள் பஞ்சாயம் வேண்டியதில்லை என்று மகாநாட்டையும் மேலூர் சிறக்காளி அண்ணாமலைக் கவுண்டனையும் மகாநாட்டோட ஒன்றாய் சேர்த்து நாமக்கல் கோர்ட்டில் மசியகாத்தாக் கவுண்டன் பிராது(புகார்) செய்தும், மகாநாட்டை அகுமானம்(அவமானம்) செய்தான். அந்த கோர்ட்டு வியாச்சியத்தை(வழக்குக்காக) 516. 40 ரூபாய் சிலவு செய்து(செய்தார்) மேலூர் சிறக்காளி அண்ணாமலைக் கவுண்டன்.அந்த வேச்சியத்தை(வழக்கில்) கெலிச்சி(வெற்றிபெற்று) மேற்படி கீழூர் வந்து இப்படிப்பட்ட குருத்ரோகம் செய்தவனுக்கு 3 மலை 14 பட்டி 5 நாடு ஆயிரம் கோம்பை நாடு 18 சுரைகாரரும் அறிய இந்த மசியகாத்தாகவுண்டன் 1,
8 வீட்டு கசக்காளி 2,
சடக்க பெரியா கவுண்டன் 3,இந்த மூவருக்கும் எப்போதும் சாந்து சந்தனம் விருதுபட்டம் எப்போதும் கிடையாது.

இன்னும் இந்த விருதுகளை பிடுங்கி மகாநாடும் பயில்நாடும் போகும் போது மேலூர் சிறக்காளி அண்ணாமலைக் 1 கவுண்டன் கோசமணியை அரப்பளிக்கவுண்டன் 2 இரண்டு பேரும் வெள்ளக்கல்பட்டி எல்ல பெருமாள் கோவிலிடத்தில் இவர் இரண்டு பேரும் நாட்டார்களை நிறுத்தி எங்களுக்கு ஏதொரு ஆதரவு மில்லாமலும் சொல்லாமலும் போரீர்களே என்று நிறுத்தி போன நாட்டுகளை திருப்பி மேற்படி கீழூர் கிராமம் வந்து சகல பஞ்சாயங்களை பேசி மேலூர் அண்ணாமலைக்கு ஒரு விருதை கொடுத்தோம்.

அண்ணாமலை கவுண்டனுக்கு அரப்பிலி கவுண்டன் மந்திரியாக மகாநாடும் நேமிச்சியிருக்கிறோம். மருபடியும் கசக்காழி கருமாக் கவுண்டன் நாடு கூட்டி சடக்க பாலாண்டி கவுண்டன், மேலூர் அண்ணாமலைக் கவுண்டன் இந்த மூனுபேரும் இந்தக் குருஞ்சிலை பாய்பட்டம் போடுவோம் அரப்பிலிக் கவுண்டனுக்கு லேகம் பலிபோடுவோம். இவர்களை வைத்து இப்படி சமதி மாரியம்மன் திருவிழா நடத்துவோம்.

சிறக்காளி அண்ணாமலைக்கவுண்டன் குறிஞ்சில் முதல் சீலை கட்டவும். தான் போதமலை சித்தன் கோவில் அண்ணாமலைக் கவுண்டனுக்கு முதல் சாந்தும் பாதிபத்தியமும் ஒண்டி வீட்டு கக்காழி கருமாக் கவுண்டனுக்கு பிந்தின சாந்தும் மற்ற கரைக்காரருக்கு சகல சாந்தும். குறிஞ்சி பூரா பாத்தியமும் அண்ணாமலைக் கவுண்டனுக்கு மூணு மலை பதினாலு பட்டியும் மூணில் ஒரு பாத்தியமும் கொல்லிமலை மகாநாட்டுக்கு ஒருபாகமும் மூணு சுரைகாரருக்கு ஒருபாகமும் இதில் தவறினால் கொல்லிமலை மூலைக்கட்டி கருப்பு கேக்கும். பெரியசாமி கேக்கும்.

ஆண்டியப்பன் கேக்கும். போதமலை சித்தனும் பெரிய சடையனும் கேக்கும். இந்த அத்தை கெடுத்தவன் தந்த பிள்ளை அத்துப்போகும். காணிக்கு கருவில்லாமல் போகும். கட்டி உழ மாடு பாலில்லாமல் போகும். மூங்க முளையில்லாமல் போகும். முத்திமி பிள்ளை அத்திப்போகும்.

மகாநாடும் சகல குடியும் வைத்த சாபம்.
இப்படிக்கு ஒப்பந்த பட்டா, இப்படிக்கு எங்கள் கையொப்பம், வெள்விரித்தான், தொட்டரையன், மசிய குப்பன், தலக்காட்டு சப்பாணி எளையான், போக்க மலையாக் கவுண்டன், பிலிய ஆண்டிக் கவுண்டன், சடைய செல்லாக் கவுண்டன், கொழவ ஆண்டிக் கவுண்டன், தமுக்காட்டி ஆண்டிக் கவுண்டன், கோம்பக்கவுண்டன், ஜடமாலை சீராக் கவுண்டன், தமுக்காட்டு அண்ணாமலைக் கவுண்டன், கல்லாங்குழத்து காரிய பெரியான், மேக்கினி காட்டு எலுமிச்சக் கவுண்டன், புதுமளவு மாணிக்க குழவன், எரும பெரியளயாக் கவுண்டன், வாழ தொப்பாட்டன், மேனடை அரப்பிளி, மேக்கினிகாட்டு பெரியனப்பய்யன், ஆண்டியப்பன் கோவில் பூசாரி.

நன்றி:
கொங்கு நாட்டு சமுதாய ஆவணங்கள்,
நாமகிரிப்பேட்டை புலவர் இராசு ஐயா.

திங்கள், 21 செப்டம்பர், 2026

வஞ்சிக்குழி நடுகல்,கல்வராயன் மலை (கி.பி.654)

கல்வராயன் மலை,வஞ்சிக்குழி நடுகல்


இடம் :

வஞ்சிக்குழி,
கல்வராயன் மலை, 
சங்கராபுரம் வட்டம், 
விழுப்புரம் மாவட்டம். 

இவ்வூரின் கிழக்கே உள்ள வேடியப்பன் கோவிலில் இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இரண்டாவது கல்வெட்டில் எழுத்துகள் இல்லை,வில்லில் அம்பை தலைகீழாக பிடித்து விடுவதுபோல் சிற்பம் உள்ளது.இது விஜயநகர ஆட்சியில் செதுக்கப்பட்டதாக இருக்கலாம்.

காலம் :

பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன், ஆட்சியாண்டு 24, கி.பி. 654.

கல்வெட்டு:

1. கோவிசை நரைசிங்க பரும

2. ற்க்கி யாண்டு இருபத்தி நால் ஆவது

3. வஞ்சிகுழி உடைஆன் கலிமந்த அதி

4. அரைசன் அறஊர் மேல் சென்று பட்டான்.

செய்தி: 

 "பல்லவ மன்னர் முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சியில்,மன்னருடைய 24 ஆவது ஆட்சி ஆண்டில், வஞ்சிக்குழி ஊரை சார்ந்த கலிமந்த அதிஅரைசன் "அறஊர்"ரில் நடைபெற்ற போரில் பட்டார்(இறந்து போனார்)" 

என்று கல்வெட்டு உள்ளது.

*கலிமந்தன் :- கலி என்பது ஆசீவக (ஐயனார் வழிபாடு) சமயத்தை தோற்றுவித்த கலியன் என்னும் தெய்வம் பெயர் ஆகும்.கலிமந்தன் என்பதற்கு கலி மைந்தன் என்னும் பொருள் ஆகும்.இவர் ஆசிவகத்தை தழுவியவராக இருக்க வேண்டும்.

*அதிஅரைசர் :- இது வாணவரையர் மன்னர்களின் பட்ட பெயர் ஆகும்.எனவே இந்த கலிமந்தன் என்பவர் வாணவரையர் மன்னரின் கிளை வழியினர் அல்லது வாணர் கீழ் ஆட்சி செய்த குறுநில மன்னர்களாக இருக்கலாம்.

*கல்வராயன் மலையில் வாழும் காராளர்(மலையாளி) இன மக்களில் அரையர் என்னும் வீடு(குலம்) உள்ளது.இவர்கள் "கல் அரையர்,வாணவரையர்,செம்பை அரையர் மற்றும் கொங்கு அரையர்" என நான்கு பிரிவாக உள்ளனர்.நான்கு பிரிவும் பங்காளி உறவினர்கள்.

*கல்வெட்டில் வரும் "அறஊர்" என்பது அரூர் பகுதியா அல்லது ஆறூர்(ஆற்றூர்) பகுதியா என தெரியவில்லை.இரு ஊரும் கல்வராயன் மலையில் அடிவாரத்தில் உள்ள ஊர்கள்.

*பல்லவ மன்னர் ஆட்சியில் காடு திருத்தி நாடாக ஆக்கப்பட்டதால்,பல்லவ மன்னர்களுக்கு காடுவெட்டி மற்றும் காடவர் என்னும் பட்டப்பெயர்கள் உண்டு.

*பல்லவர் காலத்திலே கல்வராயன் மலையில் விவசாய குடிகள் குடியேறியிருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

*"தொறு மீட்பு போரா?" அல்லது "இரு மன்னருக்கு இடைப்பட்ட போரா?" என கல்வெட்டில் செய்தி இல்லை.

*1350 வருடங்களாக வஞ்சிக்குழி என்னும் ஊர் இருப்பது சிறப்புக்குரியது.


நன்றி:-ஆவணம் 19, 2008.

படங்கள் : திருவண்ணாமலை சுற்றி இணையப்பக்கம்.

சனி, 19 செப்டம்பர், 2026

பெரிய கல்வராயன் மலை,கரியவர் கோவில் கல்வெட்டு (கி.பி.1020).

 பெரிய கல்வராயன் மலை கரிய கோவில் கல்வெட்டு (கி.பி.1020) :

*கல்வராயன் மலையில் காராளர்(KARALAR )என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.

*கல்வெட்டுகளில் இவ்வின மக்களை மலையாளர்,வெள்ளாளர் மலையர்,மலையாள முதலி என்ற பெயரிலும் குறிப்பிடுவதை பார்க்கலாம்.


கல்லரையன்(கல்ராயன்,கல்வராயன்)  என்னும் அரையர் குலத்து மக்களிடையே நிலவும் "கல் பிறக்கும் போதே பிறந்தவன் கல்லரையன்" என்னும் பழமொழி வாயிலாகவும்,இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள கல்லைகுறிச்சி(இன்று கள்ளக்குறிச்சி) என்னும் ஊரின் பேரை காணும் போதும்,இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் "ல" என்பதற்கு பதில் "ள" என்று தவறாக படிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.


"கல் நாட்டை" ஆண்ட அரையர்கள் "கல்லரையர்" என அழைக்கப்பட்டுள்ளனர் (ஆதாரம் - கிராங்காடு கல்வெட்டு)

*இக்கல்வெட்டு உள்ள இடத்தையும் ,இம்மக்கள் பழக்க வழக்கங்களை ஆய்வு செய்யும் போது,இம்மலை மன்னரான கல்லரைய கவுண்டர் கரிய பெருமாளுக்கு கொடுத்த இறையிலி நிலம் பற்றிய செய்தி ஆகும்.

*கல்லரைய கவுண்டர்" என்பதற்கு "தள்ளரையகவுண்டர்" என்றும், "மகன் வீரைய கவுண்டர்" என்பதற்கு "மதுர வீரைய்ய கவுண்டர்" என்றும் தவறாக படிக்கப்பட்டுள்ளது.

*இதன் காலம் 18 ஆம் நூற்றாண்டு என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுக்கள் புத்தகத்தில் உள்ளது.ஆனால் salem gazetteer ல் சாலிவாகன ஆண்டு 942(கி.பி.1020) என்று உள்ளது.

*18 ஆம் நூற்றாண்டு என்பதை ஆய்வுகுட்படுத்த வேண்டும்.

விளக்கம்:

கி.பி.1020 ஆம் ஆண்டு, வீரோதிகிரி வருடம்,மார்கழி மாதம் 21 ஆம் நாள்,குறுநில மன்னரான கல்லரைய கவுண்டரும்,அவரது மகன் வீரைய கவுண்டரும்,மேல் மலை நாட்டார்களும் கரிய பெருமாள்(கரி ராமன்) கடவுளுக்கு,பெரிய கல்வராயன் மலை மேல் நாட்டிலுள்ள,மேலை செம்பற்க்கையில் நிலம் தானம் விட்ட செய்தியாக,கரியவர் கோவிலில் (கரிய கோவில்) கல் வெட்டப்பட்டுள்ளது.சந்திரர் சூரியர் உள்ளவரை இந்த தானத்தை நடத்தி வர வேண்டும்.மீறுபவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவர் என்று உள்ளது.

(இந்த கால கட்டத்தில் தருமபுரி,முதலாம் ராஜேந்திர சோழன்(கி.பி.1014 - 1044) ஆட்சியின் கீழ் இருந்தது)

கல்வெட்டு:

1. (வி) ரோதிகிறி வருஷம் மார்

2.கழி மாதம் 21 தள்ள

3.ரையகவுண்டர்(கல்லரையகவுண்டர்) ம(கன்)

4. வீரையகவுண்டர் மேல்ம

5. (லை) நாட்டாரும் கரிய

6. பெருமாளுக்கு மேலைச்

7. செம்பறக்கை திருவி

8. ளையாட்டம்

9. படி நஞ்சை புஞ்சை நாற்பாக்கெல்லை 

10.யு(ம்) சகலமும்

12. ந்தி (ஏ) சூரியர்வ(ரை)

13. அ (கு) தம் பண்(ணின)

14.வர் கெங்கையிலே

15. க(ஈ) ராம் பசுவை

16. கொன்ற பா

17. வத்திலே (போ)

18. க (க)டைவர்கள்.


***கல்ராயன்(கல்வராயன்) என்னும் பெயரில் ஐயனார் தெய்வம் உண்டு.இக்கோவில் பெத்தநாயக்கன் பாளையம் ஏரிக்கரையிலும்,லட்சியம் ஊரிலும்,ஆனைமலை ஒடையப்பாளையம்,செட்டிமாங்குறிச்சி ஒட்டப்பட்டி மற்றும் தம்மம்பட்டி பூசாலியூர் அருகிலும் இந்த கோவில் உள்ளது.***

(சேலம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1 - பக்கம் 11 )



கல்வராயன் மன்னர் கல்வெட்டு, கிராங்காடு (கி.பி.1302)

 கல்வராயன் மலை கிராங்காடு கல்வெட்டு (கி.பி.1302)


கல்வராயன் மலையில் காராளர்(KARALAR) என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.

கல்வெட்டுகளில் இவ்வின மக்களை 
மலையாளர்,வெள்ளாளர் மலையர்,
மலையாள முதலி,மலையாழ்வான் என்ற பெயரிலும் குறிப்பிடுவதை பார்க்கலாம்.

பெரிய கல்வராயன் மலை,கீழ் நாட்டில் உள்ள கிராங்காடு கிராமத்தில் இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.மலை மேலுள்ள அவையாரம்மன் கோவில் கல்வெட்டு சிதைந்துள்ளது.மாரியம்மன் கோவில் அருகே உள்ள கல்வெட்டின் மேல்புறம் பெருமாளின் சின்னமான சங்கு, சக்கரம் காணப்படுகிறது. 

இந்த மலையை ஆண்ட காராளர் இனத்து மன்னர்களான, கல்லரையன் (கல்வராயன்,கல்ராயன்) என்னும் அரையர் குலத்தவர்கள் கரியப்ப கவுண்டரும்,அதே குலத்தைச் சார்ந்த பட்டத்து அண்ணியப்ப கவுண்டரும் கோவிலுக்கு கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டு இது. இருவரில் ஒருவர் மன்னராக இருந்துள்ளார்,இன்னொருவர் மகனாகவோ அல்லது தம்பியாகவோ இருக்கலாம்.கோவிலில் பூசை செய்பவர்களை நம்பியான்(நம்பியார்) என்று அழைப்பார்கள்,இவ்வினத்தில் நயினார்(நயினான்) என்ற குலம் உள்ளது.நயினா கவுண்டர் நம்பி என்னும் நம்பியான் குல முன்னோர் பெயரும் காணப்படுகிறது.


இம்மக்களிடையே பெயர் எழுதுவதற்கென்று ஒரு வழக்கம் இருந்திருக்கிறது.ஒருவர் தன் பெயர் எழுதும் போது தன் குல பெயரையும் சேர்த்து எழுதுவார்கள்.அந்த நடையிலேயே இந்த கல்வெட்டும் அமைந்துள்ளது.

மேலும் இந்த அரையர் குலத்து மக்களிடையே நிலவும் "கல் பிறக்கும் போதே பிறந்தவன் கல்லரையன்" என்னும் பழமொழி வாயிலாகவும்,மலையின் அடிவாரத்தில் உள்ள கல்லைகுறிச்சி(இன்று கள்ளக்குறிச்சி) என்னும் ஊரின் பேரை காணும் போதும்,இக்கல்வெட்டில் "ல" என்பதற்கு பதில் "ள" என்று தவறாக படிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.

"கல் நாட்டை" ஆண்ட அரையர்கள் "கல்லரையர்" என அழைக்கப்பட்டுள்ளனர்.


"கல்லரைய்ய" என்பதற்கு "கள்ளரைய்ய" என்று படிக்கப்பட்டுள்ளது,"கல் நாடு" என்பதற்கு "கள் நாடு" என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....இந்த கல்வெட்டு இருக்கும் பகுதியில் வாழும் மக்களின் வரலாறை பார்க்கும் போதும் பழக்க வழக்கங்கள் பார்க்கும் போதும்,ஆண்ட மன்னர்கள் அவர்களின் குலங்களை ஆராயும் போதும், கல்லரைய்ய என்பது தான் சரியாக இருக்கிறது.படித்தவர்கள் எழுத்தை தவறாக கூட படிக்க வாய்ப்பிருக்கிறது.

கல்ராயன்(கல்வராயன்) என்னும் பெயரில் ஐயனார் தெய்வம் உண்டு.இக்கோவில் பெத்தநாயக்கன் பாளையம் ஏரிக்கரையிலும்,லட்சியம் ஊரிலும்,ஆனைமலை ஒடையப்பாளையம்,செட்டிமாங்குறிச்சி ஒட்டப்பட்டி மற்றும் தம்மம்பட்டி பூசாலியூர் அருகிலும் இந்த கோவில் உள்ளது.


மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தில் வெளிவந்திருக்கிறது.ஆனால் Salem gazetteer ல் "சாலி வாகன ஆண்டு 1224(கி.பி.1302) என்றும் கல்வராயன் கவுண்டர்" என்றும் தெளிவான பதிவு உள்ளது.


இது மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.


விளக்கம்:

கி.பி.1302 ஆம் ஆண்டு விய வருடம் வைகாசி மாதம் 27-ம் தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூஜைகள் செய்ய பெரிய கல்வராயன் மலை கீழ்நாட்டை சேர்ந்த கருங்காடு (கெராங்காடு,கீரங்காடு) என்ற பகுதியை,குறுநில மன்னரான கல்லரைய்ய பெரிய கரியப்பக்கவுண்டர் பட்டத்து கல்லரைய்ய அன்னியப்ப கவுண்டர் ஆகிய இருவரும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது. இத்தானத்தை நயினாகவுண்ட நம்பியார் (நயினார் கவுண்டர் நம்பி) என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூஜையும், கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் . இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இதற்குத் தீங்கு விளைவிப்பவர்கள்,கங்கை கரையிலே,காராம் பசுவை கொன்ற பாவத்திலே போவார்கள்.

(இந்த கால கட்டத்தில் மகதை நாட்டை வாணகோவரையர்கள்,முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு(கி.பி.1268 - 1310)கீழ் ஆட்சி செய்தனர்)


கல்வெட்டு:

1.விய வருஷம் வய்யாசி மாதம் 27

2. அவைய்யாரம்மை

3. சுவாமியாற்கு பூதா

4.னம் விட்டதுக்கு (க)

5. கல்லரையக பெரிய

6. கரியப்பகவுண்ட(ர்)

7. பட்டத்து கல்ல

8. ரய அண்ணியப்ப

9. கவுண்டர் இந்த ரண்

10. டு துரையளும் நாலு

11. கரைநாட்டரும் கல் 

12. நாட்டில் செத்த(சேந்த) கரு(ங்)

13. காடு பூதானம் விட்ட

14. துக்கு பூசை நிமத்தி

15. யம் பண்ணி வருகுறவர்

16. கள் நயினாவுண்டந(ம்)பி

17. யார் உள்பட்ட யிந்தவூ(ர்)

18. தானததுக்கு யாதா மொரு

19. வர் பூசை கட்டளை அவி

20 (மெ) கம் அதி

21. காமாகா நடத்திவரு (கிற)

22. (வ)ர்கள் ஆயிராரோக்கி (ய)

23. (அய்)ஸ்வரியம் அவர்பி

24. .. வை தொழுது மாதா ..

25. யம் பண்ணி வருகுறவர்

26. இந்த பூ (த)ானம் பூமி

27. ஆக(வும்) சந்திர(ரா)தித்தர்

28. உள்ளமட்டும் நடத்தவு/ம் இ/

29. ப்படி யிதுக்கு (யாதா)

30. மொருத்தர ரண்டு(நி)

31. னைச்சவர்கள் கெங்

32. கைக்கரையிலே

33. க(ஈ) ராம் பசுவை (க்)

34. கொன்ற பாவத்தி

35. (லே)போவர் (கள்)




(சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் - கிருட்டிணன்) பக்கம் 91







புதன், 16 செப்டம்பர், 2026

சிறுகளூர்/சிறுக்கலூர் செக்கு கல்வெட்டு,கல்வராயன் மலை (10 ஆம் நூற்றாண்டு)

கல்வராயன்மலை,சிறுகளூர் செக்குக் கல்வெட்டு:

இடம் :-
சோலையம்மன் கோவில் 
சிறுகளூர்/சிறுக்கலூர் கிராமம்.
கல்வராயன் மலை,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

ஆண்டு - 10 ஆம் நூற்றாண்டு 
                  (கி.பி.955 - 962)

அரசர் - கண்டராதித்தர் சோழர்

செக்கு கல்வெட்டு:-

ஸ்வஸ்திஸ்ரீ "செந்தழயன் கண்டராதிதன்" இடு வி(த்)த செக்கு

செய்தி:-
கண்டராதித்தர் சோழர் ஆட்சியில் செந்தழையன் என இயற்பெயர் கொண்ட குறுநில மன்னர் அல்லது உள்ளூர் ஆட்சியாளரால் செய்யப்பட்ட செக்கு ஆகும்.

குறிப்பு:
10 ஆம் நூற்றாண்டில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த கல்வராயன் மலைப்பகுதியை "செந்தழையன் கண்டராதித்தன்" என்பவர் ஆட்சி செய்துள்ளார்.

நன்றி:
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த 
ச.பாலமுருகன், 
சி.பழனிசாமி, 
திருவாமாத்தூர் கணசரவணகுமார், மதன்மோகன்,
மேலும்
மரு. அருண்குமார், 
சு.ராஜவேலு, 
சு. ராஜகோபால் கல்வெட்டியல் அறிஞர்.
மற்றும் யாக்கை இணையம்.

ஜவ்வாது மலை காராளர்(மலையாளி) இன மக்கள் வாழும் நாடுகள்.

ஜவ்வாது மலை மக்கள் காரைக்காட்டு வெள்ளாளர்,கார்காத்தவெள்ளாளர், காராளர்,மலை வெள்ளாளர், காராளக் கவுண்டர்,மலையாளி,மலையாள கவுண்டர்,பூபாள முதலி மற்றும் மலையாள முதலி என்னும் பெயர்களில் அறியப்படுகிறார்கள்.  

ஜவ்வாது மலையில் 18 நாடுகளில் இவர்கள் வாழ்கிறார்கள்.இம்மக்களின் பெரிய பட்டகாரன் (ராஜா) கணமலை நாட்டில் வசிக்கிறார்.


(திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் ஒன்றியம்)

1. வீரகவுண்டனூர் நாடு

1. இந்திரா நகர்

2. எம்.ஜி.ஆர்.நகர்

3.பண்டிரேவ்

4.குட்டூர்

5. புதூர்

6.அரசனூர்

7.எண்டரப்பட்டு

8. கல்பிளந்தனூர்

9. கோவில்கொல்லை

10. மேட்டன்கல்லூர்

11. ஊர்கவுண்டனூர்

12. பம்பாத்தூர்

2.வீரப்பனூர் நாடு

1.குட்டிகவுண்டர்கொட்டாய்

2. முருகனேரி
3. வாலோத்தூக் கொல்லை

4. ஒடமங்கலம்
5. மேல்கொல்லை

6.மேல்வெள்ளிதாதன் கொட்டாய்

7.பூமரத்தூக்கொல்லை
8.வீரப்பனூர்

9.சடையனூர்,
10.மலைக்கொல்லை

11.அரசவல்லி
12.பர்கூர்

13.எட்டிமரத்துர்

14.கள்ளிப்பாறை
15.மண்டப்பாறை

16.மேல்மரத்தூர்
17.ஒடமங்கலம்

18.பெருமலை

19.குட்டியூர் பள்ளம்
20.பாலாண்டகொல்லை கொட்டாய்
21.கீழ்விளாங்குப்பம்

22. புதுப்பட்டு

22. தீத்தனார் தும்பகொல்லை
23. வள்ளிதாதன் கொட்டாய்
24. வாழத்தும்பை

25. விளாங்குப்பம்
26. காட்டூக்கொல்லை

3. தென்மலை அத்திப்பட்டு நாடு

1.தென்மலை அத்திப்பட்டு

2.சின்னகீழ்ப்பட்டு
3.மேல்பட்டு

4.பெரியகீழ்ப்பட்டு

4 பலாமரத்தூர் நாடு

1.நாச்சமலை

2.ஒண்டிக்குரையனூர்
3.புளிச்சகுட்டை

4.தோப்பூர்கொல்லை கொட்டாய்

5.சின்னக்குட்டை

6.குண்டுரெட்டி
7.குறியானூர்

8.மந்தக்கட்டு கொல்லை
9.நல்லப்பட்டு

10.நார்த்தமரத்தூர்
11.ரெட்டிக்கொல்லை

12.திமிரிமரத்தூர்
13.தோப்பூர்

14.வாழக்காவூர்

15.சேராமரத்துர்

16.கல்யாணமந்தை

17.பலாமரத்தூர்

18.வாழக்காடு


5. நம்மியம்பட்டு நாடு

1. கோவிலூர் ஆண்டிக் கொட்டாய்
2. கும்பலூர் கொல்லை மேடு

3. குப்பலூர்
4. கனிகிணத்தூர்

5. மேல் கோவிலூர்
6. முட்டுநத்தூர் ஊரன் கொல்லை மேடு
7. நாதனூர் பாலாண்டி கொல்லை மேடு
8. வள்ளியூர் சடையாண்டி கொட்டாய்
9. வெள்ளையான் கோட்டை
10 நாடாலூர் சடையன் வீடு
11. பூத்தூர் ரவுரான் கொல்லைமேடு
12. சோலை கொல்லைவெளி

13. செம்மண் கொல்லை

14. புலி கென்றான்கொல்லை கொட்டாய்

15. வண்டிகாரன் வீடு

16. வங்களா கொல்லை

17. கீழ்குப்பசானவூர்
18 கீழ்சரணங்குப்பம்

19. கோவிலாண்டுர்
20. மேல் நம்மியம்பட்டு

21. பட்டுலூர்
22. சின்னசேராமரத்தூர்

23. சினையிரப்பட்டு
24. ஏரியூர்

25. கீழ் கோவிலூர்

26 கீழ் நாடனூர்
27. கோரமடுவு

28. மேல்நாடலூர்

29. முதலை மடுவு

30. தடுப்பட்டு

31. நடுசாரன்குப்பம்
32. பாடானூர்

33. பட்டரயன்குடிசை
34. பெரியவீரப்பட்டு

35. தாசரிபுதூர்
36. போரத்துக்கொல்லை

37. சின்னமச்சூர்
38. ஜோனூர்

39. கல்லாத்துவீடு கொட்டாய்
40. காவிதிகுடிசை

41. கட்டயன்குடிசை
42. கோனேரிகுடிசை

43. கும்பலூர்

44. மச்சூர்
45. மேல்குப்பானச்சனூர்
46. மேல்சாரணங்குப்பம்

47. நாச்சமலை
48. நம்மியம்பட்டு

49.புலிகொன்றான்வெளி
50.புத்தூர்

51.தாதன்குப்பம்

52.வெள்ளியூர்

53. முட்டுநத்தூர்

54.பழையபுதூர்

55.பனைமரத்தூர்

56.ஆலமரத்து கோட்டை

57. சின்னத் தாதன் குப்பம்


6.மேல்சிலம்பாடி நாடு

1. சின்ன மோட்டூர்

2. விலாமரத்தூர்
3. விளிச்சாலூர்

4.ஏலத்தப்புதூர்
5. கீழ் சிலம்பாடி

6. மேல்கூட்டாத்தூர்
7. மேலூர்

8. ஓடன்கொல்லை

9. பலாக்கானூர் கொல்லை கொட்டம்

10. பாதிரி
11. மேல்சிலம்பாடி

12. மோளையானூர்
13. மோட்டுக் கொல்லை

14. படபஞ்சமரத்தூர்
15. ஆத்துக்கானூர்

16. கீழ் விளாமூச்சி
17. கூத்தனேரி

18. கூட்டாத்தூர்
19.மேல் விளாமூச்சி

20. மோட்டூர்
21. வண்ணாங்குட்டை

22. எம்.ஜி.ஆர் நகர்
23. மந்தை வெளி கொட்டாய்
24. சின்னகூத்தனேறி

25 சின்னசிலம்பாடி
26.பலாக்கானூர்

7.கோவிலூர் நாடு


8) குட்டக்கரை நாடு

1. பாதிரி

2 பட்டரைக்காடு

3. தும்பக்காடு
4. தும்பக்காடு கீழூர்

5. தும்பக்காடு நடுவூர்
6. கீழ்பெரியவள்ளி

7. கொள்ளேரி(கல்லேரி)
8 கொண்டிக்கானூர்

9. மஞ்சூத்து
10. மேல்சின்னகண்ணுகொல்லை
11. மேல்சேப்பளி
12.மேல் பொன்ரகம்கொல்லை
13. பட்டன்கோவிலூர்

14.புதூர்
15. தனியார்கொல்லைமேடு
16. வைதியன்கொல்லை

17. குட்டக்கரை
18. கீழ்ச்சேப்பளி

19. மேல்பெரியவள்ளி
20. அமட்டன்கொல்லை

21. சிங்காடு
22. அமட்டன்கொல்லைமேலூர்


9) காணமலை நாடு 

கணமலை என்னும் ஊரில் தான் ஜவ்வாது மலை பெரிய பட்டகாரன்( ராஜா) வசிக்கிறார்.

1.பதி மலை

2. காணமலை
3. மேல்முருங்கைமந்தை

4. சீங்காடு
5. தஞ்சன் பாறை

6.முத்தாண்டி குடிசை
7.வேடகொல்லைமேடு

8.இருளம்பாறை
9.இலந்தம்பட்டு

10.கீழ்முருங்கைமந்தை
11.மல்லிமேடு

12.மேல்கணவாயூர்
13.பாலபிரியம்பட்டு

14.பொங்களூர்
15.அரசனூர்

16.ஆவார வலசை
17.காவம்பட்டு

18.கீழ்கணவாயூர்
19.மலைகொல்லை

20.மேல்புளியங்குப்பம்
21சென்பகத்தோப்பு

22.நீர்தும்பை
23.கல்லாத்தூர்

24.நாகலூர்
25.நீப்பளாம்பட்டு

26.நெல்மந்தை
27.பாவமதி

28.பள்ளத்தூர்
29.புளியாங்குப்பம்

30.சாந்தம்பட்டு
31.கீழ்சென்பகத்தோப்பு

10.கல்லாத்தூர் நாடு

1.துரிஞ்சிக்குப்பம்

2.மோட்டூர்
3.கிளையூர்

4.தீத்தாண்டபட்டி வலசை(செங்கம் வட்டம்)

(திருப்பத்தூர் வட்டம்)

11. நெல்லிவாசல் நாடு

1.வலசை

2. நெல்லிவாசல் நாடு
3. மலைதிருப்பத்தூர்

4. மலையாண்டிப்பட்டி
5. மேல்பட்டு

6. நெல்லிப்பட்டு
7. புலியூர்

8. சேம்பரை

12.புதூர் நாடு

1. சித்தூர்

2. கீழூர்

3. மொழலை
4. விளாங்குப்பம்

5. நடுகுப்பம்
6. வழுதலம்பட்டு

7. புதூர்நாடு
8. அரும்பட்டு

9. கோம்பை

10. மேலூர்

13.புங்கம்பட்டு நாடு

1. பேளூர்

2. வசந்தபுரம்
3. அரசமரத்துகொல்லை

4. பழைய பாளையம்

5. ரங்கசமுத்திரம்
6.கொத்தனூர்

7.பெருமாள் கோயில் வட்டம்
8. தகரகுப்பம்

9. பெரும்பள்ளி
10. சேர்கலூர்

11. சின்னவட்டானூர்
12. கல்லாவூர்

13.கீழானூர் 

14.கம்புகுடி
15. குடகுமலை

16. நடுவூர்

14.குரும்பேரி நாடு

1. மாம்பாக்கம்
(வேலூர் மாவட்டம்)
2. அணைக்கட்டு

15.பீஞ்சமந்தை நாடு

1. முத்தனூர்

2. நெல்லிமரத்துக் கொல்லை
3. நாய்க்கனுர்

4. பீஞ்சமந்தை
5. நச்சிமடுவு

6. பளமரத்துகொல்லை
7. பழந்தூர்

8. அதிமரத்துக் கொல்லை
9. கீழ் பிஞ்சமந்தை

10. ஏரிக்கொல்லை
11. அவுசரி ஓடை

12. பங்களா கொல்லை
13. கருப்பன்கொல்லை
14. முதியன்கொட்டாய்

15. பொதிபாறை
16. சடையன் கொல்லை
17. பெரியகொட்டன்செட்டி
18. பெரியதட்டான்குட்டை
19. பெரியபளப்பாறை,
20. பிள்ளையார்குட்டை
21. பொதிப்பாறை கொல்லை

22. புதூர்
23. புலியமரத்தூர்

24. சட்டதூர்
25. தேக்குமரத்தூர்

26. தெத்தூர்
27. தொங்குமலை

28. என். பழந்தூர்
29. புதுகுப்பம்

30. அல்லேரி

31. காவலியூர்
32. கொரத்துர்

33. குனக்கலூர்
34. மூலனூர்

35. முகுதவல்லிமேடு
36.பெரிய எட்டிப்பட்டு

37.செங்காடு
38.ஆட்டுகாரன்துரை

39. சின்ன எட்டுபட்டு
40 சின்னகுட்டன்செட்டி,
41. சின்னபனப்பாறை

42. எள்ளுபாறை
43. குடிகம்

44. காட்டியம்பட்டி
45. கீழ்குப்புசூர்

46. முள்ளுவாடி
47. கோனுர்

48. குப்புசூர்

16. ஜார்தன் கொல்லை நாடு

1. பெரிய கனிசை

2.பூசன மலச்சி
3.சின்னதாட்டான்குட்டை
4.காணிசைப்புத்தூர்
5.ஜார்தன்கொல்லை
6.இலந்தம்புதூர்

7. குண்டுராணி
8. பட்டிகுடிசை
9. கடுக்கமரத்துக் கொல்லை
10. சின்ன சுவிசி

11. தோனியூர்
12.முத்தன்குடிசை
13. சளதுகொல்லை

14.எரிமேடு
15. இளயனிமரத்தூர்


17. பாலம்பாட்டு நாடு

1.அரச மரத்தூர்

2. சின்னூர்

3. கொலையனூர்
4. குறனூர்

5. நெக்கினி
6. பட்டிகொல்ல

7. பாலம்பாட்டு
8. தானிமரத்தூர்


18.அத்தியூர் நாடு

1. குருமலை

2. வெல்லக்கல் மலை
3. நச்சிமேடு

4. அனிமலை
5. தெள்ளை (கணியம்பாடி ஒன்றியம், சோழவரம் ஊராட்சி)


சேலம் மாவட்ட பதிவுகளில் உள்ள நாடுகள்

(SALEM DISTRICT MANUAL), பக்கம் -313.


1. நெல் வாசல் நாடு

2.புதூர் நாடு

3.புங்கம்பட்டு நாடு

4.தென்மலை நாடு

5.பர்கூர் நாடு

6.மூலைக்காடு நாடு

7.பள்ளப்ப நாடு

8.நடுப்பட்டு நாடு

9.பீமன்குளம் நாடு

10.ஏலகிரி நாடு

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

"காராளர் சடைய கவுண்டர்" செப்பு பட்டயம்

சடையகவுண்டர் செப்பு பட்டயம்:

செப்பு பட்டயம்

"1.கி.பி.1532 ல் அச்சுத தேவராயர் காலத்தில் வழங்கப்பட்ட இரண்டு செப்பு பட்டயங்கள், ‘கஜகிரி வெங்கடேச பெருமாளுக்கான’ வழிபாட்டு மற்றும் திருவிழாவை தொடர்ந்து நடத்துவதற்காக,"சடையக் கவுண்டருக்கு" வழங்கப்பட்ட கிராம மானியம் என்று செப்பு பட்டயம் கூறுகின்றன.

2."வெங்கடேச பெருமாள்" என்பது சின்ன திருப்பதி கோயிலில் உள்ள இறைவனின் பெயராகும். 

3."கஜகிரி’ (‘யானை மலை’) என்பது ‘ஆனைமலை’ என்பதற்கான மற்றொரு பெயர் வடிவமாகும். அந்தக் காலத்தில் இந்த மலைகள் ‘ஆனைமலை’ என்ற பெயரால் அறியப்பட்டிருக்கலாம்.
எனவே, இந்த இரண்டு மானியங்களும் சின்ன திருப்பதி திருத்தலத்திற்கே வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

4.விஜயநகர ஆட்சியில் மேலும் 1519-ஆம் ஆண்டைச் சேர்ந்த இரண்டு [சாசனங்கள்] கல்லரையர் பாளையக்காரரிடம் உள்ளது. இவை அனைத்தும் உள்ளூர் ஆட்சியாளர்களால்,கிராமங்கள் வழங்கப்பட்ட தானச் சாசனங்களாகும்."

குறிப்பு:

*கல்வராயன் மலையில் உள்ள ஐந்து நாட்டு பிரிவுகளில் சடையக் கவுண்டன் நாடும் ஒன்று.

*இவர் காராளர்(மலையாளி) இனத்தில் கொக்கிரி வீட்டை(குலம்) சார்ந்தவர்.

*சடையக் கவுண்டர் நாடு விஜயநகர ஆட்சியில் உருவானதாக இருக்க வேண்டும்.

*சின்னத்திருப்பதி கோவில் உள்ள பகுதியில் நாட்டாராக இருந்திருக்க வேண்டும்.

*உண்மையில் சின்னத்திருப்பதி என்பது வரதராஜ பெருமாள் கோவில் ஆகும்.இக்கோவில் சுவர்களில் மீன் சின்னம் உள்ளதால்,பாண்டியர் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

*எனவே பிற்கால பாண்டியர் காலத்திற்கு முற்பட்ட கோவில் ஆகும்.

*இக்கோவில் வரதராஜ பெருமாள் சிலை ஆத்தூர் பெரியேரி பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்டது ஆகும்.

*சின்னத்திருப்பதி உள்ள மலையின் பெயர் ஆனைமலை(கஜகிரி) என்று பட்டயத்தில் உள்ளது.காஞ்சி கரிவரதராஜர் பெருமாளுக்கும் கஜகிரி பெருமாள் என்று தான் பெயர்.

நன்றி: SOUTH ARCOT GAZETTEER,VOL 1, பக்கம் -331 

திங்கள், 7 செப்டம்பர், 2026

காராளரின் நாட்டு நிர்வாக முறை:

காராளரின் நாட்டு நிர்வாகம்:

கிழக்கு தொடர்ச்சி மலைகளான கல்வராயன் மலை,கொல்லி மலை,பச்சை மலை,சேர்வராயன் மலை பகுதிகளில் வாழும் காராளர் என்னும் மலையாளி இன மக்கள்,காஞ்சிபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் ஆவர்.

இவர்களிடையே நாட்டு நிர்வாக முறை பழமை மாறாமல் இன்றளவும் உள்ளது.

அவை பின்வருமாறு,

பட்டக்காரர் (பெரிய நாட்டார்):
*இவரே இவருடைய நாட்டுக்கு மன்னர்.இவருக்கு "துரை" மற்றும் "நாட்டு முதலி" என்று பிற பெயர்களும் உண்டு.

கல்சபாடியில் உள்ள பட்டக்காரர் ஆதியிலிருந்து உள்ளவர்.வள்ளி மதுரையில் உள்ள பட்டக்காரர் கலாசபாடி பட்டக்காரரிடமிருந்து பிரிந்து சென்றவர்கள்.இருவரும் பங்காளிகள்.

*ஊர்க் கவுண்டர் மற்றும் நாட்டாரால் தீர்க்க முடியாத வழக்குகளை,இறுதியாக தீர்த்துவைப்பவர் இவரே.வழக்கின் போது இவர் கொடுக்கும் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.

மந்திரி:
பட்டக்காரர் அல்லது அடுத்த நிலையில் உள்ளவர் மந்திரி.மந்திரியை கலந்து ஆலோசிக்காமல் பட்டக்காரர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்.

மும்மலை மந்திரி:
சேர்வராயன் மலை,கொல்லிமலை மற்றும் பச்சைமலை ஆகிய மூன்று மலைகளுக்கும் பொதுவாக மும்மலை மந்திரி என்று ஒருவர் உள்ளார்.இவரும் பட்டக்காரருக்கு கட்டுப்பட்டவர்.

பத்துப்பிள்ளை துரை :
இவர் மந்திரிக்கு அடுத்த நிலையில் உள்ளவர்.பட்டக்காரர் போக முடியாத நிகழ்ச்சிக்கு இவர் பங்கேற்பார்.இவருக்கு "பிள்ளை முதலி" என்னும் பெயரும் உண்டு.
கல்வராயன் மலையை தவித்து மற்ற இடங்களில் மற்ற இரண்டு மலைகளில் சின்ன துரை அல்லது சின்ன பட்டக்காரன் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறார்.

கார்ப்பாரி துரை:
இவர் பட்டக்காரரின் காவல் அதிகாரி ஆவார்.

நாட்டு சேவகர்:
பட்டக்காரருக்கு இரண்டு சேவகர்கள் உள்ளனர்.பட்டக்காரர் சொல்லும் செய்திகளை,இவர் நாடுகளுக்கு சென்று சொல்பவர்.இரண்டு பட்டகாரரின் முத்திரையான

"சித்தேரி மலை,மலையாளர் தேனாண்டை குருவோட நாட்டு சேவகன்,கலாசபாடி" மற்றும்

"பெரிய மலையாளம்,ராமசாமி துரை சிப்பந்தி வள்ளிமதுரை,சேலம் ஜில்லா"

என்னும் வார்த்தகள் பொறிக்கப்பட்ட செம்பு தகடை,அவரவர் நாட்டு சேவகர்கள் சட்டையில் குத்தி செல்வார்கள்.

இவர்கள் ஆண்ட பகுதிகளை ஆங்கிலேய அரசு பிடுங்கி கொண்டு,இந்த முத்திரைகளை மட்டும் கொடுத்துள்ளார்கள்.

பட்டகாரருக்கு குடை பிடிப்பவர் நாட்டு சேவகர்.

பாய் கவுண்டர்:
இவர் பட்டக்காரர் போகும் இடங்களுக்கு சென்று,பட்டக்காரர் அமர பாய் விரிக்கும் உரிமை உடையவர்.

நாட்டார் (நாட்டுக் கவுண்டர்):
*பட்டக்காரர் ஆட்சி செய்யும் நாடு பல சிறிய நாடுகளாக பிரிக்கப்பட்டிருக்கும்.பிரிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டுக்கும் தலைவர் நாட்டார் ஆவார்.

*இவர் பட்டக்காரருக்கு கட்டுப்பட்டவர்.

மூப்பர்:
ஒவ்வொரு ஊருக்கும் மூப்பர் என ஒருவர் இருக்கிறார்.நாடு கூடும்போது(ஊர் சபை) ஊரின் மூத்த பிரதிநிதியாக முன்னிலை வகிப்பவர்.

காணிமகன் (கரைக்காரர்/காரியக்காரர்):
இவர் நாட்டருக்கு அடுத்தப் படியாக இருப்பவர்.ஒவ்வொரு ஊருக்கும் காணிமகன் என ஒருவர் இருப்பார்.

அந்த ஊரின் காணியாளரின்(ஊருக்கு உரிமையான கூட்டம்/குலம் ) குடும்பங்களுக்கு மூத்தவர் அல்லது முதன்மையாக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இவரும் நாடு கூடும் (ஊர் சபை) ஊரின் சார்பில் முதன்மையாக இருப்பவர்.

ஊர்க் கவுண்டர்:
சிறிய நாடுகள் பல கிராமங்களாக பிரிந்திருக்கும்.ஒவ்வொரு கிராமத்திற்கும் தலைவர் ஊர்க் கவுண்டர் ஆவார்.

கண்காணி(கங்காணி):
இவர் கடைநிலை அதிகாரி.ஊர் கணக்கு வழக்குகளை மேற்பார்வை இடுபவர்.

குடித் தோட்டி:
நாடு எடுக்கும் முடிவுகளை,தண்டோரா போட்டு ஊர் மக்களுக்கு அறிவிக்கும் பொறுப்பு இவருடையது.இந்த பொறுப்பில் இருப்பவர்கள் பறையர் இனத்தை சார்ந்தவர்களாக உள்ளார்கள்.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

காராளரின் தவறான சிலை வழிபாடு:

காராளரின் தவறான சிலை வழிபாடு: 

கல்வராயன் மலை மற்றும் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று அருநூத்து மலை,சேர்வராயன் மலை மற்றும் அதன் அடிவாரங்களில் வாழும் மக்கள் காராளர் என்னும் மலையாளி இனம் ஆவர்.

இவர்களிடம் சில தவறான சிலை வழிபாடு முறை உள்ளது,அது பின்வருமாறு,

1.கரி வரதராஜ பெருமாள்:   
 
"கரிய வரதராஜ பெருமாள்","கரிய பெருமாளாக" மாறி,"கரிய பெருமாள்" "கரி ராமனாக" மாறி இன்று புதிதாக கட்டப்படும் கரி வரதராஜ பெருமாள் கோவில்களில் கரி ராமன் என்ற பெயரில் "ராமர்,லட்சுமண்" சிலையை வைத்து வழிபடுகிறார்கள்.
    
*ஆனால் ஆதிக்கோவிலான பெரியகல்வராயன் நாடு கரிய கோவிலில் "வரதராஜ பெருமாள்" தன் இரண்டு மனைவிகளோடும் அமர்ந்த நிலையில் இருக்கிறார்.   

*இந்த கோவிலுக்கு உரிமையானவர்கள் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று,கரிய பெருமாளை கரி ராமன் என்னும் பெயரில் வழிபடுகிறார்கள். 

*ஆதிக்கோவிலில் உள்ளவாறு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட்டால் தான் நம் குலதெய்வ கருணை நமக்கு கிடைக்கும்.    
    
2.இளைய பெருமாள்:
   
*கரிய கோவிலிலிருந்து சாமி பிரித்துக்கொண்டு சென்று சின்ன கல்வராயன் நாடு கருமந்துறையில் கட்டிய கோவில் இளையபெருமாள் கோவில். 
   
*உண்மையில் இதுவும் கரி வரதராஜ பெருமாள் கோவில் தான்.    

*ஆதிக் கோவிலுக்கு அடுத்த நிலையில் உள்ள கோவில் ஆதலால் இதற்கு இளைய பெருமாள் அல்லது லட்சுமணப் பெருமாள் என பெயர் வந்தது. 

*கருமந்துறையிலிருந்து வேறு பகுதிக்கு சென்றவர்கள் இளைய பெருமாளை,இளைய ராமன் என்னும் பெயரில் வழிபடுகிறார்கள்.
   
*இளைய பெருமாள்,லட்சுமண பெருமாள்,சென்றாய(சின்ன ராயன்) பெருமாள்,இளைய ராமன் அனைத்தும் ஒரே கடவுளின் வேறு வேறு பெயர்கள்.

*இளையபெருமாள் சாமியை இளைய ராமன் எனத் தவறாக பெயர் மாற்றி அழைத்து,இன்று எல்லா இளைய ராமன் கோவிலிலும் ராமர்,லட்சுமண் சிலையை வைத்து வழிபடுகிறார்கள்.இதுவும் தவறான வழிபாடு.    

3.ஶ்ரீரங்க பெருமாள்:   
 
*திருவரங்க பெருமாள் அல்லது பள்ளிகொண்ட பெருமாள் என்னும் கடவுள் படுத்த நிலையில் இருக்கும் பெருமாள் ஆகும்.    

*இதன் ஆதிக் கோவில் கல்வராயன் மலை ஆலனூர் ஊரில் உள்ளது.  
  
*இந்த ஶ்ரீ ரங்க பெருமாள் சாமியை ஶ்ரீரங்க ராமர் என தவறாக அழைத்து,படுத்திருக்கும் பெருமாளுக்கு பதில் "ராமர்,லட்சுமண்" சிலை வைத்து வழிபடுகிறார்கள்.    
    
குறிப்பு:    
*ராமர்,பெருமாள் அவதாரம் என்றாலும் சிலை வடிவங்கள் வேறு வேறு..    

*அவரவர்கள் கல்வராயன் மலைக்கு சென்று,தங்களின் ஆதி கோவில் சிலைகளை அறிந்து ,நம் குலதெய்வ வழிபாட்டை காக்க வேண்டும்.  

*நம் முன்னோர்கள் செய்த தவறை,நாம் சரி செய்து நம் குலதெய்வ வழிபாட்டை சரியான முறையில் கொண்டு போக வேண்டும்."    
    

வியாழன், 3 செப்டம்பர், 2026

salem gazetteer ல் கல்வராயன் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள்.

மதராஸ் மாவட்ட பதிவுகளில் கல்வராயன் மலை கல்வெட்டுகள்
(Kalvarayan inscriptions in Madras District gazeteer)

கோவில்புதூரில் உள்ள கரிய வரதராஜ பெருமாள்(கரிய பெருமாள்,கரிராமன்)கோயில், இந்த மலையின் அனைத்து மலையாளிகளாலும் ஒரு தேசிய ஆலயமாகப் போற்றப்படுகிறது என்பது உண்மை.

மலையாளிகள் தாங்களாகவே,கரி வரதராஜ பெருமாள்(கரிராமன்) கோயிலுக்கு அருகிலுள்ள ஒரு கல்லில் பொறிக்கப்பட்ட ஒரு பதிவை தங்கள் தோற்றத்திற்கு சான்றாகக் குறிப்பிடுகின்றனர். இந்தப் பதிவு வாய்மொழியாகத் திருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

1. திரு. லே பாஃனு அதன் பின்வரும் மொழிபெயர்ப்பைத் தருகிறார்: 

"இந்த கல்வராயன் மலை வேணுவராயன்(வாணவராயன்) என்ற அரசனால் ஒதுக்கப்பட்டது,இவர் வெவ்வேறு நிறத்தில் ஒரு லட்சம் குதிரைகளை வைத்திருந்தவர்.
சின்ன கல்விராயன்(கல்வராயன்) மற்றும் பெரிய கல்விராயன்(கல்வராயன்) ஆகிய நாடுகளில் உள்ள கரிய பெருமாள் மற்றும் பிற தெய்வங்களை வணங்குவதற்காக தேர் மற்றும் பிற விழாக்களை கொண்டாடுவதற்கு பரிசாக இந்த மலைகள் வழங்கப்பட்டுள்ளது.ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதை பின்பற்ற வேண்டும், மேலும் மேற்கூறியவற்றைச் செய்ய தவறுபவர்கள், கங்கை கரையில் காராம் பசுவைக் கொன்றவருக்குச் சமமான குற்றவாளிகளாக இருப்பார்கள்".

வாணவராயன் - ஆறகளூரை தலைமை இடமாக கொண்டு ஆத்தூர்,கல்வராயன் மலைகளை உள்ளடக்கிய மகதை மண்டலத்தை ஆட்சி செய்த குறுநில மன்னர்.
ஏழு நாடுகள் - கடைய நாடு, தென்மலை நாடு,ஆதிப்பதி நாடு,மதூர்(மடு) நாடு,உழவு நாடு,தென் நாடு,வட நாடு,மேல் நாடு மற்றும் கீழ் நாடு.
(தென்மலை நாடு என்று வருவதால் வடமலை நாடு என்ற நாடு இருந்திருக்க வேண்டும்.அந்த நாடு சின்ன திருப்பதி இருக்கும் பகுதியாக இருக்கலாம்.சின்ன திருப்பதி பெருமாளுக்கு வடக்கு மலையான் என்ற பெயரும் உண்டு)

(கள்ளிப்பாறை நாடு,உப்பு நாடு,தும்பை நாடு மற்றும் சுண்டப்ப நாடு ஆகிய நான்கு நாடுகள் பின்னாட்களில் உருவாக்கப்பட்ட ஊர்களாக இருக்கலாம்.)

2. இனாம் துறை கலெக்டர், 1866 ஆம் ஆண்டு பிஸ் அறிக்கையில், பெரிய-கல்ராயண் நாட்டில் உள்ள ஒரு கல்லில் உள்ள இரண்டு கல்வெட்டுகளைக் குறிப்பிடுகிறார்.

 முதல் கல்வெட்டு:

 ரௌத்ரி ஆண்டின் 21வது மார்கழி, சாலிவாகனா 942 (=1020 கி.பி.) தேதியில்,கல்வராய கவுண்டர் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை,நான்கு எல்லைகளுடன்,கடவுள் கரிய பெருமாளுக்கு வழங்கினார்" என்று பதிவு செய்துள்ளது. 

கரிய பெருமாள் - கரிராமர் அல்லது கரிய வரதராஜ பெருமாள்.

கல்வராயன் கவுண்டர் - கல்ராயன் அல்லது கல்விராயன்

இரண்டாவது கல்வெட்டு:

 சாலிவாஹன 1224 (=1302 கி.பி.) இல் தேதியிடப்பட்ட உதவியாகும், மேலும் "கல்ராய கவுண்டரும், எட்டு கரை நாட்டாரும்" என்ற சொற்களைக் கொண்டிருக்கிறது. 

3.பழங்காலத்தில் இந்த மலையாளி குடியேற்றத்தை நிரூபிக்க, கல்ராயன் 
பாளையக்காரர், ஜடயகவுண்டன் பாளையகாரர் வசம் உள்ள நான்கு செப்பு சாசனங்களிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, 
அவற்றில் இரண்டு விஜயநகர மகா கிருஷ்ண ராஜாவின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1519), மற்ற இரண்டு அச்சுத ராயரின் ஆட்சிக் காலத்திலும் (கி.பி. 1532) இருக்கிறது.

புதன், 2 செப்டம்பர், 2026

மலையனுடையான் செம்பை ஆழ்வான் கல்வெட்டு (கி.பி.1191).

காராளர் செம்பை அரையன் கல்வெட்டு:

இடம்: 
ஆறகளூர்,
திருக்காமீசுரமுடையார் கோயில் அர்த்தமண்டபத் தென்சுவர்.

அரசன்:- மூன்றாம் குலோத்துங்க சோழர்

ஆண்டு:- கி.பி.1191

 செய்தி :

"திரிபுவன சக்ரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் பதிமூன்றாம் ஆட்சி ஆண்டில்,மலையனுடையான் செம்பை ஆழ்வான் ஆன நான், என் காணியான இலத்திப்பாடியை,நான்கெல்லைக்குட்பட்ட நன்செய் புன்செய் நிலங்களை,ஆத்தூர் கூற்றம் ஆறகளூரில் உள்ள திருக்காமீசுவரமுடையார் கோவிலின் மகேசுவர கண்காணி,தேவகன்மி மற்றும் கோயிற் கணக்கற்கு,135 பொன்னுக்கு விற்பனை செய்தேன்.விற்பனை சாட்சி வேம்பாருடையான் முப்புளி........"

* மலையனுடையான் - மலையை உடையவன்,மலையை சார்ந்தவன்.

*செம்பை ஆழ்வான் - செம்பை நாட்டுக்கு அரசன்(அரையர்).

***"செம்பை அரையர்" குலம் இன்றும் கல்வராயன் மலையில் உள்ளது.இவர்களுக்கு "கல்லரையர், வாணவரையர்,கொங்கு அரையர்" எனும் குலத்தவர்கள் பங்காளிகள்.இவர்கள் அனைவரும் "அரையர்" எனும் ஒரே குலத்தைச் சார்ந்தவர்கள்.இவர்கள் காராளர் இனத்தைச் சார்ந்த மன்னர்கள்.***

*கோவில் நிர்வாக குழு - மகேசுவர கண்காணி,தேவகன்மி மற்றும் கோயிற் கணக்கர்.

*தமிழ் எண்கள் - ள(100),ங(3)ய(10)ரு(5) 

 கல்வெட்டு :

 1. ஹஸிஸ்ரீ தி ஜுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்-

 2. க சோழதேவர்க்கு யாண்டு பதின்மூன்றாவது ஆற்றூர் கூற்றத்து

 3. ஆறகளூருடையார் திருக்காமீசுரமுடைய நாயனார்க்கு

 4. இக் கோயிலில் சீமாகேசுர கண்காணி தேவகன்மி கோ-

 5. யிற் கணக்கற்கு மலையநுடையான் செம்பை ஆழ்வானே-

 6. ந் என் காணியான இலத்திபாடி நாங்கெல்லைக்குள்பட்-

 7. ட நன்செய் புன்செய் ஏந்தல்களுமுட்பட இந்நாயனாற்க்கு விற்-

 8. று நான் பற்றின பொன் ளஙயரு(135) இப்பொன் நூற்று முப்பத் த-

 9. ஞ்சும் பற்றி என்கணியான இலத்திபாடி ஏற்பேற்பட்ட

 10. உரிமைகளும் இந்நாயனார்க்கு குடுத்தேந் இக்கோயி இலி-

 11.எல்  சீமாகேசுரக் கண்காணி தேவகன்மி கோயிற் கணக்கு-

 12. ற்கு மலையநுடையாந் செம்பை ஆழ்வானேன் இவை என் எழு-

 13. த்து இப்படியறிவேன் வெம்பாருடையான் முப்புளியா

 14.......

நன்றி - சேலம் மாவட்ட கல்வெட்டுகள்.தொகுதி 1