வெள்ளி, 9 அக்டோபர், 2026

மோட்டுப்பட்டி இராஜராஜ சோழர் கல்வெட்டு (கி.பி.1010)

மோட்டுப்பட்டி இராஜராஜ சோழர் கல்வெட்டு (கி.பி.1010) :-


ஊர் : மோட்டுப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்.தருமபுரி மாவட்டம்.

இடம் : மகாதேவர் (சிவன்) கோயிலின் தெற்கே பாறையில் உள்ள கல்வெட்டு

மன்னர் : முதலாம் இராசராச சோழன்

ஆண்டு : கி.பி.1010 (1000 ஆண்டுகளுக்கு முன்)

செய்தி:
1.முதலாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்,தகடூர் நாட்டை பிரம்மாதிராயர் என்னும் குறுநில மன்னர் ஆளும் போது,

2.தகடூர் நாட்டிலுள்ள புறமலைநாட்டை எருமையன் என்பவன் ஆளும்போது,

3.அந்த நாட்டு கவுண்டனான,நெல்வாய் ஊரைச் சார்ந்த வீரசோழ காமுண்டன் மகன் நன்னி காமுண்டன் என்பவர்,அவர் ஊரான நெல்வாய் பெயரிலிருக்கும்,மகாதேவர்(சிவன்) கோவிலுக்கு தினமும் விளக்கு வைக்க,நிலம் தானம் விட்ட செய்தி மற்றும் நில எல்லைகள் செய்தி.

குறிப்புகள்:

*பிரம்மாதிராஜன் - இவருடைய இயற்பெயர் "திருவிக்கிரம பட்டர்" எனவும்,இவர் சேதியூரை சார்ந்தவர் எனவும்,உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலத்தை ஆண்டு வந்த கணத்தாரில்(ஆணையர்) ஒருவர் எனவும் காஞ்சிபுரம் மாவட்டம் உக்கல் ஊரிலுள்ள, விட்டுணு(விஷ்ணு) கோவில் கல்வெட்டு கூறுகிறது.

*தகடூர் - தருமபுரி

*புறமலை நாடு - அரூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்

*அரியூர் - அரூர்

*காமுண்டன் - கவுண்டன்

*நெல்வாய் - ஜவ்வாது மலையில் உள்ள நெல்வாசல்/ நெல்லிவாசல் ஊர்.

*கல்நாடு அல்லது கன்நாடு - கல்வராயன் மலையின் பழையப் பெயர்.

*எருமையன் - எருமை நாட்டைச் சேர்ந்த கங்க மன்னர். 
(எருமை நாடு - கொங்கு நாட்டுக்கு வடக்கு பகுதி,கர்நாடகத்தின் தெற்குப் பகுதி மற்றும் கேரளாவின் வடக்குப் பகுதி) .

*பழங்காலத்தில் எருமை நாட்டு (கார் மண்டலம்) பகுதியிலிருந்து வந்தவர்கள் காராளர்கள் என கார்மண்டல சதகம் கூறுகிறது.



விளக்கம் :

1.முதலாம் இராஜராஜன் சோழனின் 25 ஆம் ஆட்சியாண்டில்,தகடூர் நாட்டை பிரமாதிராயர் ஆளும் பொழுது,

2.புறமலை நாட்டு அரியூரை எருமையான் ஆளும்பொழுது,

3.அரியூர் காமுண்டனான வீர சோழக் காமுண்டன் மகன் நன்னி காமுண்டன் ஆன நான்,

4.என் ஊரின்,நெல்வாய் மகாதேவர் திருச்சென்னடைக்கு நிவந்தமாக நிலம் விட்டேன்.

5.அதன் கிழக்கு எல்லை: ஆற்றின் மேற்கு பகுதி.

6.தெற்கு எல்லை : ஊர் பிடாரி கோவிலுக்கு வடக்கு.

7.மேற்கு எல்லை : கன்(கல்) நாட்டுக்கு கிழக்கு புறத்தில் பாப்பம்பாடிக்கு போகும் வழி.

8.வடக்கு எல்லை: புத்தூர் ஊர் எல்லைக்குத் தெற்கு.

9.இந்த நான்கு எல்லைக்குள்ள கழனியும் கொள்ளையும் சந்திரன் சூரியன் இருக்கும் வரை கோவிலில் விளக்கு வைக்க கொடுத்தேன்.இந்த தானத்தை ஏற்பவன் பாதம் என் தலைமேல்.

10.புறமலை நாட்டு நாட்டவர் மற்றும் சிறிய பெரிய ஊர்களை சேர்ந்தவர்கள் இந்த தானத்தை ஏற்றுக் கொண்டோம்.

11.தவறுபவர்கள் கங்கைக்கும் குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தில் செய்த பெரிய பாவத்தை அடைவோம்.ஏழு நரகம் புகுவோம்.

கல்வெட்டு :

1 .ஸ்வஸ்த்தி ஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியுந் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலை கல

2 .மறுத்தருளி வேங்கை நாடுங் கங்கபாடியு நுளம்பபாடியுந் தடிகை வழியுங் குடமலை நாடுங் கொல்லமுங் கலிங்

3.கமு மெண்டிசை புகழ்தர ஈழமண்டல முமிரட்ட பாடி யேழரை யிலக்கமுந் திண்டிறல் வென்றித்தண்டாற்

4 .கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லா யாண்டிலுந் தொழு தகை விளங்கும் யாண்டே செழிஞரைத் தேசுகொள் ஸ்ரீ கோ

5 .ராஜராஜகேசரி வரான ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு உயரு வது உடையார் பெருந்தரத்து வ...யன் பிரமாதிராயர் தகடூர் நாடு

6 .ஜீவிதமாளா நிற்க புறமலை நாட்டு அரியூருடைய எருமையனாழ காமுண்டனான வீரசோழகாமுண்டன் மகன் நன்னி

7 .காமுண்டனே னென்னூர் நெல்வாய் மஹா தேவர்க்குத் திருச் சென்னடைக்கு நிவந்தமாக இறையிலி செய்து கு

8 .டுத்த நிலமாவது கீழ்பாற்கெல்லை யாற்றின் மேல்கரையுந் தென்பாற் கெல்லை ஊர்பிடாரி கோயிலுக்கு வடக்கு மேல்பா

9 .ற்கெல்லை பாப்பான்பாடி மேற்போன வழியிற் கன்னாட்டுக்குக் கிழக்கும் வடபாற்கெல்லை புத்தூரெல்லைக்குத்

10 .தெற்குநடுவுபட்ட நிலத்திலென்னேரியுங் கழனியுங் கொல்லையுஞ் குதித்தெவல் நிற்க உடிகஸூவ

11 ஞ் செய்து குடுத்தேன் இயமிறக்குவார் கெங்கை யிடைக் கு மரியிடை நடுவு பட்டார் செய்த பாவங்கொள்.

12 வார் இது ரக்ஷிப்பான் ஸ்ரீ பாதம் அடியேனாய்த் தலைமேலன.இவ்வாண்டு புறமலைநாட்டு நாட்டோமிவ்வூ

13 ர் ஹஷேவர்க்கு வைத்த நகர விளக்கொன்றினுக்கு இன் னாட்டுச் சிற்றூர் பேருரென்னதே யூராலிருந்தும் பெண்ணை

14 தித்தெவலட்டுவதாகச் செய்துக் குடுத்தோ மிதன்றென்பானெ ழான ரகத்துக் கீழானரகம் புகுவார்.

நன்றி:
தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக