ஆண்டு - 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டு
அரசர் : வாணராயர்
விளக்கம் :
"1.இந்நடுகல் கல்வெட்டு 8-9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகிறது. இதில் எந்த வேந்தர் பெயரும் குறிப்பிடாதது அரிமிறைய மாவலி வாணராயர் சுதந்திர ஆட்சியை நடத்தினர் என்று கொள்ள வேண்டியுள்ளது.
2.அவர் கங்க நாடு (தகடூர்), புறமலைநாடு (அரூர்), கோயினூர்நாடு, கோவூர்நாடு (ஊத்தங்கரை), தாயனூர்நாடு, பற்றநாடு என்று மிக பெரிய நிலப் பரப்பை ஆண்டுள்ளார்.
3.வாணர் குடும்பத்திற்கும் நுளம்பர் குடும்பத்திற்கும் இடையே முன்னம் திருமணம் நிகழ்ந்து நுளம்பன் இவருக்கு அத்தான் உறவாகிப் போனான். அந்த நுளம்பன் அரிமிறைய வாணன் குடும்பத்தில் பெண் எடுத்து மாப்பிள்ளை ஆகிப் போனான்.
4.அந்த உரிமையில் அரிமிறைய வாணனை வஞ்சித்து அவனது நாட்டின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டான் நுளம்பன். இதனால் இருவருக்கும் நிகழ்ந்த போரில் அரிமிறைய வாணன் போரில் இறந்து விடுகிறான்.
5.இவனுடைய மனைவியர் அதன் பின் கருவுற்றிருப்பதை அறிய வர அதற்காக அவர்களைக் காத்து அதில் ஒருத்தி ஆண் பிள்ளை பெற்றவுடன் படையுடன் தகடூரில் புகுந்து நுளம்பன் படையுடன் துணிந்து மோதி இழந்த நாட்டைக் கைப்பற்றினார் படைத்தலைவர் சங்கரக் குட்டியார்.
6.அவருடன் இணைந்து தகடூரில் படையோடு புகுந்து வீரச்சாவடைந்தார் கல் நாட்டைச் சேர்ந்த நாகந்தை சிறு குட்டியார்."
கல்வெட்டு:
"ஸ்வஸ்திஸ்ரீ அரிமிதைய மாவலி வாணராயர்
கங்கநாடும் புறமலைநாடும் கோயினூர்நாடும்
கோவூர்நாடும் தாயனூர்நாடும் பற்றநாடும் ம _ _ _
அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய் கொண்டுள்
புகுந்து வஞ்சித்து நாடு கொண்டானுளம்பன்.
அவர் போரிற் றுஞ்சின பின்னைத் தேவிமார்
கருப்பிணியருளராக அவகளைக் காத்திருந்
தாண் பிள்ளைப் பெறுவதுந் தகடூர் புகுந்து
நுளம்பன் பலத்தோடே துணிந்து நாடு பாவி
நார் சங்கரகுட்டியார் . அவரோடுடன்
புகுந்து தகடூரில் பட்டார் நாகந்தை
சிறு குட்டியார் கல்நாடு."
தாநாகி – அத்தானாகி;
பலத்தோடு – படையுடன்;
நாடுபாவி – நாடுவிரித்து, ஆக்கிரமித்து; பட்டான் – வீரசாவடைந்தான்;
தகடூர் - தருமபுரி,
புறமலை நாடு -அரூர் சுற்றுவட்டார பகுதி,
கல்நாடு – கல்வராயன் மலை.
*கல்நாடு என்பது இறந்தவருக்கு கொடுத்த நிலமாக இருக்கலாம் என்பது ஆய்வாளர் கருத்து.ஆனால் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோட்டுப்பட்டி கல்வெட்டில் கன்னாடு அல்லது கல்நாடு என்பது கல்வராயன் மலையை குறிக்கிறது.
*கல்நாடு என்னும் ஊர் அரூர் வட்டத்தில் உள்ள தேனாண்டை மலையில்(சித்தேரி மலை) உள்ளது.
*இந்த கல்நாட்டை ஆட்சி செய்தவர்கள் கல்லரையர்கள் அல்லது கல்ராயர்கள் எனப்பட்டனர்.இவர்களுக்கு வாணவரையர் என்னும் பெயரும் அரையர் எனும் பெயரும் உண்டு.
*இதே கால வாணராயர் கல்வெட்டு கொல்லிமலையில் வாசலூர் சிவன் கோவிலில் உண்டு.
*முதலாம் மகேந்திர நுளம்பன் தான் அரிமிறைய வாணனை வஞ்சித்து நாடு கவர்ந்தான் என்று கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் இவர்களது அதிகாரம் பல்லவரால் ஏற்பட்டது.
குறிப்பு:
கல்வராயன் மலை மற்றும் அதன் அடிவாரம் பகுதியில் காராளர் என்னும் மலையாளி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கல்வெட்டுகளில் இவர்கள் மலையாளர்,மலையாழ்வான்,மலையாள முதலி,பிள்ளை முதலி
என்றும்.காராளர்,காராள முதலி,காராளக் கவுண்டர்,மலையாளக் கவுண்டர்,மலைக் கவுண்டர்,மலை வெள்ளாளர்,மலையாளி எனப் பிறப் பெயர்களால் அறியப்படுகின்றனர்.
பார்வை நூல்:
கல்வெட்டியல்,பக்கம் -132,
தமிழ்நாட்டு தொல்லியல் துறை வெளியீடு.