வியாழன், 6 ஆகஸ்ட், 2026

மலையாளி கவுண்டர் பெயரை சேர்க்கக் கூடாது என மனு

"மலையாளி கவுண்டர்" என சாதி சான்றிதழ் கொடுக்க கூடாது என மனு:

நாள் : 28.05.2016

பெறுதல் :

1. தலைமை செயலாளர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
சென்னை.

2. அரசு செயலாளர் அவர்கள்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
தமிழ்நாடு அரசு,
சென்னை.

3. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
ஈரோடு மாவட்டம்.

பொருள் : மலையாளி கவுண்டர்கள் - பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு / ஈரோடு மாவட்ட மலையாளிகளுக்கு பழங்குடியின அங்கீகாரம் / மைய அரசின் அமைச்சரவை முடிவு / தமிழக அரசின் தலையீடு கோருதல்.

அன்புடையீர், வணக்கம்.

*தமிழகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழும் பழங்குடியினர் மலையாளி இனத்தவர் ஆவர்.

*தமிழக பழங்குடியினர் பட்டியலில் வரிசை எண்: 25-ல், மலையாளி இனத்தவர் - தர்மபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், கடலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.

*ஆனால், ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், சத்தியமங்கலம் வருவாய் வட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் சுமார் 50 கிராமங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலையாளி இன மக்கள் வசித்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், பழங்குடியினர் பட்டியலில் குறிப்பிடப்படாததால், கடம்பூர், பர்கூர் மலையாளி இன மக்கள் பழங்குடி இனச்சான்றை பெறமுடியவில்லை.

*இதனால், இம்மக்களின் சமூக, பொருளாதார, கல்வி வாய்ப்புகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. மாணவர் விடுதிகளில் கூட தங்கி படிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு மறுக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல்லாண்டு காலம் பல்வேறு அமைப்பினரும் அரசினை வலியுறுத்தி வந்தார்கள்.

*நானும் சட்ட பேரவையில் பேசும் போது பலமுறை இக்கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளேன். பேரவையில் இது குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளேன். துறைச் செயலர்கள், தலைமை செயலாளர், அமைச்சர், முதல்வர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தியும் உள்ளேன்.

*தமிழக அரசு, ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைய அரசிற்கு பரிந்துரையும் செய்துள்ளது. உதகையில் உள்ள பழங்குடியினர் ஆய்வு மையமும், சென்னை பல்கலைக்கழக மானுடவியல் துறையும் ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்கள் பழங்குடியினர் தான் என்பதற்கான ஆய்வினையும் மேற்கொண்டு பரிந்துரைத்துள்ளார்கள்.

*இந்நிலையில் கடந்த வாரம் மத்திய அமைச்சரவை "மலையாளி கவுண்டர்" இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் எப்பகுதியில் இருந்தும் இப்படி ஒரு கோரிக்கை எழுப்பப்பட்டதாகவே தெரியவில்லை. 

*மேலும் மலையாளி கவுண்டர் என்று குறிப்பிடப்படும் பிரிவு மக்கள் எங்கும் வாழ்வதாகவும் தெரியவில்லை. பழங்குடியினர் சாதி பிரிவிற்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களுக்கு கவுண்டர் என்னும் சாதி அடையாளத்தை குறிப்பது பொருத்தமாகவும் இல்லை. 

*மைய அரசு எப்படி இது போன்ற முடிவிற்கு வந்தது என்பது தெரியவில்லை. ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தான் மலையாளி இன மக்களை பொறுத்த அளவில் ஒரே கோரிக்கையாகும். இதற்கு ஏற்கனவே தமிழக பட்டியலில் உள்ள பகுதி வரையறையை (AREA RESTRICTION) நீக்கினாலே போதுமானதாகும். மைய அரசின் முடிவு குழப்பத்திற்கு தான் வழிகோலியுள்ளது.

*நீண்ட காலம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்கள் அதிர்ச்சிக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளார்கள்.

*இதுகுறித்து தமிழக அரசு, மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள வரைவு மசோதாவில் கவனம் செலுத்தி உரிய திருத்தங்களுக்கு பரிந்துரைத்து ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து, ஈரோடு மாவட்ட மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இப்படிக்கு,

(பி.எல்.சுந்தரம்)
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
பவானிசாகர் சட்டமன்ற தொகுதி.



 நன்றி :
The Times Tamil
https://timestamil.wordpress.com/2016/05/30/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக