MALAYALA GOUNDER OR TAMIL MALAYALI
சனி, 8 மே, 2021
கதிர்முனை தீண்டா காராளன்
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020
மலைக்கவுண்டர் பற்றி செல்வபாண்டியன் கட்டுரையிலிருந்து.....
மலையாளி பழங்குடி மக்களின் இடப்பெயர்வும் தோற்றத் தொன்மங்களும்
மனித இனத்தில் தொன்மைச் சமூகங்களாய் விளங்குபவர்கள் பழங்குடி மக்கள் (Tribes) ஆவர். பழங்குடிச் சமூக அமைப்பிலிருந்து தான் மனித சமுதாயம் வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை எட்டியுள்ளது எனச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்குடி மக்களின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலமாக மனிதக் குலத்தின் தொடக்கக் கால வரலாற்றையும் வளர்ச்சி நிலைகளையும் அறிய முடியும். உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலில் ஒத்த பண்புக் கூறுகள் காணப்படினும் அந்நிலப்பரப்புகளுக்குரிய தனித்துவமான பண்புக் கூறுகளையும் பிரித்தறிய முடிகிறது.
தமிழகப் பழங்குடிச் சமூகங்கள்
தமிழக அரசின் அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் அமலாக்கச் சட்டப்படி (Tamilnadu SC and ST order (Amendment) Act., (1976) தமிழ்நாட்டில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன. அவையாவன, அடியான், அரநாடன், இரவாளன், இருளர், ஊராளி, கணியன், கம்மாரா, காட்டு நாயக்கன், காடர், காணிக்காரன், குறும்பர், குறிச்சன், குடியர்/மலைக்குடி, குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பளியர், பள்ளியன், பள்ளேயன், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக்குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலைவேடன், மன்னான், முதுவன், முடுவன் / முடுகர்.
2001 ம் ஆண்டின் குடிமதிப்புக் கணக்கின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 62,405,679 ஆகும். இதில் தமிழகத்திலுள்ள 36 பழங்குடிச் சமூகங்களின் மொத்த மக்கள் தொகை 6,51,321 ஆகும். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில்1.0 விழுக்காடாகும்.
தமிழகத்திலுள்ள மலையாளி பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 3,10,042 ஆகும். தமிழகப் பழங்குடி மக்களின் மக்கள் தொகையில் இது 47.6 விழுக்காடாகும். அதாவது தமிழகப் பழங்குடி மக்களில், சற்றொப்ப பாதி அளவினர் மலையாளி பழங்குடி மக்களே ஆவர்.
தமிழகப் பழங்குடிச் சமூகங்களை மூன்று வகையினங்களாகப் பிரித்துக் காணலாம். (பக்தவத்சலபாரதி, 2013 :40)
அ. தொல் பழங்குடியினர் (Aboriginal Tribes)
இம்மக்கள் வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு தம் வாழிடங்களில் இடப்பெயர்ச்சி ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். பழங்குடி சமய, வாழ்வியல் கூறுகளைக் கொண்டுள்ளனர். (காடர், தோடர், இருளர், பளியர், காட்டுநாய்க்கர், கோத்தர் போன்றோர்).
ஆ. முதுகுடியினர் (Primitive Tribes)
இம்மக்கள் தம் வாழிடங்களில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தோற்றத் தொன்மங்களில் சாதியத்தின் முன் வடிவம் காணப்படுகின்றது. (தொதவர், கோத்தர், குறும்பர் ஆகிய மூவரும் கடவுளின் வியர்வைத் துளிகளிலிருந்து பிறந்த உடன்பிறந்தோர் எனும் தோற்றத் தொன்மம்)
இ. பழங்குடியினர் (Tribes)
ஏதாவது நெருக்கடிகளின் (அரசியல், வறுமை (பஞ்சம்), நோய்) காரணமாக சமவெளிப் பகுதியிலிருந்து மலைப்பகுதிகளுக்கோ அல்லது வேறு பிரதேசத்துக்கோ இடப்பெயர்ச்சி செய்து அங்கேயே தங்கிவிட்டவர்கள் (மலையாளி, முதுவர், பளியர், மலைப்பண்டாரம், கணியான், அடியான், குறுமன், கொரகர், காட்டு நாயக்கர், குறிச்சான் போன்றோர்) பூர்வீகத்தில் வழிபட்ட சைவ வைணவக் கடவுள்களைத் தற்போதும் வணங்கி வருகின்றனர். குறிப்பாக மலையாளி பழங்குடியினரிடையே நிலப்பிரபுத்துவ அமைப்பு இன்னும் நிலைபெற்றுள்ளது.
தமிழகப் பழங்குடிகளின் வாழ்விடம்
தமிழகப் பழங்குடிகள், தமிழ்நாட்டிலுள்ள 3834 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் பழங்குடிகளின் வாழ்விடத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. மலைப்பகுதிகள், 2. அடிவாரப்பகுதிகள் 3. சமவெளிப்பகுதிகள். பெரும்பான்மையான தமிழகப் பழங்குடிகள் மலைப் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலை, மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அவர்களது வாழ்விடம் அமைந்துள்ளது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் (Eastern Ghats) வாழும் பழங்குடி இனங்கள்
ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் இத்தொடர் வடக்கில் மகாநதிப் பள்ளத்தாக்கில் தொடங்கி தெற்கில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகையாறு வரை நீள்கிறது. நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகிறது. இம்மலைகளின் மொத்தப் பரப்பளவு 152,000 சதுர கிலோ மீட்டர்களாகும்.
இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 60 பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். கிழக்குத் தொடர்ச்சி மலையின் வடபகுதியில் (ஒடிசாவின் மகாநதி பள்ளத்தாக்கு, சத்தீஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்கள், ஆந்திர பிரதேசத்தின் பள்ளத்தாக்கு வரை) சுமார் 1.76 கோடி பழங்குடி மக்களும், தென்பகுதியில் (கிருஷ்ணா நதி பள்ளத்தாக்கிலிருந்து நீலகிரி மலைத்தொடர் வரை) சுமார் 20 லட்சம் பழங்குடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலை, அதன் அடிவாரப் பகுதிகள், சமவெளிப்பகுதிகளில் மலையாளி, கொண்டாரெட்டி, குறிச்சான், குறுமன், சோளகர், ஊராளி, இருளர் ஆகிய 7 பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சித்தேரி மலை, வாச்சாத்திமலை, ஜல்லூத்து மலை, கோதுமலை, கஞ்சமலை, நகரமலை, கடகமலை, பச்சைமலை, பாலமலை, கொல்லிமலை ஆகிய அனைத்து மலைகளிலும் மலையாளி பழங்குடிகளே பெரும்பாலும் வாழ்கின்றனர். அதாவது மலையாளிகள் அனைவரும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில்தான் வாழ்கின்றனர்.
குஜராத், மகாராஷ்டிரா எல்லை தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் இத்தொடர் கேரளத்தின் அகஸ்தியர் மலை வரை தொடர்ச்சியாக நீள்கிறது. இம்மலைகளின் மொத்தப் பரப்பளவு 160,000 சதுர கிலோமீட்டர்களாகும்.
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை, அதன் அடிவாரப் பகுதிகள், சமவெளிப்பகுதிகளில் 26-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். காடர், பணியர், தொதுவர், குறும்பர், கோத்தர், இருளர், சோளகர், ஊராளி, காட்டு நாயக்கர், ஆகியோர் நீலகிரி மலைப்பகுதியிலும்; குன்னூர், புலையர், மலைவேடர், பளியர், பள்ளியன், பள்ளேயன், மலசர், முதுவன், முடுவன்/முடுவர், மன்னான் ஆகியோர் ஆனைமலை, பழனிமலை பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
பழங்குடி மக்களின் இடப்பெயர்வு
பழங்குடி மக்களிடையே பல்வேறு காரணங்களால் இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆதிமனிதன் தன் வாழ்வியல் தேவைகளுக்காகவும், இயற்கை இடர்களினாலும், பிற இனக்குழுக்களுடனான மோதல்களாலும், சமூக விலக்கம் போன்ற இதர காரணிகளாலும் இடம் பெயர்ந்தான். சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த சமூகங்கள் அரசியல், சமூக, பொருளாதார காரணங்களால் மலைப்பகுதிகளுக்குச் சென்று வாழத் தலைப்பட்டனர். காலப்போக்கில் அப்பகுதிகளிலேயே நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு பழங்குடிச் சமூகங்களிடையே நிலவும் பழமரபுக் கதைகளைத் (Legends) தொகுத்துக் காணும்போது பெரும்பான்மையும் அரசியல் காரணங்களாலேயே இத்தகைய இடப்பெயர்வு நிகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.
இதனையே,‘ஒருகாலகட்டத்தில் இந்தியப் பழங்குடிகளில் பலர் நகர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் பின்னர் அரசியல் சமுதாயக் காரணங்களில் ஒதுக்கப்படும் பழங்குடிகளாக வாழ்ந்து வருபவர்களாகவும் காணப்படுகின்றனர்’ (பீ. நசீம்தீன், 1989:9) எனவும், `இப் பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து சென்ற சூழல் வரலாற்று நூல்களில் பெருவாரியாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பழங்குடி இன மக்கள் பெருவாரியாக மலைகளில் வசித்து வருகின்றனர். இம்மக்களில் சிலர் ஆரம்பக் காலங்களில் தாழ்ந்த சமதள நிலங்களில் வசித்து வந்தவர்கள் என்றும் அரசியல் காரணங்களால் பயந்து மலைகளில் சென்று குடியேறிவிட்டனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்’ (சு. தாமரைப்பாண்டியன், 2008:36) எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மன்னான், முதுவர், ஆறுநாடன், காணிக்காரர், பளியர், குறும்பர், மலைக்குறவர்கள், காட்டு நாயக்கர்கள், மலைவேடர்கள், குறிச்சன், தொதுவர்கள், கொண்டகாபு மற்றும் கொண்டரெட்டி, இருளர்கள் ஆகிய பழங்குடிகள் இடம் பெயர்ந்து சென்று வாழும் வரலாற்றை ஆய்வுகள் வழி அறியமுடிகிறது.
‘மலையாளி’ என்ற சொல் மலைகளில் வாழ்பவன் எனப் பொருள்படும். ‘மலையை ஆள்பவர்’ என்ற பொருளிலும் ‘மலையாளி’ என்ற சொல் வழங்கப்படுகிறது. கேரளாவிலுள்ள மலையாளி மக்களுக்கும் இவர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை. இம்மக்கள் சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைகளில் குடியேறியவர்களாவர்.
இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்த ‘காராள வேளாளர்’ எனத் தம்மைக் கூறிக்கொள்கின்றனர். ‘கார்+ஆளர்=கார்மேகத்தை ஆள்பவர்’ எனப் பொருள்படும். (க.ஆ., 05.01.2014, செல்லமுத்து, 80, பெரியபக்களம்) ‘எட்கர் தர்ஸ்டன் தனது நூலில் மலையாளிகள் என்போர் 15-ஆம் நூற்றாண்டின் போது போர் முதலிய காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்த வேளாளர்கள்’ (எட்கர் தர்ஸ்டன், 1993:497) எனக் குறிப்பிடுகிறார்.
மலையாளி பழங்குடியினர் குறித்து தமிழ் லெக்சிகன் கூறும் கருத்துக்கள்
‘மலையாளிகள், முகமதியர் தென்னாடு வந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து சென்று சேர்வராயன் மலையிற் குடியேறிய வேளாளர் வகுப்பினர்’ (தமிழ் லெக்சிகன் 5.3110)
‘காராளர் என்பதற்குப் பழங்காலத்தில் இருந்த ஒரு முரட்டுச்சாதியர், சேலம், தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ள மலைவாசிகளான ஒரு வேடச்சாதியர்’ (தமிழ் லெக்சிகன் 2. 885).
தோற்றத் தொன்மங்கள்
மலையாளிகள் பற்றிய தோற்றத் தொன்மங்களாக எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ எனும் தன் நூலில் பின்வரும் குறிப்புகளைத் தருகிறார்.
‘சேலம் மாவட்டக் கையேடு – எச்.லெ.பனு:‘தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி மேலோங்கியபோது காஞ்சிபுரத்திலிருந்து பத்துத் தலைமுறைகளுக்கு முன்னர் மலைப்பகுதியில் குடியேறியவர்கள். காஞ்சியை விட்டுப் புறப்பட்டு வரும்போது மூன்று உடன்பிறந்தோருடன் இவர்களின் முன்னோர்கள் வந்தனர். அம்மூவருள் மூத்தவன் சேர்வராயன் மலையிலும் இரண்டாமவன் கொல்லிமலையிலும், இளையவன் பச்சைமலையிலும் தங்கினர். மலையாளிகளின் தெய்வமான கரிராமன் காஞ்சியில் இருக்கப் பிடிக்காதவனாகப் புதியதொரு இடத்திற்குக் குடிபெயர்ந்தான், அவனைப் பின் தொடர்ந்து வந்த பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் ஆகிய மூவரும் தங்கள் குடும்பத்தோடு புறப்பட்டுச் சேலம் மாவட்டத்திற்கு வந்து பெரியண்ணன் சேர்வராயன் மலைக்கும், நடுவண்ணன் பச்சைமலைகளுக்கும், அஞ்சூர் மலைகளுக்கும், சின்னண்ணன் மஞ்சவாடிக்கும் சென்று சேர்ந்தனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகளின் தோற்றம் - எப்.ஆர்.ஹெமிங்வே: இவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூசாரியின் சந்ததியினர் ஆவர். அப்பூசாரி அந்நாட்டு மன்னனின் உடன் பிறந்தவன். தன் உடன்பிறந்தவனான மன்னனுடன் சண்டையிட்டுக் கொண்டு தன் மூன்று மகன்களுடனும் ஒரு மகளுடனும் இப்பகுதிக்கு வந்து சேர்ந்தான். இப்பகுதியை ஆண்டு வந்த வேடர்களும் வேளாளர்களும் புதிதாக வந்த இவர்களைத் தடுக்க முற்பட்டனர். எனினும் இருசாரருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் புதிதாக வந்தவர்கள் வெற்றிவாகை சூடி மலைப்பகுதிகளில் பரவத் தொடங்கினர். பெரியண்ணன் கைக்கோளர் சாதியிலிருந்தும், நடுவண்ணன் வேடர் சாதியிலிருந்தும், சின்னண்ணன் தேவேந்திர குலத்தவரான பள்ளர் சாதியிலிருந்தும் பெண்களை மணந்தனர்.
வட ஆர்க்காடு மாவட்டக் கையேடு கூறும் சவ்வாது மலையில் வாழும் மலையாளிகள் தம் தோற்றம் பற்றித் தெரிவிக்கும் விவரங்கள்: காஞ்சிபுரத்தைச் சார்ந்த கார்காத்த வேளாளர்கள் தங்கள் பெண்களைக் கவர்ந்து சென்ற வேடர்களைக் கொன்று இல்லங்களுக்குத் திரும்பினர். இவர்கள் இறந்துவிட்டதாகக் கருதி இவர்களது மனைவியர் விதவைக் கோலம் பூண்டு சாவுச் சடங்குகளை நிகழ்த்திவிட்டிருந்த காரணத்தால் சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டதை உணர்ந்தனர். இச்சூழ்நிலையில் இவர்கள் வேடர் சாதி பெண்களை மணந்தவர்களாகச் சவ்வாது மலையில் குடியேறிப் பயிர்த் தொழிலில் ஈடுபட்டவர்களாக மலையாளிகளின் மூதாதையர்கள் ஆகிவிட்டனர்.
தென்னாற்காடு மாவட்ட விவரக் குறிப்பு – பிரான்சிஸ் - தென்னாற்காடு மாவட்டத்தில் வழங்கும் வழக்கு வரலாறு: இம்மலைகளில் வேடர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை மலையாளிகள் கொன்று அவர்கள் சாதிப் பெண்களை மணந்து கொண்டனர். இவர்கள் சாதித் திருமணங்களில் வேடர் சாதிக் கணவன் இறந்தபின் மணம் நிகழ்த்தப்படுகின்றது என்பதைக் குறிக்க இன்றும் துப்பாக்கியினைச் சுடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.’ (எட்கர் தர்ஸ்டன், 1993:497-501).
`சென்னை மாகாண பழங்குடிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கை’ எனும் நூலில் அய்யப்பன் குறிப்பிடும் தோற்றத் தொன்மம்: ‘சாதி விலக்குக்கு உட்பட்ட பெரியண்ணன், நடு அண்ணன், சின்னண்ணன் ஆகிய மூவரும் முறையே கைக்கோளர், வேடர், பள்ளர் பெண்களை மணந்து முறையே கல்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலைப் பகுதிகளுக்கு வந்து குடியேறினர்’ என தர்ஸ்டன் கூறியுள்ளதைச் சுட்டுகிறார் ( A. Ayyappan, 2000 : 143).
தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் – கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள் எனும் நூலில் முனைவர் சி.நல்லதம்பி குறிப்பிடும் தோற்றத் தொன்மம்:‘காஞ்சிபுரத்திலிருந்து விசயநகர மன்னர்களின் காலத்தில் இடம் பெயர்ந்தவர்கள், பாலாற்றைக் கடந்து கல்வராயன் மலைப்பகுதியின் எல்லையில் அரியக் கவுண்டன் பாளையப்பட்டு பகுதிமலைகளில் குடியேறினார்கள். அவ்வாறு குடியேறியவர்கள் அங்கிருந்து சவ்வாது மலை, வத்தல்மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலை போன்ற ஏனைய குன்றுகளுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள். மேலும், முகலாயர்களின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் கூட்டம் காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றைக் கடந்து ஓடிச்சென்று கல்வராயன் மலைப்பகுதிகளிலும், பிற மலைப்பகுதிகளிலும் குடியேறியிருக்கிறார்கள். போரின் காரணமாகக் குடியேறியவர்கள் அங்குள்ள வேடர்குலப் பெண்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்’. (சி. நல்லதம்பி, 2011: 30).
‘தருமபுரி மாவட்டப் பழங்குடிகள்’ எனும் நூலில் தி. கோவிந்தன் குறிப்பிடும் தோற்றத் தொன்மம்: ‘முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவைஷ்ணவ கோத்திரத்தைச் சேர்ந்த காராளர் சிலர் வசித்து வந்தனர். இவர்கள் குலதெய்வம் கரிராமன் என்னும் கரிவரதராஜப் பெருமாள். இந்தக் குலதெய்வத்தை பூசாரிகள் (இருளர்) தூக்கிச் சென்றனர். சாமி கனவில் தோன்றி இச்செய்தியைக் காராளருக்குத் தெரிவித்தது. காராளர் ஒன்றுகூடி இறைவனைப் பிரார்த்திக்க இறைவன் அருள்பெற்று உற்சவரை எடுத்துச்சென்ற பூசாரியைப் பின் தொடர்ந்தனர். அவ்வாறு புறப்படும்பொழுது தங்கள் வீட்டில் நல்விளக்கேற்றி, நிறைகுடம் வைத்து ரோஜாப்பூப் போட்டு இறைவனை வழிபட்டுத் தங்கள் மனைவியரிடம் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் நல்விளக்கு அணையும், நிறைகுடம் குறையும், பூ வாடும் என்று கூறிப் புறப்பட்டனர். அவர்களுடன் ஒரு நாயும் புறப்பட்டது. வழியில் பாலாற்றில் வெள்ளம் பெருகி வரவே, நாய் கரை கடக்க மாட்டாமல் வீட்டிற்குத் திரும்பியது. நாய் மட்டும் திரும்பி வரவும் தங்கள் கணவன்மார் வராததையும் கண்ட பெண்கள், தங்கள் கணவன்மார் இறந்ததாகக் கருதித் தீ வளர்த்து இறங்கினர். இந்தச் செய்தியும் சாமி மூலம் அவர்களுக்குத் தெரிந்தது. ஆனாலும் தங்கள் தெய்வத்தை மீட்பதற்காக அவர்கள் மேலே பயணம் செய்தனர். கரிராமன் கோயிலில் (கல்ராயன்) பூசாரிகளுக்கும் காராளர்கட்கும் போர் நடந்தது. பூசாரிகள் இறந்தனர். தெய்வம் தான் அமர்ந்த இடமே பெரிது என்று சொல்லிவிட்டதால் தெய்வத்துடன் காராளர்களும் தங்கிவிட்டனர். பூசாரிகளின் மனைவிமார்களைக் காராளர் மணந்தனர்.’ (தி. கோவிந்தன், 1995: 24-25).
இத்தொன்மங்களிலிருந்து பெறும் செய்திகளின் அடிப்படையில் பின்வரும் பொதுவான கருத்தினை எட்டலாம்.
வ. எண். | மலையாளி பழங்குடியின உடன் பிறந்தோர் | மணம்புரிந்து கொண்ட பெண்கள் | தங்கிவிட்ட மலைகள் |
1 | பெரிய அண்ணன் | கைக்கோளர்குலப் பெண்கள் | கல்வராயன் மலை/ சேர்வராயன் மலை |
2 | நடு அண்ணன் | வேடர் குலப் பெண்கள் | பச்சைமலை |
3 | சின்ன அண்ணன் | பள்ளர்/தேவேந்திர குலப் பெண்கள் | கொல்லிமலை |
இத்தோற்றத் தொன்மங்களிலிருந்து, போர் முதலிய காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து வந்த காராள வேளாளர்கள், கல்வராயன்மலை, பச்சைமலை, கொல்லிமலை பகுதிகளில் வாழ்ந்து வந்த பூர்வ குடியினரை அழித்து அவ்வினப் பெண்களை மணந்ததால் தோன்றிய கலப்பினத்தவரே மலையாளி பழங்குடியினர் என அறியமுடிகிறது. இந்த இடப்பெயர்ச்சி நிகழ்வையே தம் வரலாறாக இம்மக்கள் கூறி வருகின்றனர். இவற்றையொத்த கதைகளும் / தொன்மங்களும் தமிழ்நாடு / இந்தியாவிலுள்ள பல்வேறு சாதிகளிடத்தும் காணப்படுகின்றன.
துணை நூற் பட்டியல்:
1. நசீம்தீன்.பீ., இடுக்கி மாவட்டப் பழங்குடி மக்களின் வழக்காற்றியல், அன்னம், சிவகங்கை, முதற்பதிப்பு-1989.
2. எட்கர் தர்ஸ்டன் தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி-4 (மொ.பெ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு-1993.
3. கோவிந்தன்.கி., தர்மபுரி மாவட்டப் பழங்குடிகள், ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி, முதற்பதிப்பு-1995.
4. தாமரைப்பாண்டியன்.சு., தென்தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம் பெயர்வு, அருள் பதிப்பகம், சென்னை-78, முதற்பதிப்பு-2008.
5. நல்லதம்பி.சி., தமிழகப் பழங்குடி வரலாற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள் புலம், சென்னை-5, முதற்பதிப்பு-2011.
6. பக்தவத்சல பாரதி, தமிழகப் பழங்குடிகள், அடையாளம், புத்தாநத்தம்-621310, விரிவாக்கப்பட்ட முதற்பதிப்பு-2013.
7. Ayyappan.A., Report on the socio-economic conditions of the Aboriginal tribes of the province of Madras, The Commissioner of Museum, Chennai-8, 2000.
தகவலாளர்கள்:
1. செல்லமுத்து, ஆண், 80, பெரியபக்களம், விவசாயம், நாள் 05.01.2014.
2. அழகுமுத்து, ஆண், 30, பெரியபழமலை, விவசாயம், நாள் 13.06.2010.
செவ்வாய், 4 பிப்ரவரி, 2020
செவ்வாய், 1 அக்டோபர், 2019
கருங்காடு(கெராங்காடு),கல்வராயன்மலை கல்வெட்டு
மலைக் கவுண்டர்களின் குல அமைப்பு
மலையில் வாழும் நம் காராள இனத்தில் வீடு(எ.கா :- காடை வீடு, தும்புடையான் வீடு,அரையன் வீடு,கரியன் வீடு போன்று இன்னும் பல) என்னும் பங்காளி உறவுமுறை பற்றி எல்லோருக்கும் தெரியும்.ஆனால் நமக்கு குலம் என்னும் அமைப்பு முறை இருந்தது,இன்று அது அழிந்து விட்டது. குறிப்பிட்ட பல வீடுகள்(பங்காளி உறவுமுறை) சேர்ந்தது தான் ஒரு குலம்.சிவனை குலதெய்வமாக பல வீடுகள் சேர்ந்த ஒரு குலம் வழிபடும்.எடுத்துக்காட்டாக காடை வீடு,அய்யனார் வீடு என்று இன்னும் பல வீடுகள் சேர்ந்து வரதராஜ பெருமாள் சாமியை குலதெய்வமாக கும்பிடுவர்.அதே போன்று சிவனையும் சில வீடுகள் சேர்ந்து குலதெய்வமாக கும்பிடுவர்.காளி சாமியையும் சில வீடுகள் சேர்ந்து கும்பிடுவர்.அதனால் தான் இவ்வினத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் குலசாமி,வீட்டு சாமி என இரு தெய்வங்கள் இருக்கும்.வீட்டு சாமி என்பது அனைவருக்கும் புடவைக்காரி அம்மன்(பெரியாண்டிச்சி) ஆக தான் இருக்கிறது.குலசாமி மட்டும் மாறுபடும்.
ஒவ்வொரு குலத்துக்குள்ளும் திருமணம் உறவு நடைபெறாது,அதிலிருக்கும் வீடுகள் அனைத்தும் பங்காளி உறவுமுறையை குறிக்கும்.சிவனை குல தெய்வமாக கும்பிடும் குலம் பெருமாளை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும் அல்லது காளியை குலசாமியாக கும்பிடும் குலத்தோடு திருமணம் வைத்துக்கொள்ளும்.இப்படி இரு வெவ்வேறு குலங்களுக்குள் தான் திருமணஉறவு நடைபெறும்,ஒரே குலத்துக்குள் திருமணம் நடைபெறாது,ஏனெனில் அவர்கள் பங்காளி என்னும் உறவுமுறையில் இருப்பார்கள். ஒரு குடும்பம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வாழும்போது,அது சில தலைமுறைகள் கழித்து தன் குல அமைப்பை மறந்து வீடு பெயர் மட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொண்டு பெண் தேடும் போது சில நேரம் ஒரே குலத்தில் வரும் வீட்டையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.பின் பங்காளி என்பவன் இத்திருமண முறையால் மாமன் மச்சான் உறவு முறையில் வந்து விடுகிறான்.இப்படி தன் குலத்தை மறந்து ஒரே குலத்தில் திருமணம் செய்து இன்று குல அமைப்பு மறந்து வீடு அமைப்பு முறை மட்டுமே மலையாளி கவுண்டர் இனத்தில் வழக்கத்தில் உள்ளது. நம் முன்னோர்கள் வகுத்த இந்த குல அமைப்பு மறைந்தாலும் உண்மையான பங்காளி உறவு முறை கொண்ட, வீடு அமைப்பு முறையில் இக்காராள மக்கள் சரியாக இருக்கிறார்கள்.அதாவது தும்புடையார் வீடு ஆண் ஒருவன் அதை தவிர்த்து மற்ற வீடுகளான அரையர் வீடு,பூச்சு கவுண்டர் வீடு போன்று மற்ற வீடுகளில் பெண் எடுப்பானே தவிர தும்புடையார் வீட்டிலே பெண் எடுப்பதில்லை.
தற்ப்பொழுது என்ன குலம் என்ன வீடு என்று கேட்பது மறைந்து என்ன வீடு என்று கேட்டபது மட்டும் வழக்கத்தில் இருக்கிறது.வீடு என்பது இப்பொழுது குலமாக மாறி வருகிறது.அரையர் வீடு, தீக்கடையார் வீடு என்றில்லாமல் அரையர் குலம், தீக்கடையார் குலம் என்று மாறி வருகிறது.
வெள்ளி, 4 ஜனவரி, 2019
கரிராமன்(Kari Raman) என்கிற கரிவரதராஜ(Kari Varatharaja) பெருமாள்
கரிராமன் என்கிற கரி வரதராச பெருமாள்
கரிராமன் என்னும் கடவுள் மலையாள கவுண்டர் என்னும் காராளர் மக்களால் வணங்கப்படும் முதன்மை கடவுள் ஆகும்.இவ்வினத்தில் ஒரு குறிப்பிட்ட குலம் இக்கடவுளை குலசாமியாக வணங்குகிறது.இக்கடவுள் பெயர் கரிவரதராஜ பெருமாள் என்றாலும் நாயக்கர் காலத்தில் தான் கரிராமன் என்ற பெயர் வந்திருக்கும் என நான் கருதுகிறேன்.கிருஷ்ணகிரிக்கு உட்பட்ட ஒரு கரிராமன் கோவில் ஜாகிர்தார் முறை காலத்தில் கட்டப்பட்டுள்ளது,அதில் இருக்கும் மூலவர் கரிவரதப்பெருமாள் ஆயினும் கரிராமன் என்றே அழைக்கப்படுகிறார்.பெருமாள் ஏன் ராமன் என அழைக்கடுகிறார் என தெரியவில்லை.இவ்வின மக்களை கேக்கும் பொழுது ராமனும் பெருமாள் அவதாரம் என்பதால் அப்படி அழைக்கிறோம் என்கின்றனர்.
மலையாளக்கவுண்டர்கள் பிரிந்து இடம்விட்டு இடம் செல்லும் போது தன்னோடு குலசாமியையும் கொண்டுசெல்கின்றனர்.அப்போது பொருளாதார சூழ்நிலை காரணமாக சிலை வைக்க முடியாமல்,கரிராமனுக்கு பதிலாக கற்க்களையே வைத்து வழிபடுகின்றனர்.பின் சில தலைமுறைக்கு பின்னால் கரிவரதராச கடவுளின் சிலை வடிவத்தை மறந்து,கோவில் கட்டி சிலை வைக்கும் போது ராமன் சிலையை வைத்து விடுகின்றனர்.இப்படி அறியாமையில் அமர்ந்த நிலையில் இருக்கும் விஷ்ணு லட்சுமி சிலைக்கு பதிலாக,கரிராமன் என்று தவறான சிலையை(ராமன் சிலையை) வைத்து வழிபடுகின்றனர்.
ஆனால் இன்றும் மலையாளக் கவுண்டர் இனத்தின் ஆதிக்குடியேற்றத்தின் போது ஏற்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் ஆதிக்கோவில் கருமந்துறையில் அமைந்துள்ளது.அங்கு கரிராமன் என்ற கரிவரதன் தானும் தன் இரு மனைவியருடன் அமர்ந்தநிலையில் காட்சித் தருகிறார்.
மலையாள கவுண்டர்களைப்போல் சேலம் பகுதியில் வாழும் நாட்டுக்கவுண்டர்கள் கரிவரதனை கரிய மாணிக்கப்பெருமாள் என்ற பெயரிலும்,ஆத்தூரில் வாழும் வேளாளர்கள் ஆத்தூர் கரிவரதராச பெருமாளையும் குலசாமியாக வழிபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.