கல்வராயன் மலையில் காராளர்(KARALAR )என்ற மலையாளி பழங்குடி (MALAYALI TRIBE)மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காராள கவுண்டர் என்ற பெயரும் மலையாள கவுண்டர் என்னும் பெயரும் உண்டு.
இந்த மலையை ஆண்ட காராளர் இனத்து மன்னர்களான,கல்வராயன் குலத்தவர்கள் கரியப்ப கவுண்டரும் பட்டத்து அண்ணியப்ப கவுண்டரும் கோவிலுக்கு கொடுத்த நில தானம் பற்றிய கல்வெட்டு இது. இருவரில் ஒருவர் மன்னராக இருந்துள்ளார்,இன்னொருவர் மகனாகவோ அல்லது தம்பியாகவோ இருக்கலாம்.கோவிலில் பூசை செய்வதற்கென்று, இவ்வினத்தில் நம்பி என்ற குலம் உள்ளது.நயினா கவுண்டர் நம்பி என்னும் நாம்பியான் குல முன்னோர் பெயரும் காணப்படுகிறது.
இம்மக்களிடையே பெயர் எழுதுவதற்கென்று ஒரு வழக்கம் இருந்திருக்கிறது.ஒருவர் தன் பெயர் எழுதும் போது தன் குல பெயரையும் சேர்த்து எழுதுவார்கள்.அந்த நடையிலேயே இந்த கல்வெட்டும் அமைந்துள்ளது.
கள்வரைய்ய என்பதற்கு கள்ளரைய்ய என்று படிக்கப்பட்டுள்ளது, கள் நாட்டில் ("கள் நாட்டி"என்று கூட இருக்கலாம்)என்பதற்கு கள்ள நாடு என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது....இந்த கல்வெட்டு இருக்கும் பகுதியில் வாழும் மக்களின் வரலாறை பார்க்கும் போதும் பழக்க வழக்கங்கள் பார்க்கும் போதும்,ஆண்ட மன்னர்கள் அவர்களின் குலங்களை ஆராயும் போதும், கல்வரைய்ய என்பது தான் சரியாக இருக்கிறது.படித்தவர்கள் எழுத்தை தவறாக கூட படிக்க வாய்ப்பிருக்கிறது.
கெராங்காடு கிராமத்தில் இரண்டு கல் வெட்டுக்கள் காணப்படுகின்றன. மலை மேலுள்ள அவையாரம்மன் கோவில் கல்வெட்டு சிதைந்துள்ளது.மாரியம்மன் கோவில் அருகே உள்ள கல்வெட்டின் மேல்புறம் பெருமாளின் சின்னமான சங்கு, சக்கரம் காணப்படுகிறது. மொத்தம் 35 வரிகளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இது 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும் என சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் புத்தகத்தில் வெளிவந்திருக்கிறது.ஆனால் Salem gazetteer ல் சாலி வாகன ஆண்டு 1224(கி.பி.1302) என்றும் கல்வராயன் கவுண்டர் என்றும் தெளிவான பதிவு உள்ளது.
இது மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும்.
இதில் விய வருடம் வைகாசி மாதம் 27-ம் தேதி முதல் அவ்வையாரம்மைக்கு பூஜைகள் செய்ய கள் நாட்டை (கீழ்நாடு) சேர்ந்த கருங்காடு (கெராங்காடு) என்ற பகுதியை கள்(ல்)வரைய்ய பெரிய கரியப்பக்கவுண்டர் பட்டத்து கள்(ல்)வரைய்ய அன்னியப்ப கவுண்டர் ஆகிய இரு தலைவர்களும் நாலுகரை நாட்டாரும் சேர்ந்து பூதானமாக கொடுத்துள்ளனர். பூதானம் என்பது ஒரு கிராமத்தையே தானமாக கொடுப்பது. இத்தானத்தை நயினாகவுண்டநம்பி என்பவர் நடத்தி வரவேண்டும். மேலும் பூஜையும், கட்டளையும் நடத்தி வருபவர்கள் உடல் நலமும் செல்வமும் பெறுவார்கள் . இத்தானத்தை சூரியன் சந்திரன் உள்ள வரை நடத்தி வர வேண்டும். இதற்குத் தீங்கு விளைவிப்பவர்கள்,கங்கை கரையிலே,காராம் பசுவை கொன்ற பாவத்திலே போவார்கள்.
கல்வெட்டு:
1. விய வருஷம் வய்யாசி மாதம் 27
2. அவைய்யாரம்மை
3. சுவாமியாற் 5 பூத
4. ானம் விட்டதுக்கு (க)
5. ள்வரையக பெரிய
6. கரியப்பகவுண்ட(ர்)
7. பட்டத்து கள்வ
8. ரய அண்ணியப்ப
9. கவுண்டர் இந்த ரண்
10. டு துரையளும் நாலு
11. கரைநாட்டரும் கள்(கீழ்)
12. நாட்டில் செத்த(செய்த) கா(ங்)
13. நாடு பூதானம் விட்ட
14. துக்கு பூசை நிமத்தி
15. யம் பண்ணி வருகுறவர்
16. கள் நயினாவுண்டந(ம்)பி
17. யார் உள்பட்ட யிந்தவூ(ர்)
18. தானததுக்கு யாதா மொரு
19. வர் பூசை கட்டளை அவி
20 (மெ) கம் அதி
21. காமாகா நடத்திவரு (கிற)
22. (வ)ர்கள் ஆயிராரோக்கி (ய)
23. (அய்)ஸ்வரியம் அவர்பி
24. .. வை தொழுது மாதா ..
25. யம் பண்ணி வருகுறவர்
26. இந்த பூ (த)ானம் பூமி
27. ஆக(வும்) சந்திர(ரா)தித்தர்
28. உள்ளமட்டும் நடத்தவு/ம் இ/
29. ப்படி யிதுக்கு (யாதா)
30. மொருத்தர ரண்டு(நி)
31. னைச்சவர்கள் கெங்
32. கைக்கரையிலே
33. க(ஈ) ராம் பசுவை (க்)
34. கொன்ற பாவத்தி
35. (லே)போவர் (கள்)
(சேலம் நாமக்கல் மாவட்ட கல்வெட்டுகள் - கிருட்டிணன்) பக்கம் 91
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக